முதன்முறையாக பெரியஹீரோவை இயக்கும் ராம்

கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற  படங்களைத் தந்த இயக்குனர் ராம் வசந்த் ரவி-ஆண்ட்ரியா நடிப்பில் தரமணி என்ற படத்தை இயக்கி வந்தார். தரமணி படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் , அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் ராம்.

இதுவரை முன்னணி கதாநாயகர்களுடன் இணையாது இருந்து ராம், தனது அடுத்த படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் இணைகிறார். இப்படத்திற்கு "பேரன்பு" என்று பெயரிடப்பட்டுள்ளது. ராமின் கற்றது தமிழில் நடித்த அஞ்சலி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார். வழக்கமாக தன்  படங்களில் குழந்தை நட்சத்திரங்களைப் பயன்படுத்தும் ராம், இப்படத்தில் தங்கமீன்கள் படத்தின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற சாதனாவை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவுள்ளார்.காதலை மையமாக கொண்டு இப்படம் தயாராகவுள்ளது.

பேரன்பு படத்தின் படபிடிப்பு வரும் ஜனவரி 6 முதல் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கவுள்ளது. 'தளபதி, அழகன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து வந்த மம்முட்டி சில வருடங்களாக மலையாள சினிமாக்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் அழுத்தமான கதாபாத்திரங்களைக் கொண்டு வித்தியாசமான படங்களை இயக்கிவரும் ராமின் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தே.சண்முக பாண்டியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!