அனுஷ்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய ராஜமௌலி!

ருத்ரமாதேவி படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குணசேகர் , துணை தயாரிப்பாளர் நீலிமா குணா மற்றும் விநியோகஸ்தர் தில் ராஜு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க, தெலுங்கானாவின் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், ருத்ரமாதேவி படத்திற்கு வரிவிலக்கு அறிவித்துள்ளார்.  ருத்ரமாதேவியாக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள இப்படம் காகதிய வம்சம் பற்றியும், வீர மங்கை ருத்ரமா தேவியின் வாழ்கை வரலாறு என்பதாலும், மேலும் தெலுங்கானாவின் வரலாறு, கலாசாரம் இவற்றைப் பிரதிபலிக்கும் படமாக உள்ளதால் இதற்கு வரிவிலக்கு செய்யப்பட்டிருகிறது என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இப்படம் இந்தியாவின் முதல் வரலாற்று ஸ்டீரியோஸ்கோபிக் 3D படம் என்ற பெருமைக்குரியது. 80 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை முறையே தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள். மேலும் இந்தி, கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்தும் வெளியிடுகின்றனர். இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன் , ராணா டகுபதி , கிருஷ்ணம் ராஜு , நித்யா மேனன், கேத்ரீன் தெரசா போன்றோரும் நடித்துள்ளனர்.

தெலுங்கானாவில் 400 திரையரங்குகளில் இன்று ரிலீஸ் ஆகும் இப்படம், தமிழில் அக்டோபர் 16 அன்று ரிலீஸாக இருக்கிறது. பாகுபலியைப் போன்ற ருத்ரமா தேவியும் பெரும் வெற்றி பெறும் என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாகுபலி புகழ் ராஜமௌலி இப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு தேசத்தைப் பற்றிய படம் என்பதால் ஆந்தர பிரதேசத்திலும் இப்படத்திற்கு வரிவிலக்கு செய்ய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

- பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!