சமூகவலைதளத்தில் மஞ்சுவாரியர் சந்தித்த சிக்கல்

ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தின் தமிழாக்கம். ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் மஞ்சுவாரியர். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப்பை மணந்து பிறகு விவாகரத்து பெற்றவர். விவாகரத்துக்குப் பிறகு அவர் நடித்த படம்தான் ஹவ் ஓல்ட் ஆர் யு. அதைத் தொடர்ந்தும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் நடித்து வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் பிரமோஷனுக்காக, நடிகர் சுராஜ்வெஞ்சரமூட்  உடன், தான் இருக்கும் புகைப்படத்தை  தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.  அந்த புகைப்படத்தின் கீழே, ஆபாசமான முறையில் ஒருவர் கமென்ட் செய்தாராம். அதையடுத்து, அம்மாநில டி.ஜி.பி சென் குமாரிடம் இது குறித்து  மஞ்சு வாரியர்  புகார் செய்துள்ளார்.

அந்த, ஆபாச கமென்ட்டை எழுதிய நபர்,  கொச்சியில் பயிற்சி போலீஸ்  அதிகாரியாக  பணிபுரியும்  ரெஜூ மோன் என்பது தெரிய வந்ததை அடுத்து, அவர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மஞ்சு வாரியார் “பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரியே இது போன்ற செயலில் ஈடுபட்டதால், புகார் அளிக்க வேண்டி வந்தது” எனக் குறிப்பிட்டார்.

“பொறுப்புள்ள எந்த அதிகாரியும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த நடவடிக்கையைப் பழி வாங்கும் விதமாகப் பார்க்காமல், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்தும் ஒரு  நடவடிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் துணிச்சலாகச் செயல்பட்ட மஞ்சுவாரியரை பலரும் பாராட்டுகிறார்களாம்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!