"பின்னேயும்"- அடூர் கோபாலகிருஷ்ணனின் கம் பேக்கா?

அடூர் கோபாலகிருஷ்ணன் 8 வருடங்களுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம், திலீப் - காவ்யா மாதவன் ஜோடி கம்பேக் என பல எதிர்பார்ப்புகள் 'பின்னேயும்' படத்தைப் பற்றி. படம் எப்படி...?

படத்தின் முதல் காட்சியில் ஒருவர் தற்கொலை செய்து இறந்துகிடப்பதைப் பற்றி போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு....திலீப்பின் அறிமுகம். ஒரு வேலைக்காக அலைந்துக் கொண்டிருக்கிறார் திலீப்.. ஒரு இறுக்கமான மனநிலையுடன்  திலீப்பிடம் மனக்கசப்பில் இருக்கும் மனைவியாக காவ்யா மாதவன். வீட்டோடு மாப்பிள்ளை திலீப் பற்றிய கவலையுடன் நெடுமுடி வேணு, கணவன் பிரச்சினைகளை சொல்லவும், பண உதவி கேட்டு அடிக்கடி வந்து போகும் திலீப்பின் தங்கை, வீட்டு சூழல் என்ன என்று தெரியாமல் திலீப் மகள்.. இவர்கள் தான் பிரதான கதாப்பாத்திரங்கள். வேலைக்காக அல்லாடும் திலீப்புக்கு துபாயில் அக்கௌன்டன்ட் வேலை கிடைக்கிறது. குடும்ப நிலவரத்தை சரிசெய்ய வழி பிறக்கிறது. ஆனால் அப்போது திலீப் ஒரு திட்டம் போடுகிறார். அதனால் வரும் ஒரு பிரச்சனை எல்லாவற்றையும் புரட்டிப் போடுகிறது. அது என்ன திட்டம், என்ன பிரச்சனை? முதல் காட்சியில் இறந்துகிடந்தது யார்? இவை அடூர் ஸ்டைல் சினிமாவாக விரிகிறது.

இத்தனை சோதனைகள், கஷ்டங்கள் என நகரும் இது ஒரு ரொமாண்டிக் சினிமா என்றால் நம்ப முடிகிறதா. அது அந்த 107 நிமிட படத்தை பார்க்கும் பொழுதுதான் புரிந்து கொள்ள முடியும்.

காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கணவன் திலீப்பிடம் விலகியே இருப்பது, மெல்லிய சோகத்துடனே இருப்பது என அசத்துகிறார் காவ்யா மாதவன், 'எதனால நீ என்கிட்ட இப்படி நடந்துக்கற? நீ சிரிச்சுப் பேசி எத்தன நாள் ஆச்சு' என காவ்யாவிடம் வருத்தப்படும் திலீப்பில்  அத்தனை இயல்பு.

இயல்பு, அழகியல், என எல்லாம் இருந்தும் அடூரின் அதே வழக்கமான சினிமா பாணி இந்த முறை கை கொடுக்கவில்லை என இணையம் எங்கும் விமர்சனங்கள் பற்றி எரிகிறது. இருந்தாலும் ஒரு வழக்கமல்லாத சினிமா அனுபவத்துக்காக நிச்சயம் 'பின்னேயும்' பார்க்க வேண்டிய சினிமா தான்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!