மோடியைச் சாடிய ராம்கோபால் வர்மா - பதட்டத்தில் பாலிவுட்

சமீபத்தில் வெளியான தூய்மை இந்தியா விளம்பரம் படுமோசமாக இருப்பதாக ட்வீட் செய்து மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளார் பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

ரங்கீலா, ரத்த சரித்திரம் உட்பட பல படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு மற்றும் இந்திப் படவுலகின் முன்னனி இயக்குநர். தன் படங்களைத் தாண்டி இவரை ஹாட் டாபிக்காக வைத்திருப்பது இவரது பேட்டிகளும் ட்வீட்டுகளும் தான்.

எப்பொழுது பார்த்தாலும் யாரையாவது ஏதாவது பேசி சும்மா இருக்கும் சங்கை ஊதிவிடுவார். ஓகே கண்மணி படம் பார்த்துவிட்டு “தன் மகனிடம் மம்மூட்டி நடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். துல்கரின் நடிப்பைப் பார்த்தால் மம்மூட்டியின் விருதுகளைப் பறித்துக்கொள்வார்கள்” என்று மூன்று தேசிய விருதுகள் வாங்கிய கலைஞனை டிவிட்டரில் சாடினார்.

அவரது பிறந்தநாளன்று வாழ்த்தியவர்களிடம் ‘வாழ்த்துகளின் மீது நம்பிக்கையேயில்லை’ என்று மரணத்தைப் பற்றிப் பேசினார். இதுபோன்று அவரைப்பற்றிக் கூற எத்தனையோ விஷயங்கள் உள்ளன.

தற்போது இவர் வசைபாடியுள்ளது திரைப்பிரபலத்தையல்ல. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை.

‘ஸ்வச் பாரத்’ என்ற தூய்மை இந்தியா திட்டத்தின் அனிமேஷன் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. இந்த விளம்பரத்தைப் பார்த்த ராம்கோபால் வர்மா, “இந்த விளம்பரம் எனது ‘ஆக்’ திரைப்படத்தைவிட படுமோசமாக உள்ளது. இதுபோன்ற விளம்பரங்களால் இந்தியா தூய்மையற்றுத்தான் போகும் என்று யாராவது மோடியிடம் கூறுங்கள்” என்று டிவிட்டி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

2007ம் ஆண்டு அமிதாப், மோஹன் லால் ஆகியோர் நடித்து வெளியான ஆக் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமான ‘ஷோலே’வின் ரீமேக்காக கருதப்பட்டு பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் ராம்கோபால் வர்மாவுடைய திரைவாழ்க்கையின் மோசமான படமாகக் கருதப்படுகிறது. அத்திரைப்படத்தைவிட இந்த விளம்பரம் மோசம் என்று கூறியுள்ளார் அவர்.

இதுபோல் டிவிட்டுவது அவருக்கொன்றும் புதியதில்லை என்றாலும் நேரடியாக பிரதமர் மோடியைக் குறைசொல்லியிருப்பது பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. பலரும் டிவிட்டரில் அவரை சாடி வருகின்றனர்.

ராம்கோபால் வர்மா மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் ‘தேசிய ஒருமைப்பாட்டைக் கெடுக்கிறார்’ என்று பல வருடம் முன்பே கைதாகியிருப்பார். வாங்க ஜி தமிழ்நாட்டப் பத்தி ஏதாவது ட்வீட் பண்ணுங்கஜி!

இது தான் அந்த தூய்மை இந்தியா வீடியோ :  https://www.youtube.com/watch?v=friXH0vfo1E
 

மு.பிரதீப் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!