ஒரு படம் பள்ளிப்பாடமானது - ஆந்திராவில் நடந்த ஆச்சரியம்

சினிமாவின் வாயிலாக மக்களின் மனதில் கருத்துகளை பதிய வைத்த படங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் சமீபத்தில் ஒரு படம் கருத்து கூறியதோடு மட்டும் நில்லாமல் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. கிராமங்களைக் காப்பாற்றுங்கள், கிராமங்கள் மூழ்கிக் கொண்டிருகின்றன என்கிற சமூக ஆர்வலர்களின் கதறல்களை செயல்படுத்தி காட்டியது அப்படம். தற்போது அப்படத்திற்கு புத்தகம் வாயிலாக அழியாதொரு புகழைச் சேர்த்திருக்கிறது கல்வி அமைச்சகம். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரட்டல சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ஸ்ரீமந்துடு. இப்படம் தமிழில் செல்வந்தன் என்ற பெயரில் வெளியானது.

ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரையும் இப்படம் கவர தமிழ் மட்டும் தெலுங்கு என இரண்டிலுமே மிகப் பெரிய வெற்றியடைந்தது படம். 250 கோடி வசூல் சாதனை புரிந்து பாகுபலிக்கு அடுத்தபடியாக தெலுங்கிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது . இப்படம் முழுவதும் கமர்ஷியலாக எடுக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் வாயிலாக கிராமங்களை தத்தெடுப்பது என்ற புதிய கருத்தினை பதிவு செய்திருந்தார்கள். படத்தின் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணம். இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள் என பலரும் தெலுங்கானாவில் உள்ள பல கிராமங்களை மேம்படுத்துதல் மற்றும் தத்தெடுப்பை ஊக்குவிக்க ஆரம்பித்தனர்.

மகேஷ் பாபுவும் தனது தந்தை கிருஷ்ணா பிறந்த ஊரான பூரிபாலம் மற்றும் சித்தாபுரம் போன்ற கிராமங்களைத் தத்தெடுத்தார். ராஜமௌலி, ராம் கோபால் வர்மா போன்ற சினிமா ஜாம்பாவான்களின் பாராட்டுதல்களையும் பெற்றது ஸ்ரீமந்துடு. சமீபத்தில், எம்மிகனுர் எனும் ஊரில் உள்ள லக்ஷ்மன் தியேட்டரில் இப்படம் தனது 200வது நாளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தனை பெருமைகளையும் தாண்டி தற்போது இப்படத்திற்கு கூடுதலாக மற்றுமொரு பெருமை சேர்ந்துள்ளது. இப்படத்தின் கதை 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. ஸ்ரீமந்துடு படத்தின் கதை மாடல் ரிவ்யூ ஆப் ஸ்ரீமந்துடு என்ற தலைப்புடன் 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கிராமங்களைத் தத்தெடுப்பது பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தவே இந்த முயற்சி. இதனால் ஸ்ரீமந்துடு படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

-பிரியாவாசு -

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!