Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரஞ்சீவி குடும்பத்தில் எத்தனை நடிகர்கள்? டோலிவுட் ஹீரோக்களின் கதை! #KingsOfTollywood - Part 1

சிரஞ்சீவி

எந்தப் பின்னணியும் இன்றி சினிமாவுக்குள் வந்து வெற்றிபெறுபவர்களுக்கு ரசிகர்கள் கொடுப்பது தனி மரியாதை. அதே போல் தனக்குப் பிடித்த நாயகனின் குடும்பத்திலிருந்து ஒருவர் நடிக்க வருகிறார் என்றால் அவர்கள் மீதும் அதே அளவு எதிர்பார்ப்பை வைப்பார்கள். அது பல நேரம் ஏமாற்றலாம், சில நேரம் எதிர்பார்க்காத அதிசயமும் நிகழலாம். சினிமாவைப் பொறுத்தவரை இப்படி பல அதிசயங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கிறது. எல்லா மொழி சினிமாக்களிலும், கிட்டத்தட்ட ஒரு ரிலே ரேஸ் போல தனக்குப் பிறகு தன் இடத்தை குடும்பத்திலிருக்கும் ஒரு நபருக்கு கொடுப்பதோ, அல்லது சமகாலத்திலேயே தானும் நடிப்பைத் தொடர்வதோ நடந்து கொண்டேதான் இருக்கிறது. இது தெலுங்கில் கொஞ்சம் அதிகம். சில குடும்பங்களின் ஆதிக்கம் தவிர்த்து, எந்தப் பின்னணியும் இல்லாத நபர்கள் வந்து ஜெயிப்பதெல்லாம் அபூர்வம். இது சரியா தவறா என்பதற்குள் போகும் முன், டோலிவுட்டில் நிறைந்திருக்கும் சினிமா குடும்பங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சினிமாவுக்கு வந்த கதை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி தெரிவிக்க முற்படும் சின்ன முயற்சியே இந்த குறுந்தொடர்... 

எச்சரிக்கை: இது வெறுமனே குறிப்பிட்ட ஒரு நடிகர் மற்றும் அவர் குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் பற்றிய அறிமுகம் மட்டுமே. ஆராய்ச்சி செய்து 'இந்த நடிகர் செய்த காரியத்தை பாருங்களேன்' வகையறா தொடர் கிடையாது. வெல்கம் டு டோலிவுட் ஃபேமிலி.

சிரஞ்சீவி

நிறைய சீனியர்கள் இருந்தும் சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க காரணம் உண்டு. இன்று சிரஞ்சீவியின் பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துகளோடு, அவர்கள் குடும்பத்துக்குள் நுழைவோம் வாருங்கள்.

கொனிடெல்லா வெங்கடராவ் - அஞ்சனா தேவியின் மூத்தமகன் கொனிடெல்லா சிவ சங்கர வர பிரசாத். பயப்பட வேண்டாம் இது சிரஞ்சீவியின் நிஜப்பெயர். சிறுவயதிலிருந்தே சினிமாவில் நடிப்பது பற்றிய ஆர்வம் அவருக்குள் ஏற்பட, காமர்ஸ் படிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்குக் கிளம்புகிறார். மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேரப் போகிறேன் என அம்மாவிடம் சொன்னார். கோனிடெல்லா குடும்பத்துக்கு ஆஞ்சநேயர் மேல் அபார நம்பிக்கை உண்டு. ராம் சரணின் தயரிப்பு நிறுவனமான 'கொனிடெல்லா புரொடக்‌ஷன்' லோகோ வரை அந்த நம்பிக்கை பரவியிருந்தது. எனவே, "ஆஞ்சநேயர் போல சிரஞ்சீவியாக இரு" என வாழ்த்தியதோடு அதே பெயரை திரையில் பயன்படுத்துமாறு கூறியிருக்கிறார். அன்றிலிருந்து துவங்கியது சிரஞ்சீவியின் திரைப்பயணம். 'கைதி' படத்தின் ஹிட்டுக்குப் பிறகு மெகா ஸ்டார் பாதையை நோக்கிய சிரஞ்சீவியின் திரைப்பயணம் முழுக்க அத்தனை ஹிட் படங்கள்.

Chiranjeevi

இதன் பிறகு நடிகராக மட்டுமல்ல அரசியல் களத்திலும் இறங்கியதும், மறுபடி வந்து கத்தி ரீமேக் 'கைதி நம்பர் 150'யில் நடித்தது வரையிலான எல்லாம் நாம் அறிந்ததே. அதிகம் அறியாதது, சிரஞ்சீவிக்கும் அல்லு குடும்பத்தினருக்கும் ஒரு இணைப்பு உண்டு என்பது. அல்லு ராமலிங்கையாவின் (இவர் பற்றி அல்லு குடும்பத்தினர் பற்றிய பகுதியில் பின்னர் சொல்கிறேன்) மகள் சுரேகாவைத்தான் திருமணம் செய்தார். இவர்களின் மகனான ராம் சரண் நடித்த ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான 'மகதீரா' படத்தை தன் 'கீதா ஆர்ட்ஸ்' நிறுவனம் மூலம் தயாரித்தது சுரேகாவின் அண்ணனும், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த். அல்லுவிடுகிறதா...

அண்ணன் வெற்றி பெற்றதில் வந்த ஆர்வமோ என்னவோ, சிரஞ்சீவியின் மூத்த தம்பியான நாகேந்திர பாபுவும் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். மிகச் சின்ன வேடங்கள், சில படங்களில் வில்லனும் கூட. லிங்குசாமி இயக்கிய 'வேட்டை' படத்தில் ஆர்யா, மாதவனுக்கு அப்பாவாக நடித்திருப்பாரே அவரேதான் இவர். இப்போதும் எதாவது படங்களில் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார். அடுத்த முறை எதாவது படத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தால், பக்கத்திலிருப்பவரிடம் 'இவர்தான் சிரஞ்சீவியின் அண்ணன்னு உனக்குத் தெரியுமா?' என கெத்து காட்டுங்கள். 

Pawan Kalyan

தனக்குப் பிறகு சினிமாவில் பெரிய ஹீரோவாக உருவெடுக்கும் நபர் தன் வீட்டுக்குள் இருக்கும் கொனிடெல்லா கல்யாண் பாபு என அப்போது சிரஞ்சீவிக்குத் தெரிந்திருக்காது. இவ்வளவு ஏன், முதல் படமான 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி', பின்பு கோகுலத்தில் சீதை, லவ் டுடே ஆகிய தமிழ் படங்களின் தெலுங்கு ரீமேக், அதன் பிறகும் 'தொலி ப்ரேமா' என சாஃப்டான படங்களில் நடித்துக் கொண்டிருந்த வரை கல்யாண் பாபுவுக்கும் கூட அது தெரிந்திருக்காது. சினிமாவுக்காக கல்யாண் பாபு, பவன் கல்யாண் ஆனார். கல்யாணுக்கு கரியர் ப்ரேக் கொடுத்தது அருண் பிரசாத் இயக்கத்தில் நடித்த 'தம்முடு' (தமிழில் 'பத்ரி' என ரீமேக் ஆனது). //இங்கு பவனின் முதல் படம் 'அக்கட அம்மாயி இக்கட அப்பாயி' இயக்கிய ஈ.வி.வி.சத்யநாராயணா பற்றி சின்ன குறிப்பு.

Sathyanarayana

தமிழில் 'குறும்பு', 'போராளி' போன்ற படங்களில் நடித்த 'அல்லரி' நரேஷ், வசந்த பாலனின் முதல் படமான 'ஆல்பம்' படத்தில் நடித்த ஆர்யன் ராஜேஷ் இருவரின் தந்தை இவர்தான்.// தடங்கலுக்கு வருந்துகிறேன். 'தம்முடு'வுக்குப் பின் பவனின் பாதையில் சில வெற்றிகள் பல தோல்விகள் இருந்ததுதான். இருந்தாலும் அவர் 'பவர் ஸ்டார்' ஆகிவிட்டாரே. அவரின் ரசிகர்கள் மட்டும் அப்படியே இருந்தார்கள், இருக்கிறார்கள். இப்போது த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனது 25வது படத்தில் பவன் பிஸி.

ராம் சரண்

சிரஞ்சீவியின் தம்பிகள் வரும் போது மகன் சினிமாவுக்கு வராமல் போவாரா. ராம் சரண் நடிக்க வைக்க தயாரானது கொனிடெல்லா குடும்பம். 'போக்கிரி', 'தேசமுதுரு' என இரண்டு ஹிட்களைக் கொடுத்திருந்த பூரி ஜெகன்னாத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எந்த சேதாரமும் இல்லாமல் முதல் படம் 'சிறுத்தா' மூலம் கொஞ்சம் சேஃபான அறிமுகத்தைப் பெற்றார் ராம் சரண். ஆனால் இரண்டாவது படத்திலேயே ராஜமௌலியுடன் இணைந்து 'மகதீரா' மூலம் பெரிய ஹிட் கொடுக்க ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகன் வருண் தேஜும் 'நானு நானு' என நடிப்பு மீது ஆர்வம் காட்ட ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் 'முகுந்தா' படம் மூலம் அறிமுகமானார். பெரிய ஹிட் இல்லை என்றாலும் இரண்டாவது படமான 'காஞ்சே' மூலம் கவனிக்கப்பட்டார் வருண் தேஜ்.

அதுவரை டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த வருண் தேஜின் தங்கை நிஹாரிகாவுக்கும் சினிமா ஆசை உண்டாக சென்ற வருடம் வெளியான 'ஒக மனசு' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்போது தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நிஹாரிகா. பவன் கல்யாணின் குழந்தைகளுக்கு சிறுவயதுதான் என்பதால் அவர் வீட்டிலிருந்து இன்னும் சினிமாவுக்கு யாரும் தயாராகவில்லை. ஆனால் அவரின் சகோதரி விஜய துர்காவின் மகன் சாய் தரம் தேஜுக்கு சினிமா ஆசை. 'பில்லா, நுவ்வு லேனி ஜூவிதம்' மூலம் அறிமுகமானவர் மிச சேஃபாக சினிமாப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இவ்வளவுதான் இப்போதைக்கு சிரஞ்சீவி குடும்பத்து சினிமா வரலாறு. அடுத்த பகுதியில் இன்னொரு குடும்பத்தின் சினிமா பக்கங்களை புரட்டலாம்.

 இங்க்க உந்தி!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்