Published:Updated:

சேவா கிராமத்தில் - மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகாத்மா காந்தி

1945ல் சேவா கிராமத்தில் தங்கியபோது மகாத்மா காந்தி அளித்த பொக்கிஷ பேட்டி இது...

ந்தியாதான் மகாத்மா!

மகாத்மாதான் இந்தியா! "நிலைமை இப்போதும் இருக்கிறது. சர்க்கார் எப்பேர்ப்பட்ட அடக்கு முறையைக் கை யாண்டாலும் அவருடைய செல்வாக்கு குறைவதில்லை. மிகப்பெரும்பாலான மக்கள் இச்சுதந்திரரத்துக்கு அவருடைய தலைமையையே நம்பியிருக்கிறார்கள்.

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் பல்வேறு மாகாணங்களில் உள்ள நிலைமையை அறிய விரும்பி, அங்கங்கே உள்ள தேசிய ஊழியர்களை அழைத்து அவர்களோடு விவாதித்து வருகிறார். குறிப்பாக, நிர்மாண திட்டம் பற்றிப் பேச்சு நடத்துகிறார். வேண்டிய யோசனைகளையும் மகாத்மா அளித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிர்மாண வேலை சம்பந்தமாகப் பேசுவதற்கென, தமிழ்நாடு காங்கிரஸ் காரர் சங்க கோஷ்டி யொன்றுக்கு சேவா கிராமத்திலிருந்து அழைப்பு வந்தது. அந்த கோஷ்டியில் சென்றவர்கள் ஸ்ரீமான்கள் எம். பக்தவத்ஸலம், எம். எல். ஏ. ( தலைவர் ), வி. எம் உபயதுல்லா, கே. அருணாசலம், மதுரை வெங்கடாசலபதி.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

எட்டாம் தேதியன்று காலை 8-15 இருக்கும். வார்தா ஸ்டேஷனில் இறங்கி நாங்கள் வந்து இரங்கிய செய்தியை சேவா கிராமத்திற்கு டெலிபோன் மூலம் தெரிவித்தோம். சேவா கிராமம் குக்கிராமமாயிற்றே, அங்கே டெலிபோன் இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம், அந்த டெலிபோன் சரித்திரப் பிரசித்தமானது. அதைக் குறித்துக்கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும். 

வார்தாவுக்கு கொஞ்ச தூரத்தில் உள்ள 'ஷிவ்காம்' என்ற ஒரு குக்கிராமத்தை மகாத்மாஜி பொறுக்கி யெடுக்கவே, அவரது அத்தியத்த சீடர்கள் அங்கு குடியேறி ஆசிரமத்தை ஸ்தாபித்தார்கள். அந்த கிராமத்தின் பெயர் பிறகு சேவா கிராமம் என யாறிற்று. அட்போது லின் லித்கோ பிரபு இந்திய வைஸ்ராயாக இருந்தார். சேவா கிராமம் இந்திய அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய இடமாக ஆகி விட்டபடியால் அங்கு ஒரு டெலிபோன் இருக்கத் தான் வேண்டுமென்று வைஸ்ராய் அபிப்பிராயப்பட்டார்.

ஆனால் மகாத்மாவோ டெலிபோன் அக்கிராமத்தில் இருக்க வேண்டாமென்று மறுத்தார். வின் லித்கோ விட்டப்பாடில்லை. உங்களுடன் உடனடியாக நான் நினைக்கிற ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டு மென்றால் நான் என்ன செய்வது?  ஆகவே, டெலிபோன் இருக்கத்தான் வேண்டும்” என்று கட்டாயப்படுத்தி, காந்திஜியின் குடிசையிலேயே அந்த டெலிபோன் பிரதிஷ்டை ஆகுமாறு செய்து விட்டார். இது தான் அந்த டெலிபோனின் சரித்திரம்!

நாங்கள் ஆசிரமத்தை அடைந்த தினத்திற்கு முந்திய நாள் தான் ஸ்ரீ. ராஜகோபாலாச்சாரி அங்கிருந்து டில்லிக்குப் பிரயாணமானார். அவர் இங்கே தங்கிய மூன்றுகளிலும் அரசியல் பற்றி ஏதும் பேசவில்லையெனத் தெரிய வந்தது. ஏதோ குடும்ப விஷயமாகப் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றாரெனத் தெரிகிறது.

நாங்கள் மத்யானம் சேவாகிராம ஆசிரமத்தை அடைந்தோம். எங்கள் ஜாகைக் கென்று ஒரு தனிக்குடி வைத்திருந்தார்கள். மறுநாள் பிற்பகல் 3-30 மணிக்கு நாங்கள் மகாத்மாவைப் பேட்டி காணலாமென ஸ்ரீ நரஹரிஜி எங்களிடம் தெரிவித்தார்.

மகாத்மாவுக்குக் காரியதரிசியாக, காலஞ்சென்ற மகாதேவ தேசாயின் ஸ்தானத்தில் இப்போது இருப்பவர் ஸ்ரீநரஹரி பரேக். அவருக்கு வயது சுமார் 50 இருக்கும். மிக்க பொறுமை சாலி. 1917 - ம் வருஷத்திலிருந்து தேசத்திற்காக சேவை செய்து வரும் ஒரு குஜராத்தி. மகாத்மாவின் காரியதரிசியாக உள்ள ஸ்ரீ பியாரிலாலும், தாதாபாயின் பேத்தியான ஸ்ரீமதி குர்ஷித் பென் நௌரோஜியும் இப்போது வெளியூர்களுக்குப் போயிருப்பதால் மகாத்மாவின் காரிய தரிசியாக இருந்து காரியங்களையும் நரஹரிஜியே கவனித்து வருகிறார்.

மகாத்மா காந்தி, மக்கள் கூட்டம்
மகாத்மா காந்தி, மக்கள் கூட்டம்

காந்தஜியைக் கேட்பதற்கென்று நாங்கள் கேள்விகளைத் தயாரித்து வைத்திருக்தோம். நரஹரிஜி அவைகளைப் பார்வையிட்டு வடிக்கட்டினார்.

சில கேள்விகளை சர்க்கா சங்கத் தலைவரான ஜாஜூஜியிடம் கேட்டு பதில்களைத் தெரிந்து கொள்ளலாமென்றும், வேறு சிலவற்றை கிராமக் கைத்தொழில் சங்கத் தலைவர் ரப்பாவுக்குப் போட வேண்டு மென்றும் கூறினார்.

மறுநாள் 9ம் தேதி மாலை 3.30 மணிக்கு மகாத்மாவோடு பேட்டி என்று நிச்சயிக்கப்பட்டது.

மகாத்மா இப்போது மிக்க பல ஹீனமாகவே காணப்படுகிறார். ஆகவே காலை மாலை இரண்டு வேளைகளிலும் தவறாது கொஞ்சமாவது உலாவுகிறதென்று ஒரு வழக்கம் கைக் கொண்டிருக்கிறார்.

காலையில் 8-15 மணிக்கு ஒரு மைலும் மாலையில் 6-30 மணிக்கு ஒரு மைலும் நடக்கிறார். நடக்கும் போது இப்பொழுதெல்லாம் கம்பு வைத்துக்கொண்டு நடப்பதில்லை. இருவர் தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு நடந்து செல்கிறார்.

நடக்கும்போது அவர் கண்கள் பெரும்பாலும் மூடியவண்ணமேயிருக்கின்றன. ரோடு திருப்பங்கள் வரும்போது மாத்திரம் சிறிது கண்ணைத் திறந்து பார்த்துக்கொள்வார், அவ்வளவுதான்.

ஆரோக்யத்தை உத்தேசித்து இப்போது கடுமையாக மௌன விரதத்தையும் அவர் அனுஷ்டித்து வருகிறார். காலை எட்டு மணிக்கு முன்னதாக ஒரு மணி நேரமும், இரவு 8-15 மணிக்கு அப்புறம் முக்கால் மணி நேரமும்தான் அவர் கொஞ்சம் பேசுகிறார். இதர நேரங்களில் எல்லாம் மௌனம்தான்.

எங்கள் பேட்டி அவரது மௌன நேரத்தில் நடந்ததாகையினால் எங்கள் கேள்விகளுக்கு எல்லாம் மகாத்மா எழுத்து மூலமே பதில் கொடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவாது சிக்கனத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அவருக்கு விலாஸமிட்டு ஏராளமான கவர்கள் வருகின்றன அல்லவா? அலைகளைப் பிரித்து அந்தக் கடுதாசிகளின் பின் பக்கத்திலேயே தாம் எழுத வேண்டிய விடைகளை எழுதித் தருகிறார்!

