காஜல் அகர்வால் பட்டையைக் கிளப்புவாரா? பீதியைக் கிளப்புவாரா?

தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 40 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதுவரை தனது அழகு, நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வந்த இவர் தற்போது தனது குரலின் மூலம் அனைவரையும் வசியப்படுத்த உள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் "சக்ரவியூகா" படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் காஜல். படத்தின் தயாரிப்பாளர் என்கே லோஹிதின் வேண்டுதலுக்கு இணங்க காஜல் இப்பாடலை பாடிக்கொடுத்துள்ளார். லோஹித்தும், காஜலும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டூயட் பாடலாக அமைந்துள்ள இப்பாடலில் புனித் ராஜ்குமார் தனது பகுதிகளை முன்னதாகவே பாடி முடிக்க, காஜல் தனது பகுதியை நேற்று பாடிமுடித்துள்ளார்.

சக்ரவியூகா, புனித் ராஜ்குமாரின் 25வது படம் என்பதால், படத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார் என்கே லோஹித்.இதே படத்தில் இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் இதற்கு முந்தைய புனித் ராஜ்குமாரின் படத்தில் சிவகார்த்திகேயன் பாடினார். தனது ஒவ்வொரு படத்திலும் மற்ற மொழி நடிகர்களை பாட வைத்து புனித்  புது ட்ரெண்டை உருவாக்கி வருகிறார். 

தற்போது காஜல் அகர்வாலும் இப்படத்தில் பாடியுள்ளது படத்திற்கு மற்றொரு சிறப்பாக அமைந்துள்ளது. எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை எடுத்த சரவணன் இப்படத்தை இயக்குகிறார். காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பிரம்மோற்சவம் மற்றும் பவன் கல்யாணுடன் சர்தார் கப்பர் சிங்க் படங்களில்  நடித்து வருகிறார்.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!