பாபநாசம் இயக்குநரின் அடுத்த பிளான்?

பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் மலையாளத்தில் அடுத்ததாக மம்முட்டி, நயன்தாராவை வைத்து இயக்கப் போவதாக வந்த செய்தியை  மறுத்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இவர் இயக்கிய த்ரிஷ்யம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இப்படம் தெலுங்கிலும், கன்னடத்திலும், அதற்கு பின் 2015ல் தமிழில் கமலுடன் இணைந்து பாபநாசம் என்ற பெயரில் இப்படம் வெளியானது. கமல் கூட்டணியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற, பின் ஹிந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. த்ரிஷ்யம் அனைத்து மொழிகளிலுமே வெற்றி அடைய ஜீத்துவின் அடுத்த படம் என்ன, யாருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதன் பிறகு மலையாளத்தில் தான் எடுத்த மெமரீஸ் படத்தினை தமிழில் அருள்நிதி நடிப்பில் ஆறாது சினம் என்ற பெயரில் எடுத்துள்ளார். இப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஜீத்து மம்முட்டி, நயன்தாரவை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் ஜீத்து இதனை மறுத்துள்ளார். தான் மம்முட்டியை படத்திற்காக சந்திக்க நினைத்ததாகவும், ஆனால் அதற்கான சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கவில்லை எனவும், மேலும் இப்படத்தில் அவர் நடிக்க ஒத்துக்கொள்ளும் முன் அவருக்குக் கதை பிடிக்க வேண்டும் என்றும் இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். ஜீத்து கமலுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் எடுக்கப்போவதாகவும் செய்திகள் வலம் வருகின்றன.

இது குறித்து கூறுகையில் நாங்கள் சாதரணமாக சந்தித்த நிகழ்வினை மக்கள் இவ்வாறு வெளியிட்டுவிட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது மலையாளத்தில் பிரிதிவிராஜுடன் ஊழம் எனும் படத்தினை ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்க உள்ளதாகவும், அதன் பிறகு காவ்யா மாதவனை வைத்து பெண்கள் சார்ந்த படம் ஒன்றினை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மோகன்லால், கமல் என இரு பெரும் நடிகர்களுடன் கைகோர்த்த ஜீத்து ஜோசப் , மம்முட்டியுடனும் இணைவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் மம்முட்டியை வைத்து இயக்க அவர் தயாராக இருப்பது தெரிகிறது. இனி பச்சை கொடி காட்ட வேண்டியது மம்முட்டியே.

-பிரியாவாசு-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!