வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (14/07/2016)

கடைசி தொடர்பு:18:27 (15/07/2016)

மலையாள நண்பர்களே... கமர்ஷியல் பக்கம் போகாதீங்க ப்ளீஸ்! #Kasaba #OzhivudivasatheKali


சமீபத்தில் இரண்டு மலையாளப்படங்கள் பார்க்க நேர்ந்தது.

ஒன்று கஸப. மம்முட்டி, வரலட்சுமி, சம்பத் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம். மல்லுவுட்டில் பிரபல இயக்குநரும் நடிகருமான ரஞ்சி பணிக்கரின்  (ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம் படத்தில் நிவின் பாலி-யின் அப்பாவாக நடித்திருப்பவர்) மகன் நிதின் ரஞ்சி பணிக்கருக்கு இயக்குநராக முதல் படம்.

மெகா ஸ்டார் மம்முட்டி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.  வரலட்சுமியை தாரை தப்பட்டையில் பார்த்து நடிப்புச் சூறாவளியே என்று சிலாகித்தது நினைவுக்கு வர.. நம்பிக்கையோடு போனேன்.

இந்த மல்லுவுட் ஆட்களுக்கு வரவே வராத விஷயம் மசாலா  படங்கள். அத்தி பூத்தாற்போல ஒன்றிரண்டு ஹிட்டடித்தாலும், அடிதடி, ஆட்டம் பாட்டம், கமர்ஷியல் கல்லா என்கிற விஷயத்தில் மனவாடுகளும், நம்மாட்களும்தான் சந்தேகமே இல்லாமல் பெஸ்ட்.  கஸப இன்னொரு முறை அதை நிரூபித்திருக்கிறது.

ஊருக்குள் சிலபல பெண்களை வைத்துக்கொண்டு அமைதியாக ஆதிகாலத்தொழில் செய்து வரும் வரலட்சுமியை அன் அஃபீஷியல் மனைவியாக பாவித்துக் கொண்டிருக்கிறார் சம்பத். அவரது அரசியல் ஆசைக்காக கொஞ்ச நாட்கள் வரலட்சுமியிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறது கட்சி மேலிடம்.
இதற்கிடையில் அந்த ஊரில் சம்பத்தின் அடிதடி அடாவடி அட்ராசிட்டியால் போலீஸ் ஸ்டேஷனே கதிகலங்கி விழிபிதுங்கி நிற்கிறது. காவல்துறை உயரதிகாரியின் மகனும், மகனது காதலியும் அந்த ஊரில் உயிரிழக்க... மம்முட்டி அந்த ஸ்டேஷனுக்கு மாற்றப்படுகிறார்.

முதல்மோதலே, வரலட்சுமியோடு. அதற்குப் பிறகு அவர் சம்பத்துக்கு நிகராக எல்லா அழிச்சாட்டியங்களையும் செய்து க்ளைமாக்ஸில் நம்மை உயிரோடு வீட்டுக்கு அனுப்பிகிறார் என்பதே கதை. கதை என்கிற வஸ்துவோ, திரைக்கதை என்கிற வஸ்துவோ கிஞ்சித்தும் இல்லை. ’காலைல வந்துடுங்க.. ஈவ்னிங் வரைக்கும் ஷூட்டிங். யார் யார் வர்றாங்களோ அவங்களை வெச்சுட்டு என்னென்ன ஷூட் பண்ண முடியுமோ பண்ணிக்கலாம்’ என்று முடிவெடுத்து செய்தது போல ஒரு படம்.

ஏதாவது கெத்தாக சாதித்து விட்டு, ஹீரோ திரும்பி நடக்கும்போதுதானே ஹீரோயிச பிஜியெம் ஒலிக்க விடுவார்கள் நம் ஊரிலெல்லாம்? இதில் மம்முட்டி, மணி என்ன என்று கேட்டுவிட்டு திரும்பினால்கூட ஹீரோயிச பிஜியெம். மிடில!

தலைவலியோடு திரும்ப வேண்டியிருந்தது. அதே நைட் ஷோ - ஒழிவு திவஸத்தே களி என்ற படத்திற்குப் போனேன். ’விடுமுறை நாள் விளையாட்டு’ என்று மொழிபெயர்க்கலாம். உண்ணி என்ற எழுத்தாளரது கதையைப் படமாக்கியிருக்கிறர்கள். இயக்கம் சனல்குமார் சசிதரன்.இதுதான் மல்லுவுட்டின் பலம் என்று நினைக்க வைக்கிற படம். ஒரு சிறுகதையை இவ்வளவு நேர்த்தியான திரைப்படமாகக் கொடுப்பது மிகப்பெரிய சவால். அதை சரியாகச் செய்திருக்கிறார் இயக்குநர்.

