Election bannerElection banner
Published:Updated:

" ’பிரேமம்’ ஜார்ஜ் அல்ல...மலர் டீச்சரை முதலில் காதலித்தவர்கள் பார்வையாளர்கள்தான்!"- 'மலையாள கிளாசிக்' பகுதி 13

" ’பிரேமம்’ ஜார்ஜ் அல்ல... மலர் டீச்சரை முதலில் காதலித்தவர்கள் பார்வையாளர்கள்தான்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 13
" ’பிரேமம்’ ஜார்ஜ் அல்ல... மலர் டீச்சரை முதலில் காதலித்தவர்கள் பார்வையாளர்கள்தான்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 13

`மலையாள கிளாசிக்' தொடரின் பகுதி 13 இது. `பிரேமம்' படத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.

நீங்கள் ஆணோ, பெண்ணோ ஒரு கூட்டத்தில் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றிலும் முகங்கள் இருக்கின்றன. நீங்கள் போகும் வழியெல்லாம் உங்களை இரண்டு விழிகள் வியப்பாகப் பார்த்திருக்கின்றன, விருப்பத்துடன் பருகிக்கொண்டிருக்கின்றன, பார்வை கொண்டு வருடிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தால் ஒரு தன்னம்பிக்கை வரும். நீங்கள் ஈடுபடுகிற காதல் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். அது தவிர்த்து, அநேகமாய் உங்களுக்கே உங்கள் மீது காதல் வரும். இந்த அனுபவத்தை எப்படி வேறு ஒருவரிடம் பகிர்ந்தால் விளங்காதோ, சினிமாவில் காதல் படங்களும் அப்படித்தான்.

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நாம் சிரித்தாலும் சிரித்து விடுவோம். காதல் கதையைச் சொல்வதற்கு ஒரு வல்லமை வேண்டும். அது இரண்டு நபர்களின் வயதுக் கோளாறு என்பதல்லாமல், அது ஒரு பொது அனுபவமாக மாறவேண்டும். மலையாள சினிமாவில் `பிரேமம்' முதன் முதலாக ஓர் அனுபவமாய்த் திரண்ட படம் என்பதை இந்தமுறை பார்க்கும்போதும் உறுதி செய்துகொண்டேன்.

இது ஓர் ஆச்சர்யம்.

இதை எப்படி நல்ல படமாய் போயிற்று என்று பலருமே அலட்டினார்கள். இதில் என்ன கதை இருக்கிறது என்றார்கள். அப்படிக் கேட்டவர்கள் பலவற்றையும் கவனிக்க விரும்பவில்லை. தங்களுடைய பிடிவாதத்தின் மீது பாய் போட்டுப் படுத்துக்கொண்டவர்களும் இதில் அடக்கம். முதலில் பல கோணங்களிலும் சினிமா என்பது ஒரு கதையைப் பிரசங்கம் செய்வதல்ல. கதாகாலட்சேபம் அல்ல. பிரேமம் எல்லோருக்கும் தெரிந்த கதையை மட்டுமே சொன்னது. ஆனால், அதன் துல்லியம் முக்கியம். சரியான பிரதேசத்தில், சரியான தோரணையில், சரியான மொழியில், சரியான அளவில் அதைச் சொன்னார்கள்.

படத்தைக் காமெடி என்ற டைட்டிலில் வைத்தது அபத்தம். இதில் வருகிற நகைச்சுவை முற்றிலும் வேறுபட்டது. பாத்திரங்கள் பெரும்பாலும் சேஷ்டை செய்ய வேண்டியிருக்கவில்லை. நாம் அந்தத் தருணத்துக்குச் சிரிக்கிறோம். கொஞ்சம் வயசுப் பையன்கள் கொஞ்சமும் வெட்கமின்றி தங்களின் ஆர்வக்கோளாறுகளில் செல்வதை மிகவுமே தள்ளி நின்று முதிர்ச்சியுடன் பேசுகிறது படம். அதேநேரம் கவனிக்க வேண்டியது என்னவெனில், அந்த உலகத்தைத் தாண்டி வெளியே நின்று நாங்கள் சொல்வது என்னவென்றால் என்று ஒருபோதும் போதிக்க முற்படவில்லை.

இது ஜார்ஜின் கதை.

ஜார்ஜ் மூன்று பெண்களைக் காதலித்த கதை.

