Published:Updated:

"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்?" 'பிக்பாஸ்' பொன்னம்பலம்

சனா

'பிக் பாஸ்' நிகழ்ச்சி குறித்து நடிகர் பொன்னம்பலம்

"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்?" 'பிக்பாஸ்' பொன்னம்பலம்
"கோமாளித்தனம் பண்றார் சென்றாயன்... அடுத்து இவங்கள்ல ஒருத்தர் வெளியேறுவார்?" 'பிக்பாஸ்' பொன்னம்பலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த நடிகர் பொன்னம்பலம், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சி குறித்த அனுபவங்களைப் பற்றி அவரிடம் பேசினேன். 

''சில வருடங்களாகவே சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தேன். அதற்குக் காரணம், என் உடல்நிலை. ஒரு விபத்தின் காரணமா ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்போதான்,  'பிக் பாஸ்' வாய்ப்பு வந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு நாலு நாள்களுக்கு முன்னால் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொள்ள என்னிடம் பேசினாங்க. முதலில் தயங்கினேன். நிகழ்ச்சியில் கலந்துக்கவிருக்கிற மற்ற போட்டியாளார்கள் பற்றிக் கேட்டேன். அதைப் பற்றி எதுவும் சொல்லமுடியாதுனு சொல்லிட்டாங்க. யோசிச்சுப் பார்த்துட்டு, ஓகே சொன்னேன். இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லல. நிகழ்ச்சிக்குப் போறதுக்கு ஒருநாள் முன்னாடிதான் வீட்டுல 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில கலந்துக்கப்போற விஷயத்தைச் சொன்னேன். முதலில் ஆச்சரியப்பட்டாங்க. பிறகு, அவங்களும், சம்மதம் சொன்னவுடனே பெட்டி படுக்கையைக் கட்டிக்கிட்டு 'பிக் பாஸ்' வீட்டுக்குக் கிளம்பிட்டேன்'' ஃப்ளாஷ்பேக் காட்சிகளுடன் நம்மிடம் பேசுகிறார், பொன்னம்பலம். 

''எப்படிப்பட்ட அனுபவத்தை 'பிக் பாஸ்' நிகழ்ச்சி உங்களுக்குக் கொடுத்தது?"

" 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே இருந்தவர்களுக்குக் கொடுத்த அனுபவத்தைவிட நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு கொடுத்த அனுபவம்தான் பெருசுனு நினைக்கிறேன். ஏன்னா, இன்னைக்கு நல்லவனா இருக்கிறவன் நாளைக்கு கெட்டவனா மாறிப் போறான். மனிதர்களுடைய குணங்களை நேரடியாவே இந்த நிகழ்ச்சியின் மூலமா பார்க்கலாம். வெளியே இருந்து பார்க்கிற மக்கள் சில விஷயங்களைத் திருத்திக்க முடியுது. இந்த நிகழ்ச்சி எனக்கும் நல்ல அனுபவமாதான் இருந்தது. ஏன்னா, நான் அந்த காலத்து ஆள். இன்றைய இளைஞர்களோட பழகுறதுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தது. தமிழ் தவிர மற்ற மொழி பேசுபவர்களும் வீட்டுக்குள்ளே இருந்தாங்க. அவங்ககூட பழகுற வாய்ப்பு கிடைத்தது. உள்ளே, இருந்தவர்கள் எல்லோரையும் நான் நண்பரந்த்தான் பார்த்தேன்." 

''அனந்த் வைத்தியநாதன் உங்களை சிறையில் அடைக்கச் சொல்லிவிட்டுப் போகும்போது, உங்க மனநிலை எப்படியிருந்தது?"

"சந்தர்ப்பங்கள் ஒரு மனிதரை எப்படி மாற்றும்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் பெரிய தவறு எதுவும் பண்ணலைங்கிறது எல்லோருக்கும் தெரியும். எந்தவித குற்ற உணர்வும் என்கிட்ட கிடையாது. அவருடைய பார்வையில் நான் ஏதோ தவறு செய்தது மாதிரி தோன்றியிருக்கு. அதனால, அவரோட வெறுப்பைக் காட்டிட்டு போயிருக்கார். நான் சிறைக்குப் போனது பற்றி கவலைப்படலை. என்னால் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாதிக்கப்பட்டிருக்கார். நான் சிறைக்குப் போனதால், அவர் கோபம் தணிந்துவிட்டது. அவ்வளவுதான். எனக்கு எதிரிகளைவிட அவர்களிடம் இருந்து என்ன கத்துக்கிட்டேன் என்பது முக்கியம். ஆனா, அவரை நான் எதிரியா பார்க்கல. அனந்த் சார் வெளியே போனபிறகு நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார். என்னைப் பற்றிய கண்ணோட்டம் கண்டிப்பா மாறியிருக்கும்."

''பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் எந்தப் போட்டியாளர் உங்களைத் தொடர்புகொண்டு பேசினார்?"

"நித்யா மட்டும்தான் பேசுனாங்க. 'என்ன.. அண்ணன் அதுக்குள்ள வெளியே வந்துட்டீங்க'னு கவலைப்பட்டாங்க. ஒரு இடத்தில் மரியாதை நமக்குக் கிடைக்கும்போது அதை வாங்கிட்டு, அதே மரியாதையோடு வெளியே வந்துடணும்னு சொன்னேன். இளைஞர்களுக்கு வழிவிட்டுட்டு வந்துட்டேன். இதை கவுரமாகத்தான் நினைக்கிறேன். உள்ளே இருந்த போட்டியாளர்கள்கிட்ட எவிக்ஷன் பெயரில் என்னை சேருங்கனு நானேதான் சொன்னேன். ஏன்னா, சினிமாவில் நல்ல நடிகன், ஜாம்பவான்னு பெயர் எடுத்துட்டேன். உள்ளே இருக்கிற பசங்களும் வளரட்டும்." 

''ஷாரிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையிலே என்ன நடந்தது?"

"என் படுக்கைக்குப் பக்கத்துல அவங்க ரெண்டுபேரும் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தாங்க. ஆனா, என்ன நடந்துச்சுனு எனக்குத் தெரியாது. காலையிலே விடிஞ்சதும், 'என்ன தம்பி.. நைட் நேரத்துல இப்படி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க?'னு திட்டினேன். 'உங்க அம்மா, அப்பா வருத்தப்படுவாங்க. நீ தப்பு பண்ணியானு எனக்குத் தெரியாது. ஆனா, பனை மரத்துக்கு அடியிலே உட்கார்ந்து பால் குடிச்சாலும் கள்ளுனுதான் சொல்வாங்க'னு சொன்னேன். அது அட்வைஸ், அவ்வளவுதான். ஏன்னா, ஷாரிக் அப்பா என் நண்பர். நாளைக்கு அவர் என்கிட்ட எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது பாருங்க... அதனாலதான்!"  

''ஷாரிக் இடத்தில் உங்கப் பையன் இருந்திருந்தா, என்ன சொல்லியிருப்பீங்க?" 

"என் பையனா இருந்திருந்தாலும், 'என்ன ஆச்சு'னுதான் கேட்டிருப்பேன். ஆனா, அதை அந்த இடத்துல கேட்டிருக்கமாட்டேன். ஏன்னா, என்னைவிட தெளிவா பிக் பாஸ் பார்த்திருப்பார். அவருக்கு என்ன நடந்ததுனு தெரியும். என் பையனோட தனிப்பட்ட கருத்தில் தலையிட மாட்டேன். வெளியே வந்தபிறகு விசாரிச்சிருப்பேன். என் பையனும், நானும் 'பிக் பாஸ்' வீட்டில் போட்டியாளரா இருந்திருந்தாலும் அவனையும் என் சக போட்டியாளராகத்தான் பார்த்திருப்பேன்." 

''ஐஸ்வர்யா சர்வதிகாரம் பண்ணும்போது, கோபப்பட்டு அவரைத் தாக்கியது சரியா?"

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில சில விதிமுறைகள் வெச்சிருக்காங்க. அதை நான் மீறிட்டேன். தவறுனு தெரியும். ஆனா, சந்தர்ப்பம் வேறு மாதிரி இருந்தது. ஐஸ்வர்யா தன் நிலையைத் தாண்டி அதிகமா அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. உண்மையான சர்வாதிகாரியா அவங்களை நினைச்சுக்கிட்டாங்க. ஐஸ்வர்யா அடக்குமுறையில ஈடுபட்டாங்க. அந்தச் சூழ்நிலையில மக்கள் வெடித்து எழுவாங்கனு தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலைக்காகத்தான் நான் காத்திருந்தேன். ஐஸ்வர்யா பெண்ணாக இருந்ததால், அவங்களை கவனமாதான் கையாளணும்னு இருந்தேன். அதனாலதான், நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டேன். நான் ஒரு ஸ்டன்ட் மாஸ்டர். மத்தவங்களுக்குப் பிரச்னை வராத மாதிரி எப்படித் தாக்கணும்னு தெரியும். அவங்க கழுத்தை நெருக்கியிருந்தா, அவங்களால பேசியிருக்க முடியாது." 

''பிக் பாஸ் வீட்டில் இருந்து அடுத்து யார் வெளியேறுவாங்கனு நினைக்கிறீங்க?"

"சென்றாயனுக்கு எப்படி விளையாடி ஜெயிக்கணுனு தெரியல! ஏதோ கோமாளிதனங்கள் செய்து மக்களை சிரிக்க வைக்கிறார். அவர் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கு அல்லது ஜனனி, டேனியல் ரெண்டுபேர்ல ஒருத்தர் வெளியேறலாம்!"