அவரை சரியாக 3-30 மணிக்கு சந்தித்தோம். 

அறையில் அவர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு மேலே 'ஓம்' என்ற பிராணவ எழுத்து எழுதப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிரிலும் ஒரு 'ஓம் காரம் வரையப்பட்டிருக்கிறது. ஏசு நாதர் படமொன்றும், அன்னை கஸ்துரிபாய் போட்டோ வொன்றும் அந்த அறையில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அறையில் காற்றுக்கென கதர் பங்காவொன்று தொங்க விடப்பட்டிருக்கிறது. நிற்க. நாங்கள் பேட்டியின் போது கேட்ட கேள்விகளுக்கு மகாத்மா அளித்த பதில்கள் முக்கியமானவை.

“ தொழிற் சங்கங்களில் வந்து உழைக்குமாறு தொழிலாளர்கள் அழைப்பார்களானால் அந்த ஸ்தாபனங்கள் வேறு தலைவர்களால் நடத்தப்படுவதாயிருந்தாலும் சரி காங்கிரஸ்காரர்கள் அந்த ஸ்தாபனங்களுக்குச் சென்று உழைக்க வேண்டும்” என்று ஒரு கேள்விக்குப் பதில் கூறினார்.

கிஸான் இயக்க சம்பந்தமாகக் கேட்ட கேள்விகளுக்கு மகாத்மா அளித்த பதில் பின்வருமாறு :

"தனக்குச் சொந்தமாகவோ அல்லது பிறருக்குச் சொந்தமாகவோ உள்ளநிலத்தில் உழைக்கிறவன் கிஸான். கிஸான்கள் சபை போன்ற எந்த ஸ்தாபனமும் சுயேச்சையாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸின் அங்கமாகவே இருந்து காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.

எங்கள் கேள்வி : ‘நூல் பஞ்சத்தால் கைத்தறி நெசவாளர் கஷ்டப் படுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் கையால் தூற்க ஆரம்பித்து, பிற்பாடு அதை ஆடையாகவும் செய்கிறார்கள். அப்படிச் செய்தும் வருமானம் போதவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

மகாத்மாவின் பதில் : - "அவர்களுடைய  நிலைமை மோசம்தான். ஆனால் இறுதி பட்டினி, அல்லது அடிமைத்தனம் வேண்டாமென்றாள் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் நூற்றாக வேண்டும். விஷய ஞானத்துடனும் அச்சமின்றியும் இருக்க வேண்டும். கையால் கப்படும் நூற்கப்படும் நூலை இரட்டிப்பாக்குவது அவசியம்."

கேள்வி : அரிசி, “விறகு ரேஷனால் ஜனங்கள் மிகவும் கஷ்டப் படுகிறார் அநேகமாக கஷ்டங்களுக்கெல்லாம் சர்க்காரின் அசட்டையம் திறமையின்மையுமே காரணங்கள். என்ன செய்யலாம்? சில கிராமங்களில் மக்கள் ராணுவ முகாந்திரங்களை முன்னிட்டு, கிராமத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். என்ன செய்வது? ஜனங்களுக்கு அவர்களடைய உரிமைகளை விளக்கி அவற்றிற்காகக் கிளர்ச்சி செய்ய அவர்களுக்கு உதவ வேண்டுமல்லவா?

பதில் :- கூடுமான வகைகளிலெல்லாம் ஜனங்களுக்குகள் உதவ வேண்டியது தான். சர்க்கார் தீமை இருக்கிறது. முண்டியடித்துக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்; அல்லது சர்வ நாசமாக வேண்டும் - தலை வணங்கக் கூடவே கூடாது.

இந்த பேட்டி சுமார் 45 நிமிஷ நேரம் நடந்தது.  

10ந் தேதியன்று பகலில் கதர் வித்யாலயா, தாலியி சங்க பள்ளிகள், வார்தாவுக்கு அருகில் உள்ள மகன்வாடியிலிருக்கும் கிராம கைத் தொழில் சங்க பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிறகு மீண்டும் மகாத்மாவை இரவில் சந்திப்பதென முடிவு செய்தோம்.

சேவாகிராம ஆசிரமத்தில் நுழைந்தவுடன் திறந்த வெளி ஒன்று இருக்கிறது. அங்கு ஒவ்வொரு மாலையிலும் மகாத்மாஜி பிரார்த்தனையை நடத்துகிறார். ஆசிரமவாசிகளும் வெளியிலிருந்து வருகிறவர்களுமாகச் சுமார் நூறு பேர் கலந்து கொள்கின்றனர். பிரார்த்தனை முடிந்ததும் ஸ்ரீமதி கறுகாந்தி,' “பாபு” என்கிறார். அன்று தாம் அற்ற நூல் எவ்வளவு என்பதை "பாபு" (அதாவது காந்திஜி) சொல்ல வேண்டும். அடுத்தபடி நரஹரிஜி சொல்வார். இப்படியே ஒவ்வொருவராக தாக்கள் நூற்றது எவ்வளவு என்பதைத் தெரிவிப்பார்கள்!

அந்தத் துளசிச் செடி

இந்தத் திறந்த வெளிக்கு ஒரு பக்கத்தில் 'கஸ்தூரிபா'வின் குடிசை இருக்கிறது. இந்தக் குடிசைக்கு எதிரில், அன்னை கஸ்தூரிபாவின் வருஷாப் தீக தினத்தன்று, உஷக்காலத்தில் காந்தஜி துளசிக் கன்று ஒன்றைத் தமது கையிலே கட்டார். அந்தத் துளசிச் செடிக்கு அன்றாடம் அவரே ஜலம் வார்த்துக் காப்பாற்றி வருகிறார்.

கஸ்தூரிபா குடிசைக்கு அருகே மகாதேவ தேசாயின் குடிசை இருக்கிறது. காந்திஜி தினந்தோறும் மாலை 4-30 முதல் 5-30 வரை இந்தக் குடிசைக்குள் இருந்து நூற்பதென்று அநுஷ்டானம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் குடிசைக்கு எதிரில் ஆஸ்பத்திரி இருக்கிறது. சுற்றுவட்டாரத்திலுள்ள நாற்பது கிராமத்து மக்களுக்கு இந்த ஆஸ்பத்திரி உதவி புரிந்து வருகிறது. இங்கே டாக்டர் வேலை பார்ப்பவர் ஸ்ரீமதி சுசீலா நய்யார் என்பவர். இவர் பஞ்சாபி. காந்திஜியின் காரியதரிசியாகவுள்ள ஸ்ரீ பியாரிலாலின் சகோதரியுமாவர்.

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

டாக்டர் சையத் முகம்மத்

ஆஸ்பத்திரிக்கு அடுத்தாற் போலத்தான் மகாத்மாவின் குடிசை இருக்கிறது. சிறிது தூரத்திலுள்ள மற்றொரு குடிசையில் டாக்டர் சையத் முகம்மத் வசிக்கிறார்.  இவருக்குக் கண் சரியாகத் தெரியவில்லை யாதலால் கண் பூர்ணமாகக் குணமான பிறகு இங்கிருந்து கிளம்பலாமென மகாத்மா சொல்லி இவரை நிறுத்தி வைத்திருக்கிறார்.

இந்தக் குடிசைக்கு எதிரில் கிராம ஹால் இருக்கிறது. இங்கே 300 அல்லது 400 பேர் உட்காரலாம். கூட்டங்கள் இதில் நடப்பதுண்டு. தாலிமி சங்கப் பயிற்சி வகுப்புகளும் இங்கே நடக்கின்றன.

அரியநாயகம் தம்பதிகள்

கிராம ஹாலுக்கு அடுத்தாற் போலுள்ள குடிசையில் அரியநாயகம் தம்பதிகள் வசிக்கின்றார்கள். ஸ்ரீ அரியநாயகம் தான் தாலிமி சங்கக் காரியதரிசி. அவரது பத்தினி ஸ்ரீமதி ஆஷா தேவி உதவிக் காரிய தரிசிகளில் ஒருவர். இதே குடிசையில் மற்றொரு கூட்டுக் காரிய தரிசியான ஸ்ரீ ஜி. ராமச்சந்திரனும் வசிக்கின்றார். அவரது அறையை அவரது இரண்டