Published:Updated:

"என்னால யாருக்கு என்ன கெடுதல் வந்துச்சு? நான் செஞ்ச ஒரு தவறைச் சொல்லுங்க?!" மமதி சாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"என்னால யாருக்கு என்ன கெடுதல் வந்துச்சு? நான் செஞ்ச ஒரு தவறைச் சொல்லுங்க?!" மமதி சாரி
"என்னால யாருக்கு என்ன கெடுதல் வந்துச்சு? நான் செஞ்ச ஒரு தவறைச் சொல்லுங்க?!" மமதி சாரி

"இந்தப் போட்டியின் அடிப்படையே, 'ஸ்ட்ராங்கான போட்டியாளரை வெளியேற்றணும்' என்பதுதான். என்னால யாருக்கு என்ன கெடுதல் வந்துச்சு? நான் செஞ்ச ஒரு தவறைச் சொல்லுங்க? நான் கோபப்பட்டு யார்கிட்டயும் பேசலை; மத்தவங்க மனசு புண்படும்படியாவும் நடந்துக்கலை."

தொலைக்காட்சித் தொகுப்பாளர்களில் மக்களுக்கு மிகப் பரிட்சயமானவர், மமதி சாரி. காரணம், அவர் பேசும் அழகுத் தமிழ். விஜய் டிவி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராகவும் வெளியேறியிருக்கிறார். தன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுகிறார்.

" 'பிக் பாஸ்' வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது?"

"விஜய் டிவியில நீண்ட காலம் தொகுப்பாளராக வொர்க் பண்ணியிருக்கேன். அதனால, எனக்கும் அந்த சேனலுக்கும் நீண்ட கால பந்தம் உண்டு. 'பிக் பாஸ்' சீசன் 1-லயே என்னைக் கூப்பிட்டாங்க. அப்போ மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் நான் தயாராக இல்லை. கடந்த ஆண்டு இறுதியில, 'மீண்டும் மீடியா பயணத்தை ஆக்டிவாக தொடரலாம்'னு முடிவெடுத்தேன். அதன்படி 'வாணி ராணி' சீரியல்லயும் நடிச்சேன். இந்நிலையிலதான், 'பிக் பாஸ்' 2-ம் சீசன்ல போட்டியாளரா கலந்துக்க வாய்ப்பு வந்துச்சு. 'ஓ... ரெடி'னு சந்தோஷமா கலந்துகிட்டேன்."

"ஆனா, போன வேகத்துலேயே 'பிக் பாஸ்'ல இருந்து வெளியேறிட்டிங்களே..."

"இந்தப் போட்டியின் அடிப்படையே, 'ஸ்ட்ராங்கான போட்டியாளரை வெளியேற்றணும்' என்பதுதான். என்னால யாருக்கு என்ன கெடுதல் வந்துச்சு? நான் செஞ்ச ஒரு தவறைச் சொல்லுங்க? நான் கோபப்பட்டு யார்கிட்டயும் பேசலை; மத்தவங்க மனசு புண்படும்படியாவும் நடந்துக்கலை. பொதுவா கோபப்பட்டால் பிரச்னை பெரிசாகுமே தவிர, தீர்வு கிடைக்காது. அதனால கோபமே வந்தாலும், அதை பிறர்கிட்ட எப்பவும் காட்டமாட்டேன். பொறுமையா யோசிச்சு, பிறர் மனசு கஷ்டப்படாம செயல்படுவேன். அப்படித்தான் அந்த வீட்டிலும் இருந்தேன். கோபம் வர்றது மனிதனுக்கு இயல்புதான். ஆனா, அது நியாயமான காரணங்களுக்கு வந்தால் சரிதானே. ஆனால், குழந்தைங்க மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, பிறரை டார்கெட் பண்ற மாதிரி செயல்பட்டால் அது எப்படி நியாயமாகும்? அந்த வீட்டில் பலரும் அப்படித்தான் செயல்பட்டாங்க. ஆனா, நான் அப்படி நடந்துக்கலை. எல்லா போட்டியாளர்கள்கூடவும் நல்லா பேசினேன்; பழகினேன். பலப் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தேன். பிக் பாஸ்' வீட்டில் எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடிச்சேன். எல்லோருக்கும் சமையல் செய்ற பொறுப்பை திறம்பட செஞ்சேன். மும்தாஜூம் நானும் சில வேளைகள் பட்டினியாவும் இருந்திருக்கிறோம். இப்போ எனக்குப் புகழ் வேணும்னு நான் அந்த நிகழ்ச்சிக்குள்ள போகலை. அதையெல்லாம் எப்பவோ நான் பார்த்துட்டேன். அதனால எலிமினேட்டாகி வெளிய வந்ததில் ஆதங்கம் இல்லை."

