உலகம் உருண்டை : சேட்டன்கள் மனதை கட்டிப் போட்ட தமிழகத்தின் சாய் பல்லவி!

ந்தகால பத்மினி, இடைக்கால ரேவதி, தற்போதைய நயன்தாரா வரை தமிழ் திரையுலகில் மலையாள நடிகைகளின் ஆக்கிரமிப்புதான். ஒரு காலத்தில் தமிழ் படத்தில் நடிக்க தமிழ் நடிகைகள் கிடைக்கவில்லையா? அத்தனையும் கேரள இறக்குமதிதானா? என்று தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்து போய் கிடந்தார்கள்.

தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்தி மாலா பாலி, ஹேமமாலினி, ரேகா, மீனாட்சி சேஷாத்திரி, ஸ்ரீதேவி போன்றவர்கள் ஹிந்தி திரையுலகை கட்டிப் போட்டிருந்தாலும், மலையாள கரையோரத்துக்கு தமிழ் நடிகைகள் ஒதுங்கியது இல்லை.

தற்போது முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த நடிகை ஒருவர், கேரள மக்களின் மனதை கொள்ளையடித்து கொண்டிருக்கிறார். அண்மையில் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் 'பிரேமம்' மலையாள படம் 150 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியர் வேடத்தில், தமிழ் பெண்ணாகவே 'மலர்' என்ற கேரக்டரில் வந்து கலக்கும் சாய் பல்லவி தமிழகத்தை சேர்ந்தவர். 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி, கோவையில் வளர்ந்தவர். தற்போது ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் செந்தாமரைக்கண்ணன்- ராதா . இவருக்கு ஒரு தங்கையும் உண்டு. அவரது பெயர் பூஜா.

உங்களில் அடுத்த பிரபு தேவா யார்? நிகழ்ச்சியில் சாய் பல்லவி ஆடிய நடனம், மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து சாய் பல்லவியின் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்பு கொள்ள அல்போன்ஸ் புத்திரன் முயற்சித்துள்ளார். சாய் பல்லவியின் இன்பாக்சில் வந்து, 'நான் உங்களிடம் பேச விரும்புகிறேன் என்று  அசோக் புத்திரன் கூற, சாய் பல்லவி அவருக்கு பதிலளிக்கவில்லை. 

ஏனென்றால் அப்போதுதான் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளி வந்த 'நேரம்' படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய இயக்குனர் நம்மிடம் பேச என்ன இருக்கிறது ? யாரோ நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று  அல்போன்ஸ் புத்திரனுக்கு சாய் பல்லவி அப்போது பதில் கூறவில்லை. 

பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், விடுமுறையில் சாய் பல்லவி ஊருக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் சாய் பல்லவியின் அம்மாவுக்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம் இருந்து போன் வந்துள்ளது. அப்போதுதான் சாய் பல்லவிக்கு தான் செய்த தவறு புரிந்தது. உடனடியாக போனை வாங்கி பேசியுள்ளார். மேலும் 'நேரம் ' படத்தின் வெற்றிக்கும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கோவை வந்த அல்போன்ஸ் புத்திரன், சாய் பல்லவியின் பெற்றோரை சந்தித்து அனுமதி வாங்கியுள்ளார். முதலில் சாய் பல்லவியின் தந்தை செந்தாமரைக் கண்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அல்போன்ஸ் புத்திரன் சொன்ன கதை சாய் பல்லவிக்கு பிடித்திருந்தது. இதையடுத்து மகளுக்காக அவர் 'பிரேமம் ' படத்தில் நடிக்க அனுமதி கொடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு  ஜுலை மாதம் 'பிரேமம்' படத்தின் படபிடிப்பு தொடங்கியது. கடந்த  மே மாதம் படம் வெளியான இந்த படம் கேரள திரையரங்குகளில் இன்று வரை ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முகத்தில் பருக்களோடு தேவையான மேக்கப்போடு நடித்த சாய் பல்லவி சேட்டன்கள் மனதை கட்டி போட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். அதோடு 'மலரே நின்னே காணாதிருந்தால்...'' என்ற ஒரே பாடல் யூடியூப்பில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 

தான் நடித்த  முதல் படத்திலே சேட்டன்கள் மனதில் இடம் பிடித்து விட்டு தற்போது படிப்பை பார்க்க ஜார்ஜியா சென்று விட்டார் சாய் பல்லவி. சேட்டன்கள் மனதுதான் லபோ திபோவென்று அடித்து கொண்டிருக்கிறதாம். சோ... உலகம் உருண்டை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!