
இந்த மூவரின், அடையாளங்கள் கவர்ச்சி நடிகைகள், கனவு கன்னிகள் என்று ஒன்றாக பார்க்கப்பட்டாலும், அவர்கள் வாழ்விலும், வளர்ச்சியிலும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டாலும், அவர்களின் வாழக்கையை, புகழை அவர்கள் கையாண்ட விதத்தில் மாறுபட்டு நிற்கிறார்கள்.
நடிப்பிலும், வாழ்விலும், வளர்ச்சியிலும் இந்த மூவருடைய பயணங்கள் மாறுபட்டதாக இருக்கின்றன. அந்தந்தக் காலகட்டங்களில் இருந்த சமூகக் கட்டுமானம், அங்கீகரிக்கப்பட்ட சமூக ஒழுக்கம் ஆகிய வரையறைக்கு அப்பாற்பட்டவர்களாகவே இவர்கள் சித்திரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிஜம்.
வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும், இவர்கள் மூவரின் வாழ்வையுமே தொடக்கம், உச்சம், இறுதி என மூன்று நிலைகளில் உள்ளடக்கி ஆய்வு செய்வது சாத்தியமானதாகிறது.
1940களில், அமெரிக்காவில் மர்லின் மன்றோ தன் திரைப்பயணத்தின் தொடக்கத்தில், ஒரு புகைப்பட மாடலாகக் கால்பதித்தார். அப்போது அவருக்கான விருப்பமாக அது இருக்கவில்லை. மாறாக, மிகுந்த சிக்கலான ஒரு குழந்தைப் பருவமும், அதிலிருந்து தப்பிக்க நடந்த திருமணமும், அரவணைப்பும் - அன்பும் இல்லாத வாழ்வும், ஏழ்மையும் அவரின் இந்த முடிவிற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தது எனச் சொல்லலாம்.
அவர் தன் உடல் அழகை, தன்னை உயர்த்திக்கொள்வதற்கும், பாதுகாத்துக்கொள்ளவும் தேவைப்படும் ஆயுதமாகவே பயன்படுத்தினார் என்பதே நிஜம். 1950களில் அவர் திரைத்துறையில் உச்சம் தொட்டபோது, அவர் ஒரு பார்வை நுகர்வுக்கான பண்டமாக உலகம் முழுவதிலும் பார்க்கப்பட்டார். ஒப்பிலா உலக பிரபலமும், அதீத பணமும் அவரிடம் குவிந்தன. எவ்வளவு இருந்தும், தனிப்பட்ட வாழ்க்கையில் அன்பை நோக்கியே ஓடும் ஓர் அடிபட்ட சிறு குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது.

மிகக் கடுமையானவராக, நடிப்புத் தொழிலில் அலட்சியம் காட்டுபவராக, திமிர் பிடித்தவராக, தைரியமானவராக, அழுத்தமானவராக இந்த உலகத்தின் பார்வையில் தெரிந்தாலும், அவருடைய நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே, ஓர் ஆதரவற்ற குழந்தையாக அவரின் தவிப்பும், அன்பைத் தேடும் மழலை மனமும் தெரிந்திருக்கக் கூடும். அந்தவகையில், அன்றைய சமூகத்தின் அழுத்தத்தைக் கையாளப் பிடிக்காமல், நம்பிக்கையிழந்த ஒரு பெண்ணின் வாழ்வும் முடிவுமாகவே, மர்லின் மன்றோவின் அழியா பிரபலத்தைப் பார்க்கவியலும்.
1960-ல் அவருடைய வெள்ளித்திரை சகாப்தம் முடிவடையும்' என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிகமான புகழ் வெளிச்சம் கொடுத்த செல்வாக்கும், அமெரிக்க அதிபர்வரை பகடை ஆடிய அரசியலும் அவருக்கு வினையாகத்தான் முடிந்தன. அவரின் மரணத்தைப் பற்றிய விலகாத மர்மங்கள் இன்றுவரை தொடரும் நிலையில், அவரை நன்கறிந்த விசுவாசிகள், அவரின் மறைவு, அவருக்கான விடுதலையாகத்தான் இருந்திருக்கும் என்கிறார்கள்.
உலக அளவில் மர்லின் மன்றோ என்றால், தமிழுக்கு சில்க் சுமிதா. தென்னிந்திய திரையுலகைப் பொறுத்தவரை, சில்க் சுமிதா தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.

