அனுஷ்காவை என்ன சொல்லிக் கூப்டா திரும்புவாங்கன்னு தெரியுமா? #11YearsOfAnushka

34 நான்கு வயதிலும் 16 வயது சிறுமி போல துறு துறுவென நடித்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் அழைப்பால் நடிப்புத் துறைக்கு உள்ளே வந்தார்.

'யோகாவை கற்றுக் கொண்டு ஹைதராபாத்தில் யோகா பயிற்சி குறித்த வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. நடிப்புப் பற்றி எதுவும் தெரியாமல் சினிமாத் துறைக்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என்னால் இதில் முழுவதுமாக ஈடுபடவில்லை. மனதுக்கு ஒவ்வாமல் இருந்தாலும், முயற்சி மற்றும் ஈடுபாட்டினை கைவிடாமல் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். என்னை அடையாளப்படுத்துவதற்கான படம் என்றால் என் கையில் இருந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ மட்டுமே. அதற்கு பிறகு, ஹைதராபாத் அழைத்துச் சென்று ஃபோட்டோ ஷூட் எடுத்தார்கள். என்னுடைய படிப்பு மற்றும் பாஸ்போர்ட் என எல்லாவற்றிலும் என்னுடைய பெயர் 'ஸ்வீட்டி' என்றே இருக்கும். அதைத்தான் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் 'ஸ்வீட்டி' என்று வைத்தார்கள். அனுஷ்கா என்கிற பெயர் சினிமாவுக்காக வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் நான்கு, ஐந்து முறை அனுஷ்கா என்று கூப்பிட்டப் பிறகுதான்,  திரும்பிப்பார்ப்பேன். அதுவே, ‘ஸ்வீட்டி’ என்றால் உடனே திரும்பிப் பார்த்துவிடுவேன். பல இரவுகளில் நான் நடிகருடன் இணைந்து நடிக்க வெட்கப்பட்டு அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த நாள் கடந்துப் போகாதா என நினைத்திருக்கிறேன்.'' என தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.


இவர்தான் தற்போது வரை தமிழ், தெலுங்கு, கனடா போன்ற மொழிப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று மொழிகளிலுமே ரசிகர்களால் முன்னணி கதாநாயகியாக கொண்டாடப்படுகிறார். இவர் நடித்து வெளியான ‘சூப்பர்’ தெலுங்கு படம் வெளியான நாள் 21 ஜூலை 2006. இன்றோடு 11 வருடங்கள் ஆகிறது. அழகான காதலி, குண்டு பெண், வாள் வீசி சண்டையிடும் ராணி, அழுக்கு அழகி என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.

சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகமாக தயாராகும் ‘எஸ்.3’ படத்திலும் தமிழ், தெலுங்கில் உருவாகும் பாகுபலி இரண்டாம் பாகத்திலும் பாக்மதி என்ற சரித்திர படத்திலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

எதை அழகு என்று கருதுகிறீர்கள் என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது...

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். இந்த ரசனையானது வித்தியாசப்படும். அழகை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அழகு என்பது உடல் தோற்றத்தில் இல்லை. ஆரோக்கியத்திலும் ஆனந்தத்திலும் இருக்கிறது.  நமது உடலுக்கும் மனதுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். நிறைய பேர் தன்னை அழகாக, வசீகரமாக காட்டிக் கொள்ள உடலில் கிரீம் தடவுகிறார்கள்.

உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்து எவ்வளவு கிரீம் தடவினாலும் அழகு வந்து விடாது. எப்போதும் மனதை மகிழ்ச்சியாகவும் உடலை ஆரோக்கியத்துடனும் வைத்து இருப்பவர்களிடமே அழகு தங்கி இருக்கும். சிரிப்பும் அழகில் ஒரு பகுதிதான். கண்களும் அழகுதான்.

நான் ஒருவரை சந்திக்கும்போது முதலில் அவரது கண்களைத்தான் பார்ப்பேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் கண்ணைப் பார்த்துப் பேசும்போதே தெரிந்து கொள்ளலாம். என்னை எல்லோரும் அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை என்னைவிடவும் பல அழகானப் பெண்களை நான் தினமும் பார்த்து வருகிறேன். அவர்களுக்கு நடிகையாகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவ்வளவுதான். எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருப்பது என்னுடைய அதிர்ஷடம். 

என்னுடைய அழகு என்பது ஆரோக்கியத்தில் இருந்து வந்தது. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.'' என்று கூறினார்.

 

மாடல்களும் நடிகைகளும் தங்கள் அழகைப் பாதுகாக்க ஆரோக்யத்தையும் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அனுஷ்கா சொல்வது நிஜம்தான்!

இன்னும் பல வெற்றிகளைக் கொடுங்கள் ஸ்வீட்டி! ஆல் த பெஸ்ட்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!