ஐந்து மத்திம வயது நண்பர்கள் ஒரு விடுமுறை நாளில் சின்ன சுற்றுலா செல்கிறார்கள். இயற்கையோடு இணைந்து குடித்துக் களைத்திருப்போம் என்று செல்லும் இடத்தில் அரசியல், பெண், நட்பு என்று எல்லாம் பேசி போரடித்து ‘சரி ஒரு விளையாட்டு விளையாடுவோம்’ என்று ராஜா - மந்திரி - திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். முடிவில் என்ன நடக்கிறது என்பதே கதை.

படத்தின் பட்ஜெட் வெறும் 20 லட்சம். ஆரம்ப காட்சி தவிர்த்து மொத்தமே ஏழே ஏழு பேர்தான் திரையில் காண்பீர்கள். அதிலும் இரண்டு பேர் அவ்வபோது வந்து போய்விடுவார்கள். அனைவருமே அத்தனை இயல்பான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார்கள்.

படம் சொல்லும் உட்பொருள் மிக ஆழமாக இருக்கிறது. ஒரு பெண்ணை அணுகுவதில் ஒவ்வொருவரின் முயற்சியை காட்சிப்படுத்தி, அதன்மூலம் பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் பற்றி போகிற போக்கில் பேசியிருக்கற விஷயமும் அலசலுக்குண்டானது. படத்தில் நடக்கும் அந்தக் கடைசி காட்சியை நோக்கி படத்தை செலுத்தியிருக்கிற விதம்.. கைதட்ட வைக்கிறது. ராஜா, மந்திரி, திருடன், போலீஸ் என்று சீட்டை எடுக்கிற எல்லாருக்குப் பின்னும் ஒரு குறியீடென்றால் ‘நீ எக்ஸ்ட்ராவா இருக்கியே.. அப்ப நீ ஜட்ஜ்’ என்கிறார். அதுவும் ஒரு மிகப்பெரிய குறியீடுதான். படத்தைப் பார்த்தால் தெரியும்.

இயக்குநரிடம் பேசியபோது அவர் பகிர்ந்து கொண்டவை:

‘நடிகர்கள் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ். படத்துல எல்லா சீன்லயுமே குடிச்சுட்டே இருக்கற மாதிரி வந்தாலும், ஒருத்தரும் குடிக்கல. எல்லாமே செட் அப்தான். 47 நிமிஷத்துக்கு மேல படம் சிங்கிள் ஷாட்ல எடுக்கப்பட்டிருக்கு. மெய்ன் கதையை எல்லாருமா டிஸ்கஸ் பண்ணிகிட்டோம்.. மத்தபடி வசனம்னு பெரிசா ப்ளான் பண்ல. கேஷுவலா அஞ்சு ஃப்ரெண்ட்ஸ் பேசிக்கற மாதிரி பேச வெச்சு ஷூட் பண்ணிகிட்டோம்’

‘ப்ரேமத்துக்கு அவார்ட் கிடைக்குமா.. கிடைக்குமா’ என்று எல்லாரும் எதிர்பார்த்திருக்க.. 2015ம் ஆண்டின் கேரள அரசின் சிறந்த படத்திற்கான அவார்டை அள்ளியது இந்தப்படம்தான். அக்டோபர் 29, 2015ல் International Film Festival of Keralaவில் திரையிடப்பட்டாலும், ஜூன் 17 2016ல்தான் கேரளாவில் திரையிடப்பட்டது.

சிறந்த படம் மட்டுமல்லாது ‘Best Sound Recordist’க்கான விருதும் இந்தப்படத்திற்கு கிடைத்தது. படத்தை எல்லாரும் கொண்டாடுவதற்குக் காரணம்.. படம் நேரடியாகச் சொல்லிச் செல்கிற விஷயங்களுக்காக அல்ல. சொல்லாமல் - யோசிக்க வைத்த விஷயங்களுக்காகத்தான்.

டியர் மல்லு ஃப்ரெண்ட்ஸ், நீங்க ஆடவேண்டிய களம் இந்த மாதிரிதான். கமர்ஷியல், மசாலா பக்கமெல்லாம் வந்துடாதீங்க.. ப்ளீஸ்!

-சத்ரியன்-

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்