Published:Updated:

"சரீனா, செல்வி... பாலுமகேந்திரா சாயலில் 'காலா' காதலிகள்!"

`காலா' கதாநாயகிகள் சரீனா மற்றும் செல்வி குறித்த கட்டுரை.

"சரீனா, செல்வி... பாலுமகேந்திரா சாயலில் 'காலா' காதலிகள்!"
"சரீனா, செல்வி... பாலுமகேந்திரா சாயலில் 'காலா' காதலிகள்!"

பயணங்கள் மாறலாம், காதல் பக்கங்கள் ஒருநாள் பழுப்பு நிறம் அடையலாம். விரும்பிய காதல் தோல்வியில் முடிவதும், திருமணத்துக்குப் பின் காதல் கொள்வதும் இயல்புதானே என்று நினைத்தால், அதனால் உருவாகும் வலியின் படிநிலை ஒன்றுதான். அந்த வாழ்க்கையின் விளிம்பு நிலையை எதைக்கொண்டும் கணக்கிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆத்மார்த்தமான உணர்வை காதல் கொடுக்கிறது. நினைவுகள் நம்மைத் தின்பதும், காலம் அதற்குக் காயம் ஆற்றுவதும்போலத்தான் 'காலா'வின் சரீனாவும், செல்வியும்.!

ஆம், 'காலா' திரைப்படத்தில் இருக்கும் இந்த இரு கதாபாத்திரங்களைப் பற்றிதான் இங்கு பேசப் போகிறோம். முன்னாள் காதலியான சரீனா (ஹுமா குரேஷி), மனைவி செல்வி (ஈஸ்வரி ராவ்), கரிகாலன் என்கிற காலா (ரஜினி) வெவ்வேறு திசையில் செல்லும் இவர்கள், ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது ஏற்படும் காதல் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது 'காலா' திரைப்படம் என்று கூறலாம். 

சரீனா (ஹுமா குரேஷி)

தனக்கான உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் களத்தில் காலாவுக்கும், சரீனாவுக்கும் காதல் வருகிறது. இருவரும் நேரெதிர் பின்னணியைக் கொண்ட குடும்பமாக இருந்தும், வீட்டு சம்மதத்துடன் திருமணம் வரைக்கும் செல்கிறார்கள். தக்க சமயம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த எதிராளிகளின் சதியால் பிரிந்த இவர்கள், ஒருவரையொருவர் நலமறிந்து கொள்வதற்கே பல ஆண்டுகாலம் பிடிக்கிறது. வெவ்வேறு பாதையில் சென்று, திருமணம், குழந்தைகள் என்றாகிய பின் இவர்கள் மறுபடியும் சந்திக்கின்றனர். இத்தனை நாள்களாக 'வலி கடத்துதல்' மட்டுப்பட்டு இருந்திருக்கக்கூடும். திடீரென்று பழைய காதலனை சந்திக்க நேரும்போது, பிரிவின் வலியைவிட காதலின் தொனி ஒருபடி கூடி, கண்கள் ஒருகோடி கதை பேசுவதை 'கண்ணம்மா' எனும் ஒற்றைப் பாடலில் கூறியிருக்கிறார் பா.இரஞ்சித். 

சரீனாவின் காதணிகளையும், அவள் விரல்களையும் ரசிக்கும் அந்த நொடி, மனம் முதிர்ச்சி அடைய அடைய காதலும் ஒருபடி மெருகேறியிருப்பதை சொல்கிறது. "நான் உன் நினைவுல இருக்கிற அந்த பழைய சரீனாவா இருந்தா போதும்" என்ற சரீனாவின் வசனங்களுக்கு கண்ணீரை விலை கொடுத்த ரசிகர்கள் ஏராளம். காதலில் உணர்வுகளால் பேசும் சரீனா, வார்த்தைகளுக்கு அவ்வளவாக இடமளிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கையில், திடீரென தன் காதலனை எதிர்த்து, "உன் ரவுடித்தனத்துக்கு நான் பயப்படமாட்டேன்" எனச் சொல்லும் இடங்களில் நம் புருவம் ஆச்சர்யத்தில் உயரக்கூடும். யெஸ், தட் இஸ் இரஞ்சித்! பெண்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வித்தியாசப்படுத்தி சூழ்நிலைகளைக் காட்சியமைத்திருக்கும் இயக்குநர்.

