மலையாள சினிமாவின் டாப் ஹீரோ, ஹீரோயின் யார்? யார்?

மலையாள மொழியில் வெளியாகும் படங்களுக்கென்று கேரளாவைத் தாண்டியும் நிறைய ரசிகர்கள் குவிந்துகிடக்கின்றனர். கேரளத்தின் கவித்துவமான படங்களுக்கென்று காத்துகிடக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை குஷிப்படுத்த இன்னும் பல புதுமையான கதை களங்களுடன் 2016ல் பல படங்கள் வெளியாகவிருக்கின்றன. மலையாளத்தில் நமக்குப் பிடித்த நடிகர்கள், கடந்த வருடம் நடித்த படங்களும், இந்த வருடம் வெளியாகவிருக்கும் படங்களும் பற்றியான சிறு தொகுப்பு,

ஹீரோஸ்:

மோகன்லால்:

2015 வருத்தமளிக்கும் வருடமாகவே மோகன்லாலுக்கு அமைந்தது. சென்ற வருடம் வெளியான 5 படங்களில் மஞ்சு வாரியருடன் நடித்த “என்னும் எப்பொழும்” மட்டுமே வெற்றிபெற்றது. “த்ரிஷ்யம்” மூலம் ஐம்பது கோடி வசூல் சாதனை படைத்த மோகன்லாலுக்கு 2016ல் ப்ரியதர்சன் இயக்கத்தில் “ஒப்பம்” மற்றும் வைசாக் இயக்கத்தில்  “புலிமுருகன்” படமும் வெளியாகவிருக்கிறது. இவ்விரு படங்களைத் தவிர பிரஜித் இயக்கத்திலும், ஜிபு ஜாக்கப்பின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 300க்கும்  மேல் படங்களில் நடித்துள்ள இவர், தெறி ஹிட் கொடுக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது சோகமான செய்தி.

மம்முட்டி:

தமிழில் கமல் - ரஜினி போன்ற காம்போ தான் மலையாளத்தில் மோகன்லால்-மம்மூட்டி. மம்முட்டிக்கு கடந்த வருடம் ஐந்து படங்கள் வெளியானது. அனைத்துப் படங்களுமே போட்ட பணத்தை எடுத்தது. நயன்தாராவுடன் இவர் நடித்த “பாஸ்கர் தி ராஸ்கல்” படம் பக்கா ஹிட். தற்போது இவரின் மகன் துல்கர் ஹிட் படங்கள் கொடுத்தாலும் அவருக்கு போட்டியாக கெத்து காட்டுகிறார் மம்முட்டி.  2016ல் 9 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் மம்முக்கா. மம்முட்டி - நயன்தாரா ஜோடியில்  ஜனவரியில் “புதியநியமம்”, தமிழில் இயக்குநர் ராம் இயக்கத்தில் “பேரன்பு”, தெலுங்கில் கீரவாணி படமென அனைத்து மொழிப் படங்களிலும் பிஸியாக இருக்கிறார் மம்முட்டி.

நிவின்  பாலி:


அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மலையாளத்தில் ஹாட் & கூல் பாய் நிவின்பாலி. நியூ ஜெனரேஷன் மோகன்லால் என்று கணிக்கப்படும் நிவினுக்கு கடந்த வருடம் வேற லெவல். அமலா பாலுடன்  “மிலி” படத்தில் துவங்கிய வெற்றி, “ஒரு வடக்கன் செல்ஃபி”யில் தொடர்ந்து, இன்று பிரேமம் வரையிலும் தொடர்கிறது.  இதுவரை பிரேமம் சென்னை திரையரங்கில் 220 நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. 2016ல் போலீஸ் அதிகாரியாக “ ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ” படத்தில்  மிரட்டவும் இருக்கிறார். அதுமட்டுமின்றி வினித் ஸ்ரீநிவாசன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.

ப்ரித்விராஜ்:

நடிப்பிற்காக தன்னையே தியாகம் செய்யும் கலைவெறியர் ப்ரித்வி. இவர் நடிப்பில் கடந்தவருடம் எட்டுப் படங்கள் ரிலீஸாகியிருக்கிறது. இதில்  “என்னுநின்டே மொய்தீன்”,“அமர் அக்பர் அந்தோணி”, “அனார்கலி”, “பிக்கெட் 43”, “இவடே” உள்ளிட்டப் படங்கள் மாஸ் ஹிட்.  காதல், ஆக்‌ஷன், காமெடி என்று அனைத்து
வெரைட்டியிலும் படங்களை அசால்ட்டாக கொடுத்துவிட்டார். இந்த அசாத்திய மனிதரின் கால்ஷீட் 2018 வரை ஹவுஸ் ஃபுல் பாஸ்.

துல்கார் சல்மான்:

மம்முட்டியின் மகன் என்னும் அறிமுகத்துடன் திரைத்துறையில் நுழைந்த துல்கர் அடுத்தடுத்து மலையாளம், தமிழ் என்று இவரின் தொடர் வெற்றி நட்சத்திர இருக்கையில் இவரை அமர்த்தியுள்ளது. கடந்த வருடம் வெளியான “100 டேஸ் ஆஃப் லவ்”, “ஓகே கண்மணி” , “சார்லி” மூன்று படங்களுமே ஹிட். 2016ல் மலர் டீச்சர்  சாய்பல்லவியுடன் “காளி” படத்திலும், ராஜேஷ்ரவி இயக்கத்திலும் பட்டைய கிளப்ப ரெடியாகிவிட்டார் துல்கர்.

பகத் ஃபாசில்:

இவர் ஹிட் கொடுத்த கடைசிப் படம் “பெங்களூர் டேஸ்”. நல்ல கதைக்களத்துடன் களமிறங்கும் பகத்திற்கு வசூல் சாதனை கிடைக்காதது மட்டுமே வருத்தப்படும் செய்தி.  இந்த வருடம் வெளியாகவிருக்கும்  நான்கு படங்களும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்தால் விட்ட இடத்தைப் பிடித்துவிடுவார்.

ஹீரோயின்ஸ்:

பார்வதி:

உலகநாயகனுடன் “உத்தம வில்லன்” , பிரித்விராஜுடன் “என்னு நின்டே மொய்தீன்”, துல்கருடன் “சார்லி” என நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து ஸ்கோர் செய்தவர். 2016ல்  பாசிலுடன் “விர்ஜின்”, மலையாளத்தில் தான் நடித்த அதே கதாபாத்திரத்தை தமிழில் பெங்களூர் நாட்களிலும் என தேர்ந்து எடுத்து  நடிக்கிறார்.

நித்யா மேனன்:

ஓகே கண்மணி, காஞ்சனா2, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, 100 டேஸ் ஆஃப் லவ் என்று தாறுமாறு ஹிட் படங்களை எல்லா மொழிகளும் கொடுத்தவர் நித்யாமேனன். இதுவரை மலையாளப்படங்களில் கமிட் ஆகவில்லையென்றாலும் தமிழில் சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன், சுதிப்புடன் தமிழ்,தெலுங்கு படமென அம்மணி நடிப்பில் பிஸி. எல்லாமொழியிலும் ஒரு ரவுண்டு வரத் தயாராகியுள்ளார் நித்யா.
 
மஞ்சு வாரியர்:

ஐந்து வருடங்களுக்குப் பின் 2014ல் “ஹவ் ஓல்டு ஆர் யூ” (36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படம் மூலம் மலையாளத்தில் மறுபரிமாணம் எடுத்துள்ளார். 17 வருடங்களுக்கு பின் மோஹன்லாலுடன் சேர்ந்து நடித்து வெளியான “என்னும் எப்பொழும்”நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியல் லைப்பில் ஸ்டார் ஜோடியான திலிப்-மஞ்சு வாரியர் சமீபத்தில் பிரிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016ல் ராஜேஸ் பிள்ளை மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

மலர் டீச்சரும் செலினும்:

இளசுகளின் மனதை ஒரே படத்தில் கவர்ந்திழுத்த கேரளத்து பெண்குட்டிகள் மலர் (சாய்பல்லவி), செலின் (மடோனா சபாஸ்டியன்).  ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படித்துக் கொண்டே துல்கருடன் காளியில் நடித்துவருகிறார் சாய்பல்லவி. திலிப்புடன் “கிங் லயர்”, தமிழில் விஜய்சேதுபதி ஜோடியாக “காதலும் கடந்துபோகும்” உள்ளிட்ட படங்கள் மடோனா சபாஸ்டியனுக்கு வெளியாகவிருக்கிறது.

சினிமாப் பிரியர்களுக்கு 2016ல் வித்தியாசமான கதைத்தளங்களில், வித்தியாசமான அனுபவங்களைத் தரத் தயாராகிவருகிறது மலையாள சினிமா. 

ச.ஸ்ரீராம் இரங்கநாத், மாணவ பத்திரிகையாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!