ஜார்ஜ், சம்பு, கோயா நண்பர்கள். உரசல்கள் இருந்தாலும், தங்களுக்குள்ளே புரிகிற ஒரு மனம் மூவரிலும் இருக்க, படத்தின் இறுதிவரை உறுத்தாத நட்பு. பெயர்கள் பிரஞ்ஞையுடன் வைக்கப்பட்டிருந்தாலுமே கேரளத்தில் அந்த தினுசு நட்பு முடிந்தவரையில் சாத்தியம். ஜார்ஜின் பன்னிரண்டாம் வகுப்பு காதல் முதலில் சொல்லப்படுகிறது. அவனுக்கு மேரி ஜார்ஜ் என்கிற சுருட்டைமுடிப் பெண்ணின் மீது ஆவேசமான காதல். விட்டேனா பார் என்று துரத்துகிற இவன், இவனைப்போல பலரும் ஓடுகிற ரேஸில் இருக்கிறார்கள். அவளுக்கு இதில் பெரிய நெருக்கடிகள் இல்லை. யார் கேட்டாலும் பதில் சொல்கிறாள். கொஞ்சம் சிரித்து வைக்க அவளுக்குப் பெரிய ஆட்சேபனை இல்லை. ஏனென்றால், அவள் தெளிவாய் வேறு ஒரு ஜார்ஜைக் காதலிக்கிறாள். இந்த ஜார்ஜிடமே அவனைக் காதலிக்க உதவி கேட்கிறாள்.

ஒருநாள் அந்தக் காதல் சரியான ஒரு சோகப் பாட்டைக்கூட பாட முடியாமல் கலைந்து போகிறது. உலகம் மாறவில்லை. கடலலைகள் உறையவில்லை. கூட இருக்கிறவர்களுமே பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் நான்கு பையன்கள் அவளைச் சுற்றி வந்து நெஞ்சிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெட்டிக் கடையில் இருந்த தின்பண்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவள். அவனுமே காதல் கடிதம் எழுதும்போது அம்மாவிடம் மத்தி மீன் வறுவலுக்குக் குரல் கொடுத்தவன்தான்.

காதல் மட்டுமல்ல படிப்பும் போயிருக்கிறது. ஃபெயில் ஆவது என்பது இவ்வளவு பெரிய விஷயம் என்பதே இப்போதுதான் விளங்குகிறது என்கிறான், நண்பன்.

ஆனால், பின்பொரு நாள் மூவருமே கல்லூரிக்கு வந்துவிட்டார்கள். அவர்களைப் பாதித்த மலையாள நடிகர்களின் தாடி இருக்கிறது. சூப்பர் ஸ்டார்களின் உடல்மொழி கை கூடியிருக்கிறது. குடி, புகை, அடிதடி எல்லாமே அவர்களுடைய ஆளுமைகளாக விரிகின்றன. ஜார்ஜ் வகுப்புக்குள் நுழையும்போது பல பெண்களுடைய கண்களும் அவன்மீது இருக்கின்றன என்பதைக் கவனிக்க முடியும். ஆனால், அவன் ஒரு அலட்சியத் திலகம் அல்லவா. தமிழ்ப் பேசுகிற மலர் டீச்சரிடம் எடுத்த உடன் மடக்குகிற ஒரு நெறி இருக்கிறது. அவனால் மீறி விட முடியாத சிரிப்பு. அவனால் தாண்டிக் குதிக்க முடியாத அளவு மென்மையான கேள்விகள். குடித்துவிட்டு வகுப்பிலிருந்து விட்ட மூவரையும்கூட மிகவும் அணைத்துக் கொள்கிற மாதிரி வகுப்பைவிட்டு வெளியேறச் செய்யமுடிகிறது அவளால். கல்லூரி முதல்வரிடமிருந்து நடவடிக்கையில்லாமல் லாகவமாக அவர்களை அவிழ்த்துக் கொண்டுவர அவளால் முடியும்.

முதலில் மலர் டீச்சரைக் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் பார்வையாளர்கள்தாம். அவள் ஓகே என்று சொல்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை அவள் யூகித்தறிகிறாள். கள்ளத்தனமான பார்வைகளில் அவன் தன்னைப் பார்த்தவாறு இருப்பதை அறிகிறாள். அவளுக்கு அவனைப் பிடிக்கிறது என்பதுகூட பார்வையாளர் அடையும் பரவசம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் பிரிவதற்கு முன்னால் கல்லூரியில் ஒரு பெரிய ஈவென்ட்டைத் தொடர்ந்து நடக்க வைத்து, மலர் பேசுகிற கண்களுடன் தனது முறைப் பையனுடன் ஊருக்குக் கிளம்பிப் போகிறாள். பிறகு அவளது நிலைமை வேறு. அவளால் தனது எந்த நினைவுகளையும் தொகுத்துக் கொள்ள முடியாது.

ஒரு கட்டத்தில் அவள் தனது முறைப் பையனை திருமணமும் செய்துகொண்டு விடுகிறாள்.

இது முன்பு போலில்லை.

மிகுந்த வலியும், வேதனையும், எரிகிற நினைவுகளுமாய் தனிமை. இரண்டாம் காதலும் கனவாய் பழங்கதையாய்ப் போகிறது.

பால் பேதமில்லை இதில். இன விருத்திக்கான அடிப்படை. நமது அடிப்படை உணர்வுகளில் பெரும் பாய்ச்சல் நிகழும் பருவத்தில் ஓர் இடைவெளி விழும்போது அது காயமாகவும் தழும்பாகவும் தங்குகிறது. விழுங்கும் அந்த அனுபவம்தான் வாழ்வை அறிந்துகொள்ள உதவுகிறது. இது உலகளாவிய உண்மை என்றில்லாத போதும், ஓர் ஆணுக்குப் பெண்ணை ஒரு பெண்ணுக்கு ஆணை உள்வாங்குகிற சிறிய திறப்பையாவது உண்டாக்குகிறது. நேரடியாய் முதலிரவில் சந்தித்து, மண வாழ்வைத் தொடங்குகிறவர்கள் இல்லையா என்றால், பல கோதாக்களில் இறங்க முடியாத இயலாமையின் விழுப் புண்களையாவது அவர்கள் பெற்றிருப்பார்கள். செலின் ஜார்ஜினுடைய கேக் ஷாப் மூடுகிற நேரத்தில் வந்து கேக் கேட்கிறாள். வேறு யாராவது ஒரு முதியவள் வந்து கேட்டிருந்தால் கொடுத்திருக்கமாட்டார்கள். இவள் கவர்கிறாள். முகத்தைப் பார்த்து மறுக்க முடியாமல் கேக்கைத் தயார் செய்கிறான். அப்பு என்கிற ஒரு வாலிப வயது ஆளுக்குப் பிறந்தநாள்.

தன்னை அறியாமல் கேக்கின்மீது க்ரீமினால் கேள்விக்குறியைப் போட்டுவிட்ட ஜார்ஜ் அப்பு யார் என்று தன்னிச்சையாகக் கேட்கிறான்.

அப்பு செலினின் சகோதரன்தான்.

வேறு ஒரு கேக்கை வாங்கிக்கொண்டு செல்கிற செலினின் பார்வை ஜார்ஜின் மீது நின்றதை, அவன் கவனிக்கும்போது நகர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறோம்.

அவனுக்குள்ளும் ஒன்று நகர்கிறது. பொருட்படுத்தாமல் நகர்கிறான்.

அடுத்தமுறை சந்திப்பில், செலின் தான் யாரென்று சொல்கிறாள். நமக்குள் பழக்கம் உண்டு என்கிறாள். நீ முற்றுகையிட்ட சுருட்டை முடிப் பெண் மேரி ஜார்ஜ் இருந்தாளில்லையா... நான் அவளுடைய தங்கை என்கிறாள். நாம் அவளை கவனித்திருக்கிறோம், ஒரு பொடிசு. மேரிக்கு வால் மாதிரி கூடவே இருந்தவள். சர்ச்சில் பாட்டு பாடிப் பின்னாலே வருவானே, அவனும் வருகிறான் என்று அக்கறையாய் ஈடுபட்டு, வருகிற பையன்களை விமர்சனம் பண்ணிக் கொண்டிருந்தவள். தாமதிக்காமல் நண்பர்களைக் கலந்துகொண்டு ஒரு ப்ரொபோசலுடன் நான் உன் வீட்டுக்கு வரலாமா என்று கேட்க, செலினிடம் கேட்கிற ஒரு சூழல்தான் நீடித்திருந்தது. அவள்  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். அடிப்போங்கடி என்று ஒரு விரக்தி வராமல் முடியாதில்லையா!

நண்பர்கள் அதை ஒரு சம்பவமாகவே கருதவிடாமல் அவனை மீட்கும்போது நான் நிச்சயம் செய்யப்பட்டவனுடன் தொடரவா என்று ஜார்ஜிடம் சம்மதம் கேட்கிறாள், செலின். அப்புறம் ஒன்றுமில்லை, கொக்கயினும், தாழ்வு மனப்பான்மையும், மூளை சூடும், சிடுசிடுப்புமான அந்த மாப்பிள்ளையை அவள் உதற, செலினின் மணப் பையனாகிறான் ஜார்ஜ்.

நான் சொல்லிவந்த இந்தக் கதை ஒரு ஸ்டோரி போர்ட் சித்திரங்கள் அளவுக்கும் இல்லை.

ஏனென்றால், முன்னமே சொன்னதுபோல கதைகளில் எல்லாம் என்ன இருக்கிறது?

கணம் தோறும் மூச்சுவிடாமல் பல்வேறு முகங்களின் முணுமுணுப்பு போன்ற உரையாடல்களுடன், சம்பந்தமில்லாத அல்லது புழக்கத்தில் இல்லாத ஷாட்டுகளுடன் நம்முடன் உறவு கொண்டவாறு இருக்கிறது படம். அது நமக்கே நிகழ்வது போன்ற பதபதைப்பை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறது. பெண் முகங்களைத் தேர்வு செய்ததில் நிவின் பாலி போன்ற நடிகனை நம்முடன் பிணைப்பு ஏற்படுத்துவதில் இருப்பது முன்யோசனையே. அது சிறிது பிசகியிருந்தால், நொறுங்கி இருந்திருக்கும். எடிட்டிங் முன்னிலை வகித்த படம். ஓவர்லாப்புகளில் மேதமையே உண்டு.

பிரேமம் தொடங்கவில்லை எனில், அங்கமாலி டைரீஸ் பழக்கப்பட்டிருக்காது. மலையாள சினிமா பற்றின இந்தத் தொடரில் இன்றைய நல்ல சினிமாவுக்குத் தளம் வைத்த படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், பிரேமம் அதற்கான முக்கிய இருக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். அமர வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல படம் பார்ப்பது ஒரு அனுபவமாய் உணரப்படும் என்பதால், மேலே நாம் விஸ்தரித்த ஒரு கதைகூட அர்த்தமற்றுப் போகும். ஏனெனில், இவற்றின் காட்சிகளின் வீச்சுக்கள் வேறு ஒரு மும்முரம் கொண்டவை.

அனுபமா பரமேஸ்வரன் மேரி ஜார்ஜாக வந்தது தற்செயலாய் இருந்திருக்க முடியுமா. இளமைப் பருவத்தின் வெகுளித்தனம் எல்லா கோணங்களிலும் வந்தது போலவே, எல்லா ஆண்களுக்கும் பிடிக்கக்கூடிய முதிர்ச்சியுடன் உச்சரிப்புகளுடன், பார்வையுடன் சாய் பல்லவி இருந்தார். மடோனா செபாஸ்டின் செலினாக!. அவரது இருப்பே போதுமானதாயிருந்தது என்று நினைக்கிறேன்.

குட்டிக் குட்டி பிட்டுக்களின் இணைப்பில் ஒரு தொடர்ச்சி நகர்கிறது என்பதில் ஒருபோதும் அதன் ஆளுமையை, மூடை, வர்ணங்களை இழக்காத ஒளிப்பதிவு. நல்ல பாடல்கள் வீரியமுள்ள நயத்துடன் இருந்தன. அவளு வேண்டறா, இவளு வேண்டறா எல்லாம் அடேங்கப்பா. மாதா, பிதா, குரு, தெய்வம் அப்படி எல்லாம் தானேடா சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது என்று காலேஜ் பியூனை அடிப்பதாகட்டும், பெட்ரோல் விலையை ஏற்றுவாயா நீ, பாப் மார்லி டி-ஷர்ட் போட்டால் பிடிப்பாயா என்று செலினின் மாப்பிள்ளையைப் பின்னும்போதும் சரி.. பல திசைகளில் முகம் திருப்புகிற எழுத்து. எதிரொலிகள் கேட்டவாறு இருக்கின்றன. எல்லா சொற்களிலும் ஓர் அசைவு இருந்தது.

அல்போன்ஸ் புத்திரன் படத்தின் சர்வ வியாபி.

அடுத்த படத்தில் அவர் மிகவும் கவனம் கொண்டவராய் இருந்தே ஆக வேண்டும். ஏனெனில், இது தற்செயல் என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. அப்படி இருக்க வாய்ப்பே கிடையாது என்று நம்புகிற என்னைப் போன்ற பலரும் மேலும் ஒரு முழுமைக்குக் காத்திருக்கிறோம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு