Published:Updated:

”’ஹவ் ஓல்ட் ஆர் யூ’னு கேட்கமாட்டோமே” - ஹேப்பி பர்த்டே மஞ்சு வாரியர்!

Vikatan
”’ஹவ் ஓல்ட் ஆர் யூ’னு கேட்கமாட்டோமே” - ஹேப்பி பர்த்டே மஞ்சு வாரியர்!
”’ஹவ் ஓல்ட் ஆர் யூ’னு கேட்கமாட்டோமே” - ஹேப்பி பர்த்டே மஞ்சு வாரியர்!

ந்தப் பெண் நாகர்கோவிலில் பிறந்தவர். நாகர்கோவிலில் தந்தைக்கு வேலை என்பதால் படித்ததெல்லாமே அங்குதான். அதனால் தமிழும் அவருக்கு சரளமாக வரும். தந்தைக்கு கேரளாவின் கண்ணூருக்கு மாற்றல் கிடைத்ததும், சொந்த மண்ணான கேரளாவில் அவருடைய படிப்பு தொடர்ந்தது.

படிப்பில் மட்டுமல்லாமல், நடனம், பாட்டு என்று எல்லாவற்றிலும் திறமைசாலியாக திகழ்ந்தார் அந்தப் பெண். இயல்பாகவே பேசும் கண்களுக்கும், நளினமான உடலமைப்பிற்கும் சொந்தக் காரியான அந்தப் பெண்ணுக்கு எல்லாக் கலைகளும் சுலபமாக கைவந்தன.

அவருடைய நடனத்திறமைக்காகவே கேரளாவின் இளைஞர்கள் திருவிழாவில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக ‘கலாதிலகம்’ விருது பெற்றார். மகளின் திறமையைக் கண்டறிந்து கொண்ட பெற்றோரும் அவரை சினிமா உலகில் கால் பதிக்க அனுமதித்தனர். தன்னுடைய 16வது வயதில் ’சக்‌ஷயம்’ என்னும் திரைப்படம் மூலமாக மலையாள உலகில் நுழைந்தார். மூன்றே வருடங்களில் 20க்கும் மேற்பட்ட மலையாள மொழிப் படங்களில் நடித்து மல்லுவுட்டில் தனக்கான முத்திரையை அழுத்தமாக பதித்தார் அந்தப் பெண். அவர்தான்....மஞ்சு வாரியர்.

மலையாள திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருந்த சமயத்திலேயே 20 வயதில் சக நடிகரான திலீப்பை மணம்புரிந்து கொண்டார் மஞ்சு. ஒரு பெண் குழந்தைக்கு தாயான பிறகு, கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பின் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ திரைப்படம் மூலமாக மீண்டும் ஒரு கம்பேக் மஞ்சுவுக்கு கிடைத்தது. அவருடைய வாழ்க்கையையே பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த அந்தப் படம், ‘தி அயர்ன் லேடி’ என்று அவரைக் கொண்டாடும் அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட். ஹீரோயின்களுக்கும் வயது தடையில்லை என்பதை ஆணித்தரமாக நீருபித்த அந்தப் படம்தான், தமிழில் ஜோதிகாவிற்கும் ‘ரிட்டர்ன் கேட்’ வாய்ப்பைக் கொடுத்தது.  

14 வருடங்களுக்குப் பிறகு சினிமா உலகிற்கும் திரும்பி வந்த மஞ்சு, ஹவ் ஓல்ட் ஆர் யூவிற்குப் பிறகு மோகன்லாலுடன் இணைந்து ‘என்னும் எப்போழும்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பிறகு வரிசையாக படங்கள்...படங்கள்...படங்கள்.  தேசிய விருது பெற்ற நடிகைக்கு இது பெரிய விஷயமில்லை என்றாலும், வயதாகிய பிறகு ஹீரோயின்கள் மீது பதிக்கப்பட்டிருந்த அம்மா, அக்கா முத்திரையை உடைத்தெரிந்தார் மஞ்சு.

மஞ்சுவின் வாழ்வில் அடுக்கடுக்காக ஏராளமான துன்பங்கள்....14 வருடம் கழித்து தன்னுடைய ஆசையை, கனவைத் திரும்பப் பெற்றாலும் அதற்காக அவர் கொடுத்த விலை மிகப்பெரியது. கணவருடன் விவாகரத்து, மகளின் பிரிவு என்று ஒரு பெண்ணைத் துவண்டு விழச் செய்யும் எல்லா கஷ்டங்களும் தொடர்ச்சியாக மஞ்சுவின் வாழ்க்கையில் நடைபெற ஆரம்பித்தது. ஆனால், அவர் கலங்கவில்லை.

‘எனக்கு அம்மா வேண்டாம்’ என்று பெற்ற மகளே குற்றம் சொல்லிவிட்டுத் தந்தையுடன் சென்று விட்டார். ஊர், உலகமோ தங்கள் பாணியில் கை, கால் வைத்து அவரது விவாகரத்து குறித்து வதந்திகளைப் பரப்பியது. ஆனால், எல்லா துக்கங்களையும் மனதிற்குள் அடக்கிவிட்டு, தன்னுடைய கனவை மீண்டும் நம்பிக்கையுடன் கையிலெடுத்தார் மஞ்சு, இரும்பு மனுஷியாக. இதோ அவர் தமிழ் சினிமா உலகிற்குள் தன்னுடைய வரவைப் பதிவு செய்ய இருப்பதாக குதூகலிக்கின்றனர் ரசிகர்கள்.

தொடர்ச்சியான பிலிம்பேர் விருதுகளுக்கும் சொந்தக்காரியான மஞ்சுவிற்கு, தமிழகத்திலும் ரசிகர்கள் ஜாஸ்தி. அதையும் தாண்டி அவருடைய தைரியம், துணிச்சல், திறமை, துன்பங்களை வென்றெடுத்த மனதிடம் நிஜவாழ்க்கையிலும் எத்தனையோ பேருக்கு எனர்ஜி பூஸ்ட். சாதனைகளுக்கு கண்டிப்பா வயசு தேவையில்லை மேடம்...வயசில் என்ன இருக்கு?  எல்லாத் தடைகளையும் துடைத்தெறிந்து பீனிக்ஸ் பறவையாக தனது கனவை நோக்கி கம்பீரமாக பயணிக்கும் மஞ்சுவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! 

-பா.விஜயலட்சுமி

Vikatan