விருது பெறும் தகுதி பிரேமம் படத்துக்கு இல்லை - நடுவர் குழு தலைவர் விளக்கம்!

கேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான  “மாநில திரைப்பட விருதுகள்” செவ்வாயன்று அறிவிக்கப்பட்டன. கேரள அரசால்  அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதில் ஒரு விருது கூட பிரேமம் படம் பெறவில்லை.

சிறந்த நடிகராக துல்கர் சல்மான், சிறந்த நடிகையாக பார்வதி ஆகியன உட்பட சார்லி படம் எட்டு விருதுகளையும், என்னுநின்டே மொய்தீன் படம் ஏழு விருதுகளையும் அதிகப்படியாக பெற்றுள்ளது. இந்நிலையில் அதிகப்படியான வசூல் சாதனையும், வெற்றிப்படமாகவும் சென்ற வருடம் கொடிகட்டிப் பறந்த ப்ரேமம் படத்திற்கு ஏன் ஒரு விருதுகூட கொடுக்கப்படவில்லை என்பதே இணையத்தில் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகிவருகிறது.

இந்நிலையில் பிரேமம் படத்துக்கு விருது வழங்கப்படாததற்கு என்ன காரணம் என்று கேரள மாநில விருதுகள் நடுவர் குழுவின் தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுவதாவது, “ "'ப்ரேமம்' சிறந்த பொழுதுபோக்குப் படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாநில விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கும்போது சில அளவுகோல்கள் உள்ளன. அந்த அளவு கோல்களுக்கு ஏற்ப 'ப்ரேமம்' இல்லை ஏனென்றால் அந்தப் படத்தின் உருவாக்கம் அவ்வளவும் கச்சிதமாக இல்லை.

இதற்கு அர்த்தம் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கு படம் எடுக்கத் தெரியாது என்பது அல்ல. அவரது முந்தைய படமான ‘நேரம்’ கச்சிதமான படம். ஆனால் 'ப்ரேமம்' படத்தை பார்க்கும்போது அல்போன்ஸின் அலட்சியமான அணுகுமுறையே தெரிகிறது. அதனால் தான் தேர்வின்போது ஒரு பிரிவில் கூட 'ப்ரேமம்' தேர்ந்தெடுக்கப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

நடுவர் குழு தலைவரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இக்கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த மலையாளப் படமென்றால் அது பிரேமம் தான். எனவே இப்படம் விருது பெறாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!