குருதட்சணையாக 'பாகுபலி'யைக் கொடுத்த ராஜமெளலி!


தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர் கிராந்தி குமார். அந்தக் காலத்தில் சிரஞ்சிவி, ராதிகா நடித்த படத்தை இயக்கினார். அந்தப்படம் ஆந்திர சினிமா வரலாற்றில் திருப்புமுனையாக பேசப்பட்டது. அதுவே பிற்காலத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடிப்பில் 'விதி" திரைப்படமாக வெளிவந்து சக்கைபோடு போட்டது.

கிராந்தி குமாரிடம், உதவி இயக்குநராக வேலை பார்த்தவர்தான் இப்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராகவேந்திரராவ். தனது சொந்த பேனரில் சிஷ்யன் ராகவேந்திராவை இயக்குனராக அறிமுகம் செய்தார், கிராந்தி குமார். முரளிமோகன், ஜெயசுதா நடிப்பில் ராகவேந்திராவ் இயக்கத்தில் வெளிவந்த 'ஜோதி" வெற்றிகரமாக ஓடியது.

ராகவேந்திரராவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர், ராஜமெளலி. தனது சிஷ்யனுக்கு தன் தயாரிப்பில் முதன்முதலாக 'ஸ்டுடன்ட் நம்பர்-1' படத்தைக் கொடுத்து ராஜமெளலி திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார், ராகவேந்திரராவ்.. ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த 'ஸ்டுடண்ட் நம்பர்-1' கனமாய் கல்லா கட்டியது.. அதன்பின் 2. 'சிம்மாதிரி 3. 'சை' 4. 'சத்ரபதி' 5.'விக்ரமார்க்குடு (சிறுத்தை) 6. 'எமதொங்கா' 7. 'மகதீரா' 8. 'மரியாத ராமன்' 9. 'ஈகா (நான் ஈ) 10. 'பாகுபலி' என்று பத்து வெற்றிப் படங்களை இயக்கியவர், ராஜமெளலி.

ராஜமெளலி தனது குருநாதர் ராகவேந்திரராவ் மீது மிகுந்த பாசமும், மரியாதையும் கொண்டவர். தெலுங்கு சினிமாவில் ஒன்பது வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்கிய ராஜமெளலி பத்தாவது படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியபோது 'தனக்காக ஒரு படத்தை இயக்கித் தரவேண்டும்’ என்று கூறினார், ராகவேந்திரராவ். 'அது என் பாக்யம் குருநாதா" என்று கண்ணீர் மல்க அக்கணமே ஒப்புக்கொண்டார் ராஜமெளலி. ஒரு பாச நிகழ்வில், நெகிழ்வில் உருவானதுதான் 'பாகுபலி' முதல்பாகம் . ராஜமெளலி இரண்டரை வருஷம் அயராது உழைத்தார். பாகுபலியில் இடம்பெற்ற அசத்தலான அமானுஷ்ய அரண்மனை, பிரம்மாண்ட மலையருவி அனைத்தும் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் செட் போடப்பட்டது. சில காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக கேரளாவில் சாலக்குடி நீர் வீழ்ச்சியில் படமாக்கப்பட்டது. பிரம்மாண்ட செட் அமைக்கும் நேரத்தில் ராஜமெளலி ஏ.சி-யில் 'உற்சாகமாக' உறங்கவில்லை. மண்துகள்களின் பக்கத்திலேயே டென்ட் கொட்டாய் கட்டி வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து 'பாகுபலி' செட்டை நேர்த்தி ஆக்கினார்.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 10 வெற்றி படங்களை வழங்கிய அசகாய இயக்குனர் ராஜமெளலி, தன் சம்பளமாய் வருடத்திற்கு இருபது கோடிகளைக் கேட்டிருந்தாலும் கிடைத்திருக்கும். பாகுபலி முதல் பாகத்துக்காக இரண்டரை வருஷம் தன், வியர்வையை தாரைவார்த்து உழைத்த உழைப்புக்கு ராஜமெளலி வாங்கிய சம்பளம் ஐந்து கோடி. இதோ துளிகூட முகம்சுளிக்காமல் தன் குருநாதர் முகத்தில் பூக்கும் புன்னகைப் பூவை ரசிப்பதற்காக 'பாகுபலி-2" பணிகளில் இறங்கிவிட்டார் ராஜமெளலி. 2017-ல் பாகுபலியின் பாகம் இரண்டு ரிலீஸாகிறது. ஆக ராகவேந்திரராவ்க்கு அவரது சிஷ்யன் தந்த, தரும் குருதட்சணைதான் 'பாகுபலி'.


- எம். குணா

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!