Published:Updated:

``இதெல்லாம்தான் பிக் பாஸ் வீட்டில் புதுசு!" - `பிக் பாஸ் 2' வீட்டில் ஒருநாள் அனுபவம் #VikatanExclusive

``இதெல்லாம்தான் பிக் பாஸ் வீட்டில் புதுசு!" - `பிக் பாஸ் 2' வீட்டில் ஒருநாள் அனுபவம் #VikatanExclusive
``இதெல்லாம்தான் பிக் பாஸ் வீட்டில் புதுசு!" - `பிக் பாஸ் 2' வீட்டில் ஒருநாள் அனுபவம் #VikatanExclusive

'பிக் பாஸ்' வீட்டின் ஒருநாள் அனுபவம்

சில நாள்களில் தொடங்குகிறது `பிக் பாஸ்' சீஸன் 2. தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டின் ஒருநாள் அனுபவத்துக்குப் பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார்கள். `பிக் பாஸ்' வீட்டின் ஒருநாள் இப்படித்தான் இருந்தது!

வீட்டை நெருங்கியவுடன் நாம் பார்த்த முதல் லொகேஷன் பரணி வீட்டை விட்டு தப்பிக்க முயன்ற ஸ்பாட்!. சிரித்து முடிப்பதற்குள் கண்கள் ஒரு கருப்புத் துணியால் மூடப்பட்டது. கலந்துகொண்ட அனைத்துப் போட்டியாளர்களின் கண்களையும் மூடிவிட்டு, பிக் பாஸ் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றார்கள். ஐந்து நிமிட இடைவேளைக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டின் வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன், கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அவிழ்க்கப்பட்டது. வீட்டின் முகப்பில் எழுதப்பட்டிருந்த `BIGG BOSS' எழுத்துகள்தான் கண்ணில் பட்ட முதல் விஷயம். ஒவ்வொரு இடத்தைப் பார்க்கும்போது, கடந்த சீஸனின் நடந்த ரகளையான நிகழ்வுகள் நினைவில் வந்துபோனது. நடையைத் தொடர்ந்தோம்.

கடந்த முறை அமைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் செட்டிற்கும் இந்த முறை அமைக்கப்பட்டிருந்த பிக் பாஸ் செட்டிற்கும் சின்ன சின்ன வித்தியாசங்களே!. உள்ளே நுழைந்தவுடன் வலது புறம் நீச்சல் குளம், இடது புறம் உட்கார்ந்து பேச நாற்காலிகள். நடுவே இருபக்கமும் விளக்குகள் பொருத்தி பிக் பாஸ் வீட்டின் வாசல் கதவு நம்மை இனிதே வரவேற்றது. வீட்டின் மெயின் கேட்டை நெருங்கி வலது புறம் திரும்பிய எங்களுக்குக் காத்திருந்து மிகப்பெரிய அதிர்ச்சி! 

கடந்த சீஸனில் இல்லாத ஒரு புது விஷயம், இந்த பிக் பாஸ் சீஸனில் இருக்கிறது. அது, `பிக் பாஸ் ஜெயில்!'. உள்ளே ஏசி இல்லை, ஃபேன் இல்லை, உள்ளே இருப்பவருக்குச் சாப்பாடு கொடுக்க வழியில்லை, மெத்தை இல்லை, தலையணை இல்லை... என எதுவுமே இல்லாத அந்த ஜெயிலில் இருந்த ஒன்றே ஒன்று பலகையால் செய்யப்பட்டிருந்த கட்டில் மட்டும்தான். `இந்த பிக் பாஸ் சீஸன்ல தப்பு பண்றவங்களுக்கு செம ஃபனிஷ்மென்ட் இருக்கு!' என நினைத்துக்கொண்டு, வலது காலை எடுத்து வைத்து லிவிங் ரூமுக்குள் நுழைந்தோம்.

லிவிங் ரூம் நடுவே நின்றால் எதிரே கிச்சன், வலது புறம் இரு பாலருக்குமான பெட் ரூம்கள், இடது புறம் சோஃபா. கடந்த முறை இதே செட்டப்பில்தான் பிக் பாஸ் வீடு அமைக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு சின்ன மாற்றம். முதல் சீஸனில் சோஃபா இருந்த ஏரியாவுக்கு இடது புறத்தில் இருந்த கன்ஃபஷன் ரூம், இந்த முறை வலது புறம் அமைக்கப்பட்டிருக்கிறது. பேங்க் லாக்கர் மாடலில் கதவுகள் டிசைன் செய்யப்பட்டிருந்தன. பெண்களுக்கான பெட் ரூமில் புதிதாக ஒரு பாத்ரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படியே செட்டை நோட்டமிட்டுக்கொண்டிருக்கையில், நாம் எதிர்பார்த்த பரிட்சயமான அந்தக் குரல் கேட்டது. ஆம்... பிக் பாஸ் நம்மை அழைக்கிறார்.  

`போட்டியாளர்கள் அனைவரும், லிவிங் ரூமில் இருக்கும் சோஃபாவில் அமரவும்!' என பிக் பாஸ் குரல் கேட்டதும், மிகுந்த எதிர்பார்ப்போடு பிக் பாஸின் அடுத்த ஆர்டருக்காகக் காத்திருந்த எங்களை அவருக்கே உரிய பிரத்யேகக் குரலால் வரவேற்றார். சிறிது நேரம் கழித்து, ஒருவருக்கொருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். இந்தச் சூழலில் ஸ்டோர் ரூமின் பெல் அடித்தது. உள்ளே மதிய உணவு. சாப்பிட்டு முடித்துவிட்டு உண்ட மயக்கத்தில் ஒருவர் லேசாகக் கண் அசர, சுத்தியிருந்த அத்தனை ஸ்பீக்கர்களிலிருந்து நாய் குரைக்க, பிரகாஷ் ராஜ் போல `நான் தூங்கல... நான் தூங்கல...' என்றபடி ஜோதியில் ஐக்கியமானார், அவர். பொழுது போகாமல்  நீண்டநேரம் பிக் பாஸ் வீட்டையே சுற்றிக்கொண்டிருந்த எங்களுக்குச் சடாரென ஒரு ஐடியா. அங்கிருக்கும் டிஷ்யூ பேப்பர்களைக் குவித்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரைக்கொண்டு பந்து தயாரித்தோம். கிச்சனில் இருந்த டீ டிரேவை `பேட்'டாக்கி கிரிக்கெட் விளையாடத் தொடங்கினோம். இப்படியே விளையாடிக்கொண்டிருக்க லேசாக இருட்டியது. பிறகு கொஞ்சம் ஜாலி அரட்டை. வழக்கம்போல மீண்டும் நமது பிக் பாஸ் குரல்!  

`நீங்கள் எலிமினேட் செய்ய விரும்பும் இருவரின் பெயரை கன்ஃபஷன் ரூமில் காரணத்தோடு சொல்லவும்!' என பிக் பாஸ் பணிக்க, ஒவ்வொருவராக உள்ளே சென்று நாமினேட் செய்தோம். எவிக்‌ஷன் பிராசஸ் முடிந்தபின், `கண்ணிவெடி' என்ற ஒரு டாஸ்க்கைக் கொடுத்தார், பிக் பாஸ்.

உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஏழு ஜோடிகளாகப் பிரியவேண்டும். இரு பிரிவினரின் சரிபாதி நபர்களுக்குக் கண்கள் கட்டப்படும். கண்கள் கட்டப்பட்ட நபர், `கண்ணிவெடி'களாகச் சித்திரிக்கப்பட்ட பேப்பர் கப்களை மிதிக்கக் கூடாது. அதற்கு, மற்றொரு நபர் உதவி செய்யவேண்டும்.  எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும், எங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே கேம் டாஸ்க் இதுதான் என்பதால், கொஞ்சம் உற்சாகமாகவே விளையாடினோம்!

இந்த ஏலியன் லெவல் விளையாட்டை முடித்துவிட்டு, டின்னருக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். மதியம் கொடுத்த அதே சாப்பாடு ஐயிட்டங்களை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இரவு டின்னரை அனுப்பி வைத்தனர். வேறுவழி இல்லையே! அதையே சாப்பிட்டு முடித்தபின் எங்களுடைய உடைகளை அனுப்பி வைக்கும்படி. பிக் பாஸ் வீட்டில் இருந்த 60 கேமராக்களுக்கு முன் நின்றும் முறையிட்டோம். ரொம்ப தாமதமாகவே கரிசனம் காட்டிய பிக் பாஸ், எங்களுக்கான மாற்றுத் துணியை அனுப்பி வைத்தார். முக்கால் டவுசரை மாட்டிக்கொண்டு `நீந்தி நீந்தி நீந்தி... நான் தண்ணியில போவேன் நீந்தி...' என சின்ஷான் ஸ்டைலில் நீச்சல் குளத்தில் ஓர் ஆட்டத்தைப் போட்டோம். பிறகு, மறுபடியும் வேறு வழியில்லை என்பதால், பேப்பர் பந்தையும் டீ டிரேயையும் கையிலெடுத்தோம். வெறிகொண்ட எங்கள் ஆட்டத்தில் அனைத்துப் பந்துகளும் பெவிலியனைத் தாண்டி, அதாவது பிக் பாஸ் வீட்டைத் தாண்டி பறந்துவிட்டது. 

மீண்டும் பந்தை உருவாக்க கொஞ்சம் எனர்ஜி செலவாகும். எனர்ஜி செலவானால், பசிக்கும். பசித்தால், மறுபடியும் பிக் பாஸிடம் மன்றாட வேண்டும். மன்றாடினால், தலை வலிக்கும். தலை வலித்தால், காபி டீ தேவைப்படும்... இப்படிப் பல காரணங்கள் கண்முன் கடந்து சென்றதால், அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டோம்.

சிறிதுநேர அரட்டைக்குப் பின், கடுமையான முயற்சிக்குப் பின்... தூங்கச் சென்றோம். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, `ஆளப்போறான் தமிழன்...' பாடல் ஒலித்தபோதுதான், விடிந்தது புரிந்தது. காலை டிபனை முடித்துவிட்டு லிவிங் ரூமில் இருக்கும் சோஃபாவில் அமரும்படி பிக் பாஸ் உத்தரவிட்டார். எவிக்‌ஷன் பிராசஸ் நடந்தது அப்போதுதான்! எலிமினேட் ஆன நபர் முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற, சிறிய இடைவேளைக்குப் பிறகு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெளியேறினோம். எங்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும், `ஆளப்போறான் தமிழன்...' பாடல் ஒலிக்க, சின்னதாக ஸ்டெப் தெரியாத ஓர் ஆட்டம். பிக் பாஸ் வீட்டில் கேட்டதும் கிடைத்த ஒன்றே ஒன்று இந்தப் பாடல்தான்!  

பிக் பாஸ் வீட்டில் எங்களது 24 மணி நேரம் இப்படித்தான் கழிந்தது. பிக் பாஸ் வீட்டுக்கு அருகிலேயே கமல் பேசும் செட் தயாராகிக்கொண்டிருந்தது. இறுதியாக அந்த செட்டைப் பார்த்துவிட்டு, இனிதே வீடு திரும்பினோம், `இது பிக் பாஸ் வீடு இல்லை' என்ற நிம்மதி நிரம்பியிருந்தது!

அடுத்த கட்டுரைக்கு