கூட்டத்தில் ஒருத்தனோ, தனி ஒருத்தனோ ஃபகத் ரெடி! #HBDFahadhFaasil

``ஒரு ஷாட் நடிச்சு முடிச்சதும் இயக்குநரைப் பார்ப்பேன். அவர் என்னைப் பார்த்து சிரிச்சா, அதுதான் என்னோட சந்தோஷம். `விருது வேணாம்'னு சொல்ல மாட்டேன். தந்தா வாங்கிக்கத்தான்போறேன். ஆனா, ‘மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தில் விநாயகனை நடிக்கவைச்சிருந்தா, வேற டோனில் இருந்திருக்கும்; அருமையான சினிமாவா வந்திருக்கும். ஆனா, பத்து ஃபகத் பாசில் நடிச்சிருந்தாலும் `கம்மட்டிப்பாட'த்தில் விநாயகன் செஞ்ச ரோலை சிறப்பா செய்திருக்க முடியாது. அந்த விருதுக்கு விநாயகன்தான் தகுதியானவர். அதனால எந்த வருத்தமும் இல்லை"

``மகேஷின்டே பிரதிகாரம்' படத்துக்காக சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?'' என்ற கேள்விக்கு ஃபகத் பாசில் அளித்த பதில் அது.

உண்மையில் அவருடைய குணமும் இதுவேதான். தனக்கு என்ன வரும் என்பதல்ல, தன்னால் எது முடியாது என்பதைக் கண்டுபிடித்துக் கற்றுக்கொள்வதும், குறைந்தபட்சம் அதை அறிந்துவைத்திருப்பதும் நடிகனுக்கு முக்கியம். அப்படி, தன் சுயத்தை உணர்ந்து நடிக்கும் படம் எப்படிப்பட்டதாயினும் அதில் முழு உழைப்பையும் கொட்டி நடிக்கும் ஃபகத்துக்கு, இன்று பிறந்த நாள். 

ஃபகத்

மலையாளத் திரையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களைப் பட்டியலிட்டால், அதில் ஃபகத்தைத் தவிர்த்துவிட முடியாது. தன்னைத் தவிர்க்க முடியாத நபர் ஆக்கிக்கொள்ளுதல் மீது அல்ல, நடிப்பின்மீது கவனம் செலுத்த வேண்டும் என ஃபகத் எடுத்த முடிவுதான் ஃபகத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம். கூடவே தவிர்க்க முடியாத நடிகராகவும் மாற்றியிருக்கிறது. 

தோல்வியிலிருந்து துளிர்த்த நடிப்பு:

Fahadh Faazil

மலையாளத்தில் பெரிய இயக்குநர் பாசிலின் மகன். அப்பாவின் நிழல் மூலம் வாய்ப்பு பெறுவது ஃபகத்துக்கு பெரிய உறுத்தலாக இருந்தது. அந்தத் தோல்வியை முழுதாக ஏற்றுக்கொண்டு, அமெரிக்காவில் தத்துவ இயல் படிப்பில் மூழ்கினார் ஃபகத்.  அந்தத் தோல்வி, `இவர் சினிமாவுக்குப் பொருத்தமானவர் அல்ல' என்கிற விமர்சனம் இரண்டையும் அப்படியே ஏற்றுக்கொண்டவிதம் கவனிக்கப்படவேண்டியது. இப்போதும் ``அந்தத் தோல்விக்கு முழு பொறுப்பும் நான்தான். அப்போது எனக்கு இருந்த புரிதல், நடிப்பு அனுபவத்தில் `மகேஷின்டே பிரதிகாரம்' நடித்திருந்தாலும் தோல்விதான் அடைந்திருக்கும்" என ஒப்புக்கொள்ளவது போன்ற தன்னைப் பற்றிய விழிப்புஉணர்வு ஃபகத்தின் பலம். அதுவேதான் தேர்ந்த நடிகனாக அவரை மாற்றவும் செய்தது. 

ஆக்‌ஷன் சொன்னதும் அழகு நடிக்காது:

நடிகர் என்றால் நல்ல தோற்றம், கச்சிதமான ஹேர்ஸ்டைல், கவர்ச்சியான உருவம்தான் என்றிருந்ததை உடைத்து, `என்னுடைய உருவம் இதுதான். முன் தலையில் முடி உதிர்ந்திருப்பதுதான் என் அசலான தோற்றம்' என்பதாக கேமரா முன் நிற்கும் துணிச்சல் லேசுபட்ட காரியம் அல்ல. ``நான் ஒரே ஒருத்தர்கிட்ட என்னை முழுசா ஒப்படைச்சிடுவேன். அது என்னுடைய இயக்குநர். என்னால முடியாத காரியத்தை, `முடியாது'னு நானே சொல்லிடுவேன். என்னை வெச்சு என்ன மாதிரியான வேலைவாங்கணும்னு அவருக்குத் தெரியும். மற்றபடி என் தோற்றத்தையும் மீறி நடிப்புதான் நிக்கும்" என்று ஃபகத்தே இது பற்றிக் கூறியிருக்கிறார். நிஜமும் அதுதான். ஒரு நடிகரின் அழகோ, ஹேர்ஸ்டைலோ, உருவமோ ஆக்‌ஷன் சொன்னதும் நடிக்காது. அதை அந்த நடிகர்தான் செய்ய வேண்டும். ஃபகத் செய்தார். எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி மறுபடி மறுபடி செய்தார். 

கூட்டத்தில் ஒருத்தனோ, தனி ஒருத்தனோ எதுக்கும் தயார்:

Bangalore Days

ஒரு கண்ணசைவு, முகச்சுளிப்பு, குரல் உயர்த்துதல் என ஏதேனும் ஒரு முயற்சியில் தன்னைத் தனித்துக்காட்டவே பலருக்கும் விருப்பம் இருக்கும். ``இவர்தான்யா படத்தில் சூப்பர்" என்ற பாராட்டுக்குத்தான் எல்லாம். ஆனால், ஃபகத் விஷயத்தில் அது தலைகீழாக நடக்கும். `22 ஃபீமேல் கோட்டயத்தில்' கிரே ஷேட் உள்ள கதாபாத்திரம். அதை அப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு கட்டுப்பாடு இருந்தது. சரியான தருணத்தில் ஃபகத் எப்படியானவர் எனக் காட்டும் வரையில், அவர் மீது துளியும் சந்தேகம் வராது. `அன்னாயும் ரசூலும்' படத்தில் எந்த இடத்திலும் முகம் மாறாமல் சாதாரண ஒருவனாக நடிக்க வேண்டும். சிறையிலிருந்து தப்பும் க்ளைமாக்ஸ் வரை ரசூலாகவே இருப்பார். `டைமண்ட் நெக்லஸ்', `நார்த் 24 காதம்', `ஆர்டிஸ்ட்' என முதன்மைக் கதாபாத்திரமாக நடித்தாலும் சரி, `ஒன் பை டூ', `காட்ஸ் ஒன் கன்ட்ரி', `பெங்களூர் டேஸ்', `டேக் ஆஃப்' போன்று கூட்டத்தில் ஒருத்தனாக நடித்தாலும் சரி, எதிலும் எப்படியாவது பார்வையாளர்களைக் கவனிக்கவைத்திட வேண்டும் என்கிற பதற்றம் ஃபகத்துக்கு இருக்காது. இதற்கு, சமீபத்தில் வெளியான `தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாக்‌ஷியும்' படம் சிறப்பான உதாரணம். கொஞ்சமும் செயற்கைத்தனம் இல்லாமல் இன்னொருவர்போல் நடிப்பது, அப்படித்தான் பிரசாத் ஆக நடித்திருப்பார் ஃபகத். ஒரு காட்சியில் ஃபகத் சொல்வது பொய் எனத் தெரிந்ததும், ``இப்ப என்ன சொல்ற?" என போலீஸ் முஷ்டி முறுக்கும் அந்த இடத்தில், ஒரு சிரிப்பு சிரிப்பார். அத்தனை நிறைவைத் தரும் அந்தச் சிரிப்பு. ஃபகத்தின் நடிப்பு, எப்போதும் அந்த நிறைவைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. .

Velaikkaaran

சிவகார்த்திகேயனுடன் `வேலைக்காரன்', விஜய் சேதுபதியுடன் `அநீதிக் கதைகள்' என இரண்டு படங்கள் மூலம் தமிழில் என்ட்ரி ஆக இருக்கிறார். இது அவரின் வேற மாதிரியான ஆடுகளமாக அமையும் என நம்பலாம்!

வாழ்த்துகள் ஃபகத்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!