எம்.எல்.ஏ. கேத்தரின் தெரசா..!

மெட்ராஸ், கதகளி, கணிதன் படங்களில் நடித்த கேத்தரின் தெரசா, அல்லு அர்ஜூனோடு நடித்து நாளை வெளியாக இருக்கிற தெலுங்குப் படம்தான் ‘சரைய்னோடு’. இதில் எம்.எல்.ஏவாக நடித்திருக்கிறார் கேத்தரின் தெரசா.

“படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, படப்பிடிப்பு தளமெங்கும் பாஸிடிவாகவே இருந்தது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை மிகவும் சிரத்தை எடுத்து வடிவமைத்தவர் இயக்குநர்தான். என் உடை மிகவும் ஃபார்மலாகவும் இல்லாமல் அதே சமயம் கவர்ச்சியாகவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது உட்பட பல விஷயங்களை அவர் கவனித்து செய்தார். நகை, காஸ்ட்யூம் எல்லாமே அவர்தான் தேர்வு செய்தார்’ என்றார்.

வழக்கமாக இதுபோன்ற, எம்.எல்.ஏ கதாபாத்திரங்களெல்லாம் சீனியர் நடிகைகளுக்குத்தான் வழங்கப்படும். அதுபற்றி கேத்தரின் தெரசா கூறுகையில், ‘எனக்கு எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் பிரியம் அதிகம். வழக்கமான வேடம் என்றால் போரடித்துவிடும். என்னுடைய கதாபாத்திரத்தை இயக்குநர் வடிவமைத்திருந்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை நான் ஏற்று நடிக்காத பாத்திரமாக உணர்ந்ததால்தான் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்’ என்றார்.

2013ல் வெளியான ‘இந்திரம்மாயிலதோ’  படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில், அல்லு அர்ஜுனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார் கேத்தரின் தெரசா. ‘ஒவ்வொரு படத்திலும் வெறும் நடிப்பு, டான்ஸ், மாஸ் என்று தனித்தனியாக இல்லாமல் பெர்ஃபார்மராக ஜொலிக்கக் கூடியவர் அல்லு அர்ஜூன். அதுவும் நடனக்காட்சி என்றால் மொத்த செட்டுமே, தீப்பற்றிக்கொண்டதுபோல இருக்கும்.  நடனத்தில் அவருக்கு ஈடு கொடுப்பது மிகவும் கடினம்’ என்கிறார் கேத்தரின் தெரசா.

துபாயில் செட்டிலாகிவிட்ட, மலையாளக்குடும்பத்தில் பிறந்த கேத்தரின் தெரசா, கல்லூரிப்படிப்பை பெங்களூரில் படித்து கன்னடப்படத்தில் அறிமுகமாகி, பின் மலையாளப்படங்களுக்கு சென்று.. அதன் பிறகு தெலுங்குப் படங்களில் நடித்து பின் தமிழுக்கு வந்தவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!