Published:Updated:

தமிழுக்கு வருகிறார் பாலிவுட்’டின் நியூ ரஹ்மான்!

தமிழுக்கு வருகிறார் பாலிவுட்’டின் நியூ ரஹ்மான்!
தமிழுக்கு வருகிறார் பாலிவுட்’டின் நியூ ரஹ்மான்!

நம் ரஹ்மானுக்கு பாலிவுட்டில் இருக்கும் ஒரே போட்டி இன்றைய தேதியில் அமித்தான்.  'பாலிவுட்டின் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்' என மீடியாக்கள் அழைக்கின்றன.ஆனால், தன்னடக்கத்தோடு அந்த கம்பேரிஷனை தவிர்க்கிறார்.

ன்றைய தேதியில் நம்பர்-ஒன் பாலிவுட் இசையமைப்பாளர் அமித் த்ரிவேதிதான். வித்தியாசமான கதைக்களம் கொண்ட சினிமாக்களுக்கு தமிழில் சந்தோஷ் நாராயணனை இசையமைக்க அணுகுவதுபோல, பாலிவுட்டின் கவனம் ஈர்க்கும் படங்களுக்கு இவரின் இசைக்காக இயக்குநர்கள் இவர் வீட்டை மொய்க்கிறார்கள். மனிதர் ஹிட் கணக்கை வைத்து கோடிகோடியாய் குவித்துக் கொள்ளாமல் சிம்பிளாய் தன் மனதுக்கு நெருக்கமான புராஜெக்ட்களை மட்டுமே ஓகே செய்கிறார். பெரும்பாலும் அவை அதிக பட்ஜெட் இல்லாத படங்களாக இருப்பதால் பாலிவுட்டையும் தாண்டி இப்போது கோலிவுட் வரை அவரது புகழ் ஓங்கியிருக்கிறது. அவரது இசையமைப்பில் கங்கனா ரணாவத் நடித்து விகாஸ் பஹல் இயக்கிய `குயின்' படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். `பாரீஸ் பாரீஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை இயக்குவது ரமேஷ் அரவிந்த். `குயின்' படத்தின் ப்ளஸ்ஸே அதன் மயக்கும் மகுடி இசைதான். அதனால் தமிழில் அவரையே அழைத்து வந்துவிடலாம் எனத் தமிழுக்காக கேட்க, பேரார்வத்தோடு தமிழுக்கு வந்திருக்கிறார் அமித் த்ரிவேதி. 

`ரீமேக்தானே... யாராவது ஒரு லோக்கல் கவிஞரை வைத்து ஃபில்லர் வார்த்தைகளை இட்டு நிரப்பி அதே மெட்டில் பாட்டை போட்டுக் கொடுப்பது சுலபம் தானே?' என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அமித் வித்தியாசமானவர். அதுதான் அமித்தின் ஸ்பெஷலே. 

தான் இசையமைக்கும் படங்களின் கதையமைப்பு, கதை நிகழும் களம், காலம் போன்றவற்றை மனதில் வைத்து அந்த உணர்வை இசைக்கருவிகள் வழி கொண்டுவர அதிகமாக மெனக்கெடுவார். அறிமுகமான முதல் படம் `தேவ் டி'யின் கதைக்களமான பஞ்சாபையும் டெல்லியையும் பிரதிபலிப்பதாக அதன் பாரம்பர்ய இசையையும் மெட்ரோ நகரத்தின் பாப் இசை கலாசாரத்தையும் கலந்து பாடல்களிலும் பின்னணி இசையிலும் தந்திருப்பார். 'கய் போ சே'  படத்துக்காக குஜராத்தி இசையையும், 'லூட்டேரா' படம் அப்படியே 'ரெட்ரோ' ஃபீல் கொடுப்பதற்காக மிக பாரம்பர்யமான இசைக்கருவிகளையும் கொண்டு இசையமைத்திருப்பார். 'பாம்பே வெல்வெட்' படத்துக்கு 60-70களில் மும்பையைக் கலக்கிய ஜாஸ் இசையை இசைக்கோர்ப்பில் கொண்டு வந்திருந்தார். 'உட்தா பஞ்சாப்' படத்துக்காக இன்றைய பஞ்சாப்பின் `ராக் கல்ச்சர்' இசையை அப்படியே பிரதிபலித்திருந்தார்.  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

பாலிவுட்டின் கவனம் ஈர்க்கும் மாற்று சினிமாக்கள், சென்ட்டிமென்ட் சினிமாக்கள் பெரும்பாலும் அமித்தின் டைரியை நிரப்புகின்றன. 'தேவ் டி' படத்தில் ஆரம்பித்த இந்த இசைப் பயணம் அப்படியே... 'லவ் சுவ் தே சிக்கன் குரானா', 'நோ ஒன் கில்டு ஜெஸிகா', 'பாம்பே டாக்கீஸ்', 'உட்தா பஞ்சாப்', 'இங்லீஷ் விங்லீஷ்', 'டியர் ஜிந்தகி', 'ஸாந்தார்', 'ஃபிதுர்', 'ஹைவே', 'பேட் மேன்', 'சீக்ரெட் சூப்பர் ஸ்டார்', 'ப்ளாக் மெய்ல்', 'பாவேஷ் ஜோஷி', `ஃபேனி கான்' என லிஸ்ட் நீ...ள்...கிறது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்களில் இருப்பதோடு அத்தனை படத்திலும் கதை சொல்லலில் இசைதான் முக்கிய பங்கும் வகிக்கிறது என்பதும் அமித்தின் சிறப்பு.

முதல் வாய்ப்பு பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மூலம் கிடைப்பதற்கு முன் நிறைய ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் சினிமாவுக்கு நம்மால் இசையமைக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததால் விளம்பரத்துறையை அவ்வளவு எளிதில் விட்டுவிடவில்லை. பாடகி ஷில்பா ராவ் மூலம் அனுராக் தன்னுடைய `தேவ் டி' படத்துக்கு புதிய இசையமைப்பாளர் தேடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டு நேரில் போய் சந்தித்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இசையமைப்பில் இருக்கும் அடிப்படை கட்டமைப்பைக் கலைத்துப்போட்டு புதுபாணியில் இசையமைத்துக் காட்டினார். இன்றுவரை `தேவ் டி' இசை காலங்களைத்தாண்டியும் கொண்டாடப்படுவதற்கு அதன் மாறுபட்ட கட்டமைப்பு தான் காரணம்.

உதாரணமாக, அந்தப் படத்தில் இருந்த 'எமோஷனல் அத்தியாச்சார்' பாடல் இன்றும் பலரின் காலர் ட்யூன். படத்தில் மிக முக்கியமான இடத்தில் இது வருவதால் வித்தியாசமான பாடல் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் அனுராக் காஷ்யப். சவாலை ஏற்றுக்கொண்ட அமித், தானே குரலை மாற்றிப் பாடினார். இரண்டு பேண்டு கலைஞர்கள் பாடும் பாடல் அது என்பதால் தனக்கு ஜோடியாக பாடலை எழுதிய கவிஞர் அமிதாப் பட்டாச்சார்யாவையே பாட வைத்தார். அதுவும் எப்படி..? ஒருவித சேட்டைத்தனத்தோடு பாடலைப் பாடியிருப்பார்கள். 9 வருடங்களுக்கு முன் `தேவ் டி'  ஆடியோ கேசட்டில் `பேண்டு மாஸ்டர்கள் ரங்கீலா மற்றும் ரசீலா' என்றே பாடியவர்கள் பெயர்கள் இருந்தது. ஆனால், அந்த ரங்கீலா ரசீலா இவர்கள்தான். 

பொதுவாக 10 வருடங்களுக்கு ஒருமுறை ட்ரெண்ட் மாறும் என்பார்கள். நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அதிகாரப்பூர்வ பாலிவுட் இசையமைப்பாளராக 1995-ல் `ரங்கீலா' படத்தின் மூலம் பாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தார். அதேபோல, அமித் த்ரிவேதி `பேண்டு மாஸ்டர் ரங்கீலாவாக’ 2009-ல் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்தார். நம் ரஹ்மானுக்கு பாலிவுட்டில் இருக்கும் ஒரே போட்டி இன்றைய தேதியில் அமித்தான்.  'பாலிவுட்டின் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்' என மீடியாக்கள் அழைக்கின்றன.ஆனால், தன்னடக்கத்தோடு அந்த கம்பேரிஷனை தவிர்க்கிறார்.

"ரஹ்மான் என் ஆதர்சம். அந்த மேதையோடு என்னை கம்பேர் செய்ய வேண்டாம். ஏதாவது புதிதாக இசையமைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஓடிக் ஒண்டிருக்கிறேன். இணையத்தில் இப்படிப்பட்ட விமர்சனங்களை படிக்க நேர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு உள்ளாவேன். தேங்கி விடுவேன்.  இசையமைப்பாளரின் கேரியர் எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. என் இசைப்பயணம் என்பது என்னால் தீர்மானிக்கப்பட்டதில்லை. நாளைக்கே என்னைவிட சிறப்பாக இசையமைக்கும் இன்னொருவர் வரலாம். அதனால், எனக்கான சவால்களை எந்நேரமும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்'' என்று சொல்லி இருக்கும் அமித் த்ரிவேதி நம் இசைஞானி இளையராஜாவின் தீவிர விசிறி.

`டியர் ஜிந்தகி' படத்தில், 'தம்பிக்கு எந்த ஊரு' படத்தின் `என் வாழ்விலே' பாடலின் மெட்டில் ஒரு பாடலை கம்போஸ் செய்து இளையராஜாவுக்கு நன்றி சொல்லியிருந்தார். இப்போது 'பாரீஸ் பாரீஸ்' படத்துக்கு முழுக்க முழுக்க தமிழ்ப் பாணி இசையைக் கொடுப்பதற்காக சென்னைக்கு விசிட் அடித்திருக்கிறார். குயின் போல இல்லாமல் முற்றிலும் வேறு வடிவ இசையைக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். 

அமித் த்ரிவேதியின் தமிழ் இசைக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

பின் செல்ல