``இனி கால்ல விழச் சொல்லாதீங்க, கை கொடுங்க, அதுதான் ஈகுவாலிட்டி" என்று கூறும் சரீனாவின் ஹீரோயிசம் வேற லெவல். தன் காதலை விட்டுக்கொடுக்கவும் முடியாமல், முட்டுக்கொடுக்கவும் முடியாமல் தயங்கும் அத்தனை பிரேம்களிலும் அழகாக தன்னை கட்டமைத்திருக்கிறாள் சரீனா எனும் கண்ணம்மா.

செல்வி (ஈஸ்வரி ராவ்)

வெளியில் போராடும் தன் வீட்டு ஆண்களை பாசக் கட்டுக்குள் அடைத்து ஆளும் தில்லானா திருநெல்வேலி பெண்ணாக ஈஸ்வரி ராவ். ``மாமா.. என்னை உனக்குப் பிடிக்கும்ல அப்போ ஐ லவ் யூ சொல்லு" என்று கணவனிடம் கொஞ்சுவது, வீட்டில் என்னதான் பஞ்சாயத்து நடந்தாலும், கணவன் பக்கமே நிற்பது, எப்போதும் பரபரவென இயங்குவது... என்று நம் வீட்டிலிருக்கும் பெண்களை நினைவு கூறியிருக்கிறார். ``ஐ நோ இங்கிலிஸ்... தேங்ஸ்" என்று சரீனாவிடம் இவர் பேசும்போது, 90'ஸ் கிட்களுக்கு தன் அம்மாதான் ஞாபகத்துக்கு வருவார்கள். பாலுமகேந்திரா படங்களில் வரும் எதார்த்த அழகியலைக் கொண்டிருக்கும் அப்படியொரு கதாபாத்திரம் செல்வி. 

``உங்களுக்கு மட்டும்தான் லவ்வு வருமா.. நான் எட்டாவது படிக்கும்போது என்னை லவ் பண்ண பெருமாள் என்னையே சுத்தி சுத்தி வந்தான். திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட்டைப் போடுங்க. நானும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வாரேன்" என்று தன் கணவன் மீது கொண்டிருக்கும் பித்தை வெள்ளந்தி குணத்தால் அழகுபடுத்தியிருக்கிறார். சரீனா தன் கணவனின் முன்னாள் காதலி என்று தெரிந்த பின்பும் அதைப் பற்றி ஒருவார்த்தை கேட்காமல், கணவனை அதே காதலுடன் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு செல்வி பக்குவப்பட்டவள். அன்பு, பக்குவம், பொறுப்பு, அரவணைப்பு இவை அனைத்தும் கலந்திருக்கும் செல்வி, நம்மில் ஒருத்தி! 

எப்போதும் ஒருவரின் வலியை மற்றொருவர் கடத்திட முடியாது. பழைய நினைவுகளின் மீது நாம் சில சமயங்களில் கோபம் கொள்வதுண்டு. ஆனால், 'அந்நினைவுகள் சூழ் உலகு இல்லையேல் காதலர்களாகிய நாம் என்றோ மரணித்திருப்போம்' என்பதை மற்றொருமுறை நினைவூட்டியிருக்கிறார்கள், காலாவின் இந்தக் கதாபாத்திரங்கள். திரையில் 'காலா' அழுத்தமாக அரசியலைப் பேசியிருந்தாலும், ஆழமான காதலை வெளிப்படுத்தியிருக்கும் அழகு சரீனாவையும், செல்வியையும் நம் நினைவினூடே எப்போதும் இருக்கச் செய்யும்!