சென்னை மக்களுக்காக உண்டியல் ஏந்தி வசூல் செய்த தெலுங்கு நடிகர்கள்

சென்னையில் ஏற்பட்ட தொடர் கனமழையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக தெலுங்கு நடிகர்கள் உண்டியல் ஏந்தி நிதி திரட்டியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் நிவாரண நிதியும், பொருட்களும் சென்னை, கடலூரை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன. இதில் தெலுங்கு நடிகர்களான அல்லுஅர்ஜூன், மகேஷ்பாபு உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இன்னும் பல தெலுங்கு நடிகர்கள் ஒருங்கிணைந்து சென்னைக்கு உதவுவதற்காக, “ மனமட்ராஸ்கோஷம்” (நம்ம சென்னைக்காக) என்ற பெயரில் நிதி மற்றும் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து வருகின்றனர். இதில் ராணா, நானி, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில நடிக நடிகைகள் ஐதராபாத்தின் முன்னணி மால்களில் உண்டியல் ஏந்தி வசூல் செய்திருக்கின்றனர்.

மேலும் தெலுங்கு மக்களை நிவாரணப் பொருட்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். குவிந்துவரும் நிவாரணப்பொருட்களை ராமநாயுடு ஸ்டூடியோவிற்கு வரவைத்து அங்கிருந்து பேக் செய்து சென்னைக்கு அனுப்பிவருகின்றனர்.  

தெலுங்கு நடிகர் ராணா தனது டுவிட்டரில், வெள்ள நிவாரணத்துக்கு உதவ விரும்புவோர் காசோலைகளை “ராமாநாயுடு அறக்கட்டளை” என்ற பெயருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். கிடைக்கும் நிவாரணப் பொருட்கள் உடனுக்குடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

  
 







 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!