சந்தனகடத்தல் வீரப்பனின் படத்திற்குத் தடை வருமா?

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிவரும் படம் கில்லிங் வீரப்பன். இப்படத்தை சர்ச்சை நாயகன் ராம்கோபால்வர்மா இயக்கிவருகிறார். இப்படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பெங்களூரை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் ‘கில்லிங் வீரப்பன்’ என்ற தலைப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் தமிழ் மக்களை தரம் தாழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பாக குரும்பா என்ற மலைசாதிப் பெண்கள் ஆயுதங்களைத் தூக்கியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் விளம்பரக் காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வெளியாகியுள்ளது. அதில், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் (மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன்), போலீஸ் அதிகாரி செந்தாமரை கண்ணன் என்ற பெயரில் இந்திய அதிரடிப்படை தலைமை தாங்கி, வீரப்பனைப் பிடித்ததாகக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் முழு விளம்பரக் காட்சியும் வெளியாகியுள்ளது. அதில் பல பொய்யான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில், திடீரென இந்தத் திரைப்படம் வருகிற ஜனவரி 1-ந்தேதி நாடு முழுவதும் வெளியாகும் என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வீரப்பன் ஒரு கொடூர கொலைகாரன் என்பதைப் போலவும், 184 பொதுமக்கள், 97 போலீஸ்காரர்கள், 900 யானைகளைக் கொன்றதாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில மத ரீதியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதனால், கண்டிப்பாக மத ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும், இந்தப் படத்தின் இயக்குநர் ராம்கோபால் வர்மா, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விதமாகக் காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் வீரப்பன் மனைவி பலரைக் கொலை செய்வது போல, படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. மேலும், இந்தப் படத்தில் தமிழக போலீசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிரான கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. 

இந்தப் படத்துக்கு சென்னையில் உள்ள தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழை வழங்கியுள்ளது. எனவே, பொய்யான தகவல்களுடன் இந்தப் படம் வெளியானால், தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்.

இந்தப் படத்துக்கு எப்படி யு சான்றிதழ் வழங்கப்பட்டது? என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்த தமிழக உள்துறை (சினிமா) செயலாளர், சென்னையில் உள்ள தணிக்கை வாரியம் மண்டல அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.

என்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாயக்கன்பட்டியை அடுத்துள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்த பா.பன்னீர்செல்வி என்பவர் ஐகோர்ட்டில் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!