மர்லின் மன்றோ போலவே இவருடைய பால்ய பருவமும் வலி நிறைந்ததே. ஏழ்மையான குடும்பமும், பொருந்தாத திருமணமும், ஒப்பனைக் கலைஞராக தொடங்கிய வாழ்க்கையும், சந்தித்த அவமானங்களும், பாதித்த அனுபவங்களும்தான், வைராக்கியத்தோடு அவரை வெற்றியை நோக்கித் தள்ளியது. அவரின் முதல்படத்தின் ஆபாச சாயலை, விடாப்பிடியாக அவருக்கான அடையாளமாகவே மாற்றியது, திரையுலகத்துக்கே உரிய சாபம். அப்படியும் சில்க் சுமிதா, அரிதாக சில படங்களில் அவரின் தேர்ந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தி, அனைவரின் ஏகோபித்த கைத்தட்டலைப் பெற்றிருப்பார்.
அந்தக்கால உச்ச நடிகர்களான ரஜினி, கமல்கூட இவருடைய ஒரு பாடல் காட்சி, தங்களின் படத்தில் கட்டாயம் தேவை என எதிர்பார்த்திருந்தனர். விற்காது போய், பல நாள் பெட்டியில் தூங்கிய படங்கள்கூட, சில்க் சுமிதாவின் ஒரே ஒரு பாடல் இணைத்ததால், வெற்றிப் படமாக மாறிய மாயங்கள் நிகழ்ந்தன. அந்த அளவுக்குப் பிரபலமாக விளங்கினார் சில்க்.

அப்படி ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர் இருந்தாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் என்னவோ மிகவும் குறைவுதான். திரையுலகம் வேண்டுமென்றே அப்படி அவரை underrated ஆக வைத்திருந்தது எனலாம். 450 படங்களுக்கு மேல் நடித்துப் பணமும், புகழும் உச்சியில் இருந்தபோதும், தகுதியற்ற சுற்றமும், தனிமையும், அவரை நம்பிக்கை இழக்கச் செய்தன. அவர் எடுத்த சில வர்த்தக முடிவுகள் அவரை லாபம் தராமல் அழிவை நோக்கித் தள்ளியது.
ஆபாச நடிகை என்னும் முத்திரை, அவரைச் சமூகப் பார்வையில் ஒழுக்கமற்ற, அங்கீகரிக்கப்படாத, மதிக்கப்படாத ஒரு வாழ்க்கையை வாழ்பவராகச் சித்திரித்தது. ஆனாலும், மர்லின் மன்றோ போலவே, மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் மிருதுவான அவருடைய குழந்தைத் குணம் தெரிந்திருந்தது.

சமூகத்தின், சில நரிகளின் வெறியாட்டத்திலிருந்து தப்பிக்க தன்னை மிகக் கடுமையானவராகக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவரின் மென்மையான குணமே அவரை மனஅழுத்தத்தில் சிதைத்து, அவரின் உயிரையும் பறித்தது. அப்படி அந்தக் காலகட்டத்தின் சமூக அமைப்பில், ஒரு போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட சில்க் சுமிதாவின் வாழ்க்கை, தோல்வியில் முடிந்ததாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த இருவரிடத்தும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தொடக்கத்தையும், ஏற்றத்தையும் கொண்டவர் நடிகை சன்னி லியோனி. `வெளிநாடுவாழ் நடுத்தர இந்தியக் குடும்பம். சிறுவயது முதல் மிகுந்த கட்டுப்பாடுகளோடு கூடிய வளர்ப்பு' என்று இவரின் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானதே.

புகழ் வெளிச்சத்தின் மீதான காதலும், கனவும் `புகைப்பட மாடலிங்' நோக்கி இவரை இழுத்து வந்தது. குடும்பமும், உலகமும் தன்னை எதிர்க்கும் என அறிந்தும், தன கனவுகளை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. தொடக்கத்தில் அமெரிக்காவின் பிரபலமான ஆபாச பத்திரிகையில் உள்ளாடை மாடலாகப் பணியாற்றினார். மிக வேகமாகப் புகழ் வெளிச்சம் அவர் மீது படர்ந்தது. அதிரடியாக நேரடி ஆபாசப் படங்களில் நடித்து சர்ச்சைக்குரிய வளர்ச்சி கண்டவர்.
மிகுந்த எதிர்ப்புகளும், மிக மிஞ்சிய எதிர்பார்ப்புகளும் கொண்டு, பாலிவுட் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார். மிகுந்த மன முதிர்ச்சியுடன், நேர்த்தியாகச் சமூகத்தின் அத்தனை கேள்விகளுக்கும் அசராது பதிலளித்து, தன் தொழில் மீதான காதலில் சற்றும் உறுதி குறையாது இருப்பவர் சன்னி லியோனி. தனிப்பட்ட முறையிலும், தனக்கான பாதையில் தெளிவோடு செயலாற்றுபவர். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் என இதுவரை இவருக்கு ஏறுமுகமே.

இந்த மூவரின், அடையாளங்கள் கவர்ச்சி நடிகைகள், கனவுக் கன்னிகள் என்று ஒன்றாகப் பார்க்கப்பட்டாலும், அவர்கள் வாழ்விலும், வளர்ச்சியிலும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டாலும், அவர்களின் வாழக்கையை, புகழை அவர்கள் கையாண்ட விதத்தில் மாறுபட்டு நிற்கிறார்கள்.
மர்லின் மன்றோ கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1960 களில் கோலோச்சினாலும், அமெரிக்காவின் கலாசாரம் அவரைக் கொண்டாடவே செய்தது. தனிப்பட்ட வாழ்வில் திருமணங்களும், அவர் மீதான மதிப்பீடுகளும் எப்படி இருந்தாலும், அவருடைய புகழ் இன்றளவிலும் அழியாமலேயே இருக்கிறது.
ஆனால், இந்திய கலாசாரமும், பெண்களுக்கு மட்டுமான பிரத்யேகமான கற்பும், 1980 களின் தென்னிந்திய சமூகத்தின் கட்டமைப்பும், உளவியலும், சில்க் சுமிதாவை தனிமைப்படுத்தியது. தான் செய்வது குறித்த காழ்ப்பும், சுய பச்சாதாபமும், சினிமா ஒப்பனையைத் தாண்டிய அவரின் அகத்தை ஆராதிக்க வேண்டிய தேடலும் கொண்டவராகவே சில்க் சுமிதா இருந்தார்.
அன்றைய சமூகம், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆபாசமாகவே அடையாளப்படுத்தி, அவரை ஆசை நாயகி ஸ்தானத்திலேயே வைத்திருந்து. பழித்து, காயப்படுத்தி, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, மரணம்வரை கொண்டு சென்றது.
ஆனால், இன்றைய சமூகச் சூழல், புரிதல், மாறிய கலாசாரம், மேலைநாட்டுச் சாயல், பாலியல் வெளிப்படைத்தன்மை, பெண்களுக்கான சுதந்திரம், நாகரிக வளர்ச்சி, உளவியல் பக்குவம் ஆகியவை சன்னி லியோனிக்கு ஒரு தேசிய அங்கீகாரத்தை கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் பெற்றுத் தந்திருக்கிறது. அதே சமயம், வெறும் உடல் தாண்டி, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் உத்தியும் சன்னி லியோனிக்குத் தெரிந்திருக்கிறது. அதற்கென வாய்ப்பைத் தர வல்லதாக இன்றைய சமூகச் சூழல் மாறியிருக்கிறது. அறுபதுகளில் அமெரிக்கா பெற்றிருந்த மனநிலையை இன்றைய இந்தியா பெற்றிருக்கிறது என்பதற்கான சாட்சிதான் இவர்.நாம் செய்ய வேண்டியதெல்லாம், பெருவாரியான சமூக நலன் கருதி, மனிதநேயத்தோடு நமக்கான சரி, தவறுகளை இன்றைய தினம், நாமே தீர்மானித்துக்கொள்ளவேண்டியதுதான்.
சரியும், தவறும் அந்தந்த இடத்தையும், காலத்தையும் பொறுத்து மாறிக்கொண்டே இருப்பன. நேற்றைய குற்றம், இன்றைய தவறு, நாளை சரி என்பதே நிரந்தரம். இதற்கு இந்த மூவருமே காலங்கள் கடந்து, தேசங்கள் கடந்து சாட்சி பகர்கின்றனர்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், பெருவாரியான சமூக நலன் கருதி, மனிதநேயத்தோடு நமக்கான சரி, தவறுகளை இன்றைய தினம், நாமே தீர்மானித்துக்கொள்ளவேண்டியதுதான்.