Election bannerElection banner
Published:Updated:

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15
"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

``மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் `ஆனந்தம்' படத்துக்கும் பங்குண்டு!" - `மலையாள கிளாசிக்' பகுதி 15

`ஆனந்தம்' - ஒரு கல்லூரிக் கதையை எடுத்துக்கொண்ட படம் என்று சொல்லலாம்.

யோசித்துப் பார்த்தால் இந்தியா முழுக்க அதற்கு என்று சலித்த டெம்ப்ளேட் இருக்கிறது. குறிப்பிட்ட காலங்களில் தமிழில்கூட அரைத்த மாவை அரைத்துப் புளிப்பு தோசைகளைத் திணித்தார்கள். `சேது'வில் ஏன் வகுப்பறைகள், கேன்டீன், மைதானம் போன்றவை காட்டப்படவில்லை என்று எஸ்.வி.சேகர் கொதித்தார். அந்த அளவுக்கு மக்கள் கல்லூரிப் படங்களின் ஆர்டரை மனப்பாடம் செய்து வைத்திருந்தார்கள். அதிலிருந்து தாண்டிக் குதித்து செய்த படங்களெல்லாம் வெற்றி பெற்றன. குறைந்தபட்சம் சிறு வித்தியாசம் காண்பிக்க முற்பட்ட படங்களை ஜனங்கள் ரசித்தார்கள். `ஆனந்தம்' என்கிற இந்தப் படமேகூட சிறிய ஒரு மாற்றத்தைதான் வைக்கிறது.

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

படம் தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் கதை மாந்தர்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள். ஓர் உல்லாசப் பயணம். முதலில் ஹம்பி. பின்னர் கோவா. சம்பவங்கள் முழுக்க முழுக்க பொருத்தப்பட்டிருப்பது இந்த இடங்களில்தாம். இஞ்ஜினீயரிங் ஸ்டூடன்ட்ஸ் அவர்களுடைய புராஜெக்டையும் இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உபரி செய்தி.  

நான் இடுக்கியில் இருந்தபோது கட்டப்பன என்கிற ஊரில் இரவுக்காட்சி பார்த்தேன். படம் தொடங்கியதுமே முதல் காட்சி பிடிக்கவில்லை. கிளம்பப் போகிற பேருந்தில் பையன்கள் சரக்கு பாட்டில்களை ஒளித்து வைக்கிறார்கள். அதற்கு இவ்வளவு பில்டப்பா என்று பட்டது. எழுந்து நகர்ந்து விடலாமா என்றுகூட நண்பர்களிடம் கேட்கத் தோன்றியது. ஆனால், போக போக மெதுவாய் நகரும் கதையினுள் சதை பிடிக்கத் தொடங்கியது. மேற்சொன்ன வரியால் படம் முழுக்கக் கதையால் நிரம்பியது என்று கற்பனை செய்துகொள்ளக் கூடாது. படத்தில் பெரிய கதை சொல்லி நம்மை வதைக்கவில்லை என்பதுதான் முக்கிய விசேஷம். எனினும் வர வேண்டியது வந்திருந்தது.

சில யோசனைகள், சில விவாதங்கள் இவற்றுக்குப் பிறகு ஹம்பி, கோவாவுக்குச் செல்ல நிர்வாகம் அனுமதிக்கிறது. மாணவ மாணவிகள் தங்களுக்கே உரிய ஆர்வமிகுதியாலும்  சந்தோஷங்களுடம் கிளம்புகிறார்கள். வருண் தியாவிடம் காதல் சொல்லி ஏமாந்தவன். அக்ஷய் அவளிடம் காதலைச் சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவன். தவிர்த்துக்கொண்டிருப்பவன் என்றுகூட சொல்லலாம். தியா பேருந்து கிளம்பி நகரும்போது காரில் வந்து வழிமறித்து ஏறிக்கொள்கிறாள். அக்ஷய் பிறவிப்பேறு அடைகிறான். வருண் முகத்தைப் புலிபோல வைத்துக்கொண்டிருக்கிறான். பயணம் தொடங்குகிறது. படத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு பெண்தான் இந்தப் பயணக் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொருவரைப் பற்றின அறிமுகமும் இருந்தது.

புட்டி இருக்கிறான். புகைப்படம் எடுக்கத் தெரிந்தவன். ஒரு விதத்தில் நண்பர்களுக்குள்ளே எல்லோருக்குமான பாலம். கௌதம் ஒரு ராக் ஸ்டார். தேவிகா அவனது காதலி. அவனது கூச்சல் பாடல்கள், டீ ஷர்ட்ஸ், தாடி இவற்றுக்காக அவனை ஆராதித்துக் காதலித்துக் கொண்டிருப்பவள். எல்லோருக்கும் சிரித்து, எதையுமே யாரிடமும் பேசாமல், தன் பாட்டிற்கு வரைந்து கொண்டிருக்கிற ஒரு பெண் கதாபாத்திரம் உண்டு. இவர்களை எல்லாம் வழி நடத்துவதற்காக சாக்கோ என்கிற ஆசிரியர் உடன் வந்திருக்கிறார். லவ்லி என்கிற ஆசிரியையும்கூட. இருவரும் பஸ்ஸில் ஆண்களையும் பெண்களையும் தனி தனியாய் உட்கார வைத்தார்கள். பஞ்சையும் நெருப்பையும் பிரித்துத்தானே வைக்க முடியும்?! கண்டிப்பாய் இருக்கிறார்கள்.

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

ஹம்பி.

ஒரு காலத்தில் லட்சங்களில் மக்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது ஆயிரங்களில் கொஞ்சம் மக்களைத் தவிர்த்து வெறுமையாய் கிடக்கிறது. எனினும் கிருஷ்ண தேவராயனின் அந்தக் கலைநகரம் வியப்பூட்டுவதாய் பரந்து விரிந்திருக்க அனைவரும் ஒருவகை கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். தியா அக்ஷய்க்குப் பல சந்தர்ப்பங்களிலும் நெஞ்சில் பால் வார்க்கிறாள் என்று சொன்னால் போதுமல்லவா. பையன்கள் இரவு நேரத்தில் பாட்டில்களைத் தேடினால் காணவில்லை. பெண்கள் நகர்த்தியிருக்கிறார்கள். எல்லோருமாகக் குடித்துச் சிரித்து ததும்பித் திரும்பி வந்தால், சரியான பொறி. சாக்கோ தனது இறுதித் தீர்ப்பினைச் சொல்கிறார். பயணம் கேன்சல். எல்லாவற்றையும் மூட்டை கட்டுங்கள். நாம் திரும்பித் செல்கிறோம். குடித்துவிட்ட பத்துப் பேரால், யோக்கியமாயிருந்த பத்துப் பேருக்கும் தண்டனையாகிவிட்டது. ஸ்ட்ரிக்ட் சாக்கோவிடம் லவ்லி கணைக்கிறாள்.

உண்மையில் லவ்லியை இந்த நாள்களில் யாரோ பெண் பார்க்க வருவதாக ஒரு ஏற்பாடு இருந்தது. அவள் இந்த டூரை சாக்காக வைத்து எகிறி வந்திருக்கிறாள். இனிமேல் வாய்ப்பில்லை. திரும்பிப் போனால் அந்தப் பையன் பெண் பார்க்க வருவான். அவனுக்குப் பிடித்துப் போகும். கல்யாணத்தைப் பெற்றோர் திணிக்கும்போது அதைத் தடுத்து நிறுத்த முடியாது. கதை முடிந்தாயிற்று.

சாக்கோ கோஷ்டிகளைக் கூப்பிடுகிறார். இந்த ஒரு முறை தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு என்கிறார். பயணத்தைத் தொடரப் போகிறோம். விஷயம் சிம்பிள். சாக்கோவுக்கு லவ்லியின் மீது ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது. அவளுக்குமேகூட கொஞ்சம் இருக்கலாம்.

லவ்லியிடம் பொண்ணு பார்க்க வர்ற பையன் அப்படியே போவட்டும், நாம இப்படி கோவா போலாம் என்று அந்தப் பிரச்னையை அவர் முடித்து வைத்ததில் கோவாவை நோக்கிய பயணம் தொடங்குகிறது. கௌதம் மெதுவாய் தேவிகா பக்கத்தில் அமர்ந்துகொண்டு விட்டிருக்கிறான். தியா அருகே அமருவதற்குப் பையன்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததில் அக்ஷய்க்குத் தியாவிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஒரு பொன் தருணம்தான் அவனைப் பொறுத்தவரையில். அவள் அவனது தோள்களில் சாய்ந்து உறங்குகிறாள். சாக்கோவுமே லவ்லியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு விட்டார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

தியா அக்ஷயிடம் நீ என்னை லவ் பண்ணவில்லையா என்று கேட்கிறாள். இல்லவே இல்லை என்று தனது ஆண்மைத்தனத்தை நிறுவிவிட்டு அந்த நட்பை உறுதிபடுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் தனது பயத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அபாயமான சாகசத்தில் ஈடுபட்டு முடித்து, அந்தப் பெருமிதத்தின் வளைவில் ஒரு சரியான ஆண் பிள்ளையாய் அவனால் ஐ லவ் யூ சொல்ல முடிகிறது. இன்னொரு கட்டத்தில் தியா அவனிடம் என்னை முத்தமிடு என்றே சொல்கிறாள். ஆனால், ஒரு போதை நேரத்தில் நண்பர்களுக்குள் பிணக்குகள் வெடிக்கின்றன.

தியாவே கூட்டம் விட்டு ஒதுங்குகிறாள்.

கோவாவின் பெரிய பார்ட்டியில் இணைந்து கொள்வதாக ஒரு திட்டம் இருந்தது, புது வருடம் பிறந்து வரப்போகிற டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி இரவு. எல்லாம் நமத்துப்போனதுபோலக் கிடக்கிறது. புட்டி பையன்களுடன் சமரசம் பேசுகிறான். தனது உளறல்களுக்கு மன்னிப்பு கேட்கிறான். `தில் சாத்தா ஹை' ஷூட்டிங் ஸ்பாட்டில் நண்பர்கள் புகைப்படமெடுத்துக் கொள்கிறார்கள். பெண்களையும் சமாதானம் செய்கிறார்கள். கௌதம் நான் கத்துவது பெற்ற தாய்க்குக்கூட அடுக்காது என்பதை தனது டீமுக்குச் சொல்லிவிட்டு, தாடியை மழித்துவிட்டு தேவகியிடம் நான் இவ்வளவுதான், எனக்கு ஜேசுதாஸ்தான் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறான். பழைய ஒற்றுமைக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். வழக்கம் போன்ற க்ளைமாக்ஸ் இடர்களுடன் எல்லோரும் ஒரு புதிய வருட பார்ட்டியை என்ஜாய் செய்கிறார்கள். அதற்கு அக்ஷயின் அண்ணன் உதவியிருக்கிறான். தனியாய் இதைச் சொல்லவே வேண்டும், அண்ணன் நிவின்பாலி.

படம் மீண்டும் கல்லூரியில் முடிகிறது.

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

இந்த ஒரு பயணத்தால் வாழ்க்கை வேறு முகம் தரித்துவிடவில்லை. எனினும் எல்லோரிடமும் சில மாற்றங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். இதுவரையில் இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டு வந்தவள், படத்தில் ஒருபோதும் பேசாத அந்த ஓவியப் பெண்தான். நிவின் பாலி ஓரிடத்தில் சொல்வதுதான். அவனவன் வாழ்க்கையை அவனவன் தீர்மானித்து, அதைக் கொண்டாட்டத்துடன் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. மற்றவர்களுக்காக நாம் தியாகம் செய்துகொண்டிருக்கும்போது நாம் இழந்துகொண்டிருப்பது கொஞ்ச நஞ்சமல்ல. உங்கள் வாழ்க்கையின் இந்தத் தருணங்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் மறுபடைப்பு செய்யமுடியாது.

படம் அல்ல பாடம் என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட முடியாது. பாடம் அல்ல படம்தான்.

படத்தின் தொனியில் நான் முக்கியமாய் கருதியது முகங்களைத்தாம். அவற்றில் உயிர்த்துடிப்பு இருந்தன. நடையுடை பாவனைகள் என்போமே, யூத் மல்லுக்களை கொண்டு வந்திருந்தார்கள். எனினும் வசனங்களின் அணுகுமுறைகளை முற்றிலுமாக மாற்றியிருக்க முடியும். கதைத் தேர்வு அதை நடைமுறைப்படுத்தியதற்கான நோக்கம் யாவுமே ஜருராக இருந்தபோதிலும், நாடகங்களில் கூர்மை வந்திருக்க வேண்டும். எப்படியும் இந்தமாதிரி ஒரு படத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்போது `பூமரம்' என்கிற படம் வந்தது. அது இந்த வரிசையில் முழுமையாய் வெற்றி பெற்றது என்று சொல்லவேண்டும்.

படத்தில் இசை கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஒளிப்பதிவாளரின் கண்கள் எல்லாத் துண்டுகளிலும் இருந்தன. கதை சொல்லிக்கொண்டே வருகிற முனைப்பு இறுதி வரையில் கட்டுப்பாட்டுடன் இருந்தது.

ஒன்றைச் சொல்லவேண்டும், நமது சினிமாக்களில் இளைஞர்கள்தாம் நாயகர்கள். அது என்ன சாபக்கேடு என்பதே தெரியவில்லை. எல்லாக் கிழவர்களுமேகூட இளைஞர்களாய் வேடம் போட்டு மக்களை வதை செய்வது ஒருபோதும் நியாயமாய் இல்லை. அவர்கள் காதலிப்பது, மரத்தைச் சுற்றி பாட்டு பாடுவது, அல்லது வெளிநாட்டுத் தெருவில் காதலிக்கு முன்னால் சர்க்கஸ் செய்வது போன்றவற்றைத் தாண்டி காதலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிற காட்சிகள் எல்லாம் வருகின்றன. இதெல்லாம் குற்றம் என்கிறேன். முறைப்படி இதற்கு எதிரான ஒரு போராட்டம் கிளர்ந்து யாராவது தீக்குளிக்கவே வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு ரகசிய ஆசை வந்து விடுகிறது. அந்த அளவில் இந்தப் பையன், பெண்களின் படம் அவர்களுடைய படமாகவே இருந்ததில் சந்தோசம். நிஜமாகவே இந்தமாதிரி படங்களில் ஓர் எழுப்புதல் உண்டு. வாலிப வயோதிக மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கேரன்டி.

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

புதிய அடவுகள் இருந்தன. ஹம்பியைச் சுற்றிக் காட்டியதில் ஒரு புத்திசாலித்தனம் இருந்தது போலவே, படமெங்கிலும் அது எல்லாக் காட்சியிலும் இருந்தது. எவ்வளவு பெரிய வெளியாயினும், எத்தனை பேர் குழுமியிருந்தாலும் அதைப் படமாக்குவதில் தெரிந்த சகஜம் மகிழ்ச்சி. இது எல்லாவற்றையும்விட கதைகளை வைத்து விளையாடும் கேரளத்தில் அரை சிட்டிகை கதையை எடுத்துக்கொண்டு நான்கு கோடியில் படமெடுக்கிற துணிச்சல் ஒன்றிருந்தது பாருங்கள், அதைப் பாராட்டவே வேண்டும். அப்புறம் அது வெற்றி பெற்றதற்கும். இயக்குநர் பெயர் கணேஷ் ராஜ்.

இதுவரையில் நடந்தது இருக்கட்டும், கணேஷ் ராஜ் இதைக்காட்டிலும் மேலான ஒரு பாய்ச்சல் நிகழ்த்தக்கூடியவர் என்று நம்புகிறேன். மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் இவருக்குமே பங்குண்டு என்பது எனது கணிப்பு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு