வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (27/12/2016)

கடைசி தொடர்பு:15:55 (29/12/2016)

2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016

இந்த வருடம் மலையாளத்தில் நிறைய நல்ல படங்கள், நிறைய நல்ல புது இயக்குநர்கள் வருகையும் இருந்தது. அந்தப் பலவற்றிலிருந்து தவறவிடக் கூடாத சில இங்கே...

ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம்

மலையாளம்

நிஜத்தில் தன் நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தைத் தழுவி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த படம். கொஞ்சம் நழுவியிருந்தால் டிவி சீரியல் போல ஆகியிருக்கும் அபாயத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார் வினித். குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சரிசெய்யும் மகனின் கதை தான் படம். மிக மெதுவாக நகரும் கதை என்றாலும், தரமான ஃபேமிலி ட்ராமா, ஃபாசிட்டிவ் எண்ணம் விதைக்கும் வசனங்களால் ரசிகர்களைக் கவர்ந்தது. 100 நாளுக்கு மேல் ஓடியது படம்.

 

தோப்பில் ஜோப்பன்

அப்போது தான் கசபா, ஒயிட் என இரண்டு படங்கள் தோல்வியடைந்திருந்தது மம்முட்டிக்கு. ஜானி ஆண்டனி இயக்கிய தோப்பில் ஜோப்பன் மம்முட்டிக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது. காதலில் ஜெயிப்பதற்காக பணம் சேர்ப்பதில் வாலிபத்தை தொலைத்த ஹீரோ, அந்த காதல் கிடைக்காமல் போக குடிக்கு அடிமையாகிறான். பிறகு என்ன நடக்கிறது என்கிற காமெடி கதை தான் படம். 

 

புலிமுருகன்

100கோடி க்ளப்பில் இணைந்த முதல் மல்லுவுட் படம். புலிகளை வேட்டையாடும் நாயகன் சில மனிதர்களையும் வேட்டையாடும் கதை. பீட்டர் ஹெயினின் சண்டைக் காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது. மோகன் லாலில் நடிப்பு, சண்டை, சென்டிமெண்ட் எனப் புகுந்து விளையாடியிருந்தார். 

 

ஆனந்தம்

இன்டஸ்ட்ரியல் விசிட் செல்லும் சில கல்லூரி நண்பர்களின் பயணம். காதல், கோபம், வருத்தம், துரோகம், மகிழ்ச்சி என பல உணர்வுகள் அந்தப் பயணத்தில் வெளிப்படுவதும் அதனால் நிகழும் சம்பவங்களுமாக நகரும் கதை தான் ஆனந்தம். இப்படத்தின் மூலம் இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளராக, கணேஷ் ராஜ் இயக்குநராக ஒரு சேர அறிமுகமானார்.

 

அனுராக கரிக்கின் வெள்ளம்

இதுவும் அறிமுக இயக்குநர் படம் தான். ஹாலித் ரஹ்மான் இயக்கத்தில் பிஜு மேனன், ஆசிஃப் அலி, ஆஷா சரத், ரஜிஷா விஜயன் நடித்திருந்தனர். விறைப்பும் முறைப்புமான பிஜு மேனன், காதல் மன்னனாகி மனைவி ஆஷா சரத்திடம் சரண்டராவது, அவரது மகனான ஆசிஃப் அலி தான் காதலித்த ரஜிஷாவை வெறுத்து ப்ரேக்கப் செய்ய நினைப்பது என இரண்டு ட்ராகில் பயணிக்கும் காதல் கதையை ரசிக்கும் படியான ஹூமர் கலந்து கொடுத்திருப்பார்கள்.

மகேஷின்டே பிரதிகாரம்

தன்னை பொது வெளியில் வைத்து அடித்தவனை திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு அணியமாட்டேன் என்பவனின் பழிதீர்த்தல் முயற்சி தான் கதை. அதுவரை நீங்கள் பார்க்கும் கதை இந்த பகை உண்டாகும் இடத்திற்கு சற்றும் பொருந்தாததாக, அழகான காதலும் இடையிடையே காமெடியுமாய் நகர்ந்து கொண்டிருக்கும். அதன் பிறகான கதையும் கூட அப்படித்தான். சின்ன விஷயம் அதை வைத்து இயல்பான திரைக்கதை பின்னியிருப்பார் அறிமுக இயக்குநர் திலேஷ் போத்தன்.

 

ஆக்‌ஷன் ஹீரோ பிஜு

படத்தில் பிரத்யேகமாக சொல்ல கதை என்ற ஒன்றும் இருக்காது. பன்ச் வசனம் பேசாத, ஹீரோயிசம் காட்டாத எஸ்.ஐ பிஜுவின் போலீஸ் ஸ்டேஷன் நிகழ்வுகள் தான் படம். வாக்கி டாக்கியைத் தொலைக்கும் கான்ஸ்டெபிள், நடுரேட்டில் குடித்துவிட்டு நிர்வாணமாய் ரகளை செய்யும் ஒருவனை அடக்க திணறும் வேளை என சர்வமும் சாதாரண நிகழ்வுகளாய் இருக்கும் படம். படத்தை தயாரித்ததோடு, நிவின் பாலி அவ்வளவு அழகாக பிஜு வேடத்துக்குப் பொருந்திப் போயிருப்பார், இயல்பான மேக்கிங்கால் அசத்தியிருப்பார் இயக்குநர் அப்ரிட் ஷைன்.

லீலா

பிரபல எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதி, மாத்ரு பூமியில் வெளிவந்த சிறுகதை 'லீலா'வை இயக்குநர் ரஞ்சித் திரைப்படமாக்க ஆராவாரமாக தயாரானார். காரணம் இந்தக் கதையை எந்த களத்துக்குள்ளும் அடைக்க முடியாததாய் இருந்தது. மக்களின் ஆழமற்ற ரசனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. ஒருவரியில் கதை சொன்னால் தவறான படமோ என நீங்கள் நினைக்கும் அபாயம் இருப்பதால், 'யானை ஒன்றையும், பெண் ஒருத்தியையும் ஒரு காரணத்துக்காக தேடுபவனின் பயணம்' என்பதை கதையாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களைப் படம் பார்க்க தூண்டுமேயானால் குட்டியப்பனாக நடித்திருக்கும் பிஜு மேனன் உங்களை அசத்தக் காத்திருக்கிறார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

 

கம்மட்டிபாடம்

இது ராஜீவ் ரவியின் வெறித்தனமான படம் என்றே சொல்லலாம். தங்களைக் கொண்டே தங்களின், வாழ்வாதாரத்தையும் வசிப்பிடத்தையும் பறிக்கும் கைகளை ஒடிக்கும் எளியவனின் கதை. கதையை ஒரு நகரத்தின் வளங்களை அழித்து கட்டடங்களால் நிரப்பப்படும் காலத்தின் பின்னணியில் சொல்லியிருந்தார். இயக்குநர், ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளரும் கூட என்பதால் உணர்வுப் பூர்வமாக பதிவு செய்திருந்தார் ராஜீவ் ரவி. துல்கர் சல்மான், விநாயகன், மணிகண்டன் என மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

ஒழிவுதிவசத்தே களி

சென்ற ஆண்டே பலதிரைவிழாக்களில் வெளியாகி கொண்டாடப்பட்டு, சிறந்த படம் என கேரள மாநில விருதையும் வென்ற படம் ஒழிவிதிவசதே களி. இதுவும் உண்ணி ஆர் எழுதிய சிறுகதை தான். அதை முழுமையான கதையாக மாற்றியிருப்பார் இயக்குநர் சனல் குமார் சசிதரண். ஒரு தேர்தலுக்கான விடுமுறை நாளில் வாக்களிக்க செல்லாமல் ஐந்து நண்பர்கள் ஒரு பங்களாவில் சந்தித்துக் கொள்கின்றனர். குடி குடி குடி... என்றிருக்கும் அவர்களுக்கு போதை உச்சத்துக்கு செல்கிறது. மெல்ல மெல்ல அவர்களுக்குள் இருக்கும் உண்மை மிருகங்கள் பேச்சின் வழியே தலை துக்குகிறது. கடைசியில் நம்மை பதறவைக்கும் அந்த முடிவு.... அதிர்ச்சியில் உறையவும் வைக்கும்.

- பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்