"நீங்க 'பிக் பாஸ்' வீட்டுலயும் தொகுப்பாளர் தோரணையுடனேயே நடந்துகிட்ட மாதிரி இருந்துச்சே..."

"நான் எப்போதும் நானாவே இருக்கவே விருப்பப்படுவேன். அப்படித்தான் என் வீட்டுலயும், வெளியிடங்கள்லயும் நடந்துப்பேன். 'பிக் பாஸ்' வீட்டில், நான் தமிழ்ல கோர்வையா பேசினேன். அதைப் பலர் சரியா கூர்ந்து கவனிக்கலை. அதனால நான் பேசினது பலருக்கும் புரியாமல் இருந்திருக்கலாம். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அதுக்காக என் இயல்பான குணத்தை மாத்திக்க எனக்கும் விருப்பமில்லை. மேலும், நான் மத்தவங்க கேள்விக்கு தாமதமா பதில் சொல்றதாகவும் சொல்லப்பட்டுச்சு. அது யோசனையே கிடையாது. நான் பேசுறது மத்தவங்களுக்குப் புரியணும் என்பதற்காக கவனத்துடன் பேசியதின் வெளிப்பாடு."

" 'போட்டியாளர்கள் பலரும் போலியாக இருக்காங்க'னு சொல்லப்படும் கருத்துக்கு உங்க பதில்..."

"உண்மைதான். நான் என்னோட உண்மையான முகத்தோடுதான் இருந்தேன். மேலும் சிலர்கூட உண்மையான முகத்தோடுதான் இருக்காங்க. போலியான முகங்கள் எப்படியும் ஒருநாள் வெளிவரும்."  

" 'எஜமானர் - பணியாளர்' டாஸ்கில் ஆண்கள் சிலர் வரம்பு மீறி நடந்துகிட்டாங்களே. அதை கமல்ஹாசனும் பெரிசா சுட்டிக்காட்டலையே..."

" அந்த டாஸ்க்குக்கான உண்மையான அர்த்தம், ஆண் போட்டியாளர்களுக்குச் சரியா புரியலைனு நினைக்கிறேன். சக்கைப் பிழிப் பிழிஞ்சாதான், உதவியாளர் வேலை செய்றதா அர்த்தம்னு நினைச்சாங்க. பெண்களின் வேலை செய்யும் திறனையும் மீறி எங்ககிட்ட வேலை வாங்கினாங்க. சமையல், துணிதுவைக்கிற வேலைகளைச் செஞ்சு என் கையில நிறைய காயங்கள் உண்டாச்சு. என் வீட்டுலயும் பணியாளர் இருக்காங்க. அவங்களை குடும்பத்தில் ஒருத்தராதான் நடத்தறேன். இந்த டாஸ்க் மூலம், பெண்கள் மேல ஆண் போட்டியாளர்கள் வெச்சிருந்த மதிப்பீட்டை புரிஞ்சுக்க முடியுது. கையில ஒரு அதிகாரம் கிடைச்சதும், அதை எப்படிச் செய்யலாம்னு நினைக்கிறது அறிவு. எப்படி வேணாலும் செய்யலாம் என்பது அசிங்கம். சில ஆண்கள் தங்களோட உள்ளாடையை எங்கிட்ட துவைக்க கொடுத்தாங்க. இதெல்லாம் தவறில்லையா? செய்தாங்க. அதெல்லாம் தப்புன்னு அவங்க மனதளவில் உணரவும் இல்லை. பெண்கள் எஜமானர்களான நேரத்தில், நான் பொன்னம்பலத்தையும், மும்தாஜ் அனந்த் அவர்களையும் பணியாளர்களா செலக்ட் பண்ணினோம். காரணம், அவங்க உடல்நிலை சரியில்லாதவங்க என்பதால். மத்த பெண்கள்கிட்ட அவங்க போயிருந்தா, நிறைய வேலை வாங்கி அவங்களை கஷ்டப்படுத்தியிருப்பாங்க. நாங்க அப்படி செய்யலை. ஆனாலும், எங்க இருவருக்கும் கெட்டப் பெயர்தான் வந்துச்சு. மனிதர்களின் மனநிலையை நீங்களே கணிச்சுக்கோங்க. கமல்ஹாசன் அவர்கள் இதைப் பத்தி பேசாததுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியலை."

"நிகழ்ச்சியில ஆபாச உடை, ஆபாச நடனம், கெட்ட வார்த்தைகள்னு நிறைய தவறான முன்னுதாரண விஷயங்கள் அதிகம் இருந்துச்சே..."

"உடை அணியிறது அவரவர் விருப்பம். ஆனா, நிறைய பார்வையாளர்கள் பார்க்கிறதால, உடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருக்கணும். அதை ஏத்துக்கிறேன். குறிப்பா, 'என் மனைவிக்குப் பிடிச்ச மாதிரி அன்பா நடந்துப்பேன்'னு ஆரம்பத்தில் எங்கிட்டச் சொன்னார், பாலாஜி. 'மாற்றத்தை வெறும் வார்த்தையாகச் சொல்லாம, செயல்ல காட்டுங்க'னு சொன்னேன். அவர் சொன்னபடி நாலு நாளைக்கு மேல நடந்துக்கலை. நித்யா வருத்தப்படும்படி பல நேரங்கள்ல நடந்துக்கிட்டார். அவர் பயன்படுத்தின வார்த்தைகளும் தவறானது. அதனால, 'நிச்சயம் பாலாஜியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவர் செய்ற தவறுகளை கமல்ஹாசன் அவர்கள் உணர வைப்பார்'னு நித்யாகிட்ட சொன்னேன். அதுவும் நடந்துச்சு. மஹத்தும் பல நேரங்கள்ல தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதனாலதான் அவர் பெயரை நான் எலிமினேஷன்ல சொன்னேன்." 

"வெளிய வந்த பிறகு, இதுவரை நடந்த எபிசோடுகளை பார்த்தீங்களா? என்ன ஃபீல் பண்ணீங்க?"

"வெளிய வந்ததும் நண்பர்கள் சொன்ன கருத்துகளை மட்டும் கேட்டேன். இப்போ வரை டிவியில காட்டப்பட்ட நிகழ்வுகளை நான் பார்க்கலை. பார்க்கவும் பெரிசா ஆர்வமில்லை. அந்த வீட்டில் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படலை. நான் மீடியாவில் நீண்ட அனுபவம் கொண்டிருப்பதால், ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்க ஒரு சேனல் படும் சிரமங்கள் எனக்குத் தெரியும். அதுவும் 16 பேர் நடந்துக்கிற விஷயத்தை எல்லோருக்கும் சம மதிப்புக்கொடுத்து காட்டுறது சவாலான வேலை. எங்களுக்கு எந்த ஸ்கிரிப்டும் தரப்படலை. என்னையும் தவறா காட்டியிருப்பாங்கனு நான் நினைக்கலை." 

"மும்தாஜ்ங்கிற புது சகோதரி கிடைச்சதைப் பற்றி..."   

"இந்த நிகழ்ச்சி மூலம் நாங்க இருவரும், ஆத்மார்த்தமான சகோதரிகளாகிட்டோம். அவருக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள்ல ஒற்றுமை இருந்துச்சு. நல்ல குணம் அவங்களுக்கு. 'புகழுக்கும் பணத்துக்கும் போட்டிக்காகவும் எதையும் செய்வோம்'னு பல போட்டியாளர்கள் நினைக்கிறாங்க; அதில் பெண்களும்கூட. அதில் எனக்கும் மும்தாஜூக்கும் உடன்பாடில்லை. அதனால்தான் எங்க நட்பு வளர்ந்துச்சு. நான் வெளியேறும்போது அவங்க சிந்தின கண்ணீர், அவங்க என் மேல் வெச்சிருந்த அன்பை வெளிப்படுத்துச்சு. மிகத்திறமையான போட்டியாளரான மும்தாஜ், நிகழ்ச்சியில ஃபைனல் வரைக்கும் வந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவேன். அவங்க வெளிய எப்போ வந்தாலும், நிச்சயம் அவரைச் சந்திப்பேன். எங்க நட்பையும் அன்பையும் இன்னும் வலுப்படுத்துவோம்."

"நீங்க பாடின பாடலுக்கு எக்கச்சக்க மீம்ஸ் வெளியாச்சு. அதையெல்லாம் பார்த்தீங்கங்களா? 

"அதில் சிலவற்றைப் பார்த்தேன். வயிறு குலுங்கச் சிரிச்சேன். எப்படியோ என் பாடல்கூட மீம்ஸ் வடிவில் பலரையும் ரசிக்க வைக்குதேனு சந்தோஷப்பட்டேன். என் பாடலைக் கேட்டு எனக்கே மீம்ஸ் போடணும்னு ஆசை வந்துச்சு. அந்த அளவுக்கு என் பாடல்களும் வாய்ஸூம் மோசமா இருந்துச்சு. அந்த சொதப்பலுக்குக் காரணம், என் குரல் சரியில்லாம இருந்ததுதான்."

"ரீ-என்ட்ரி வாய்ப்புக் கிடைத்தால்?"

"நிச்சயம் கலந்துப்பேன்."

மமதி சாரியின் வீடியோ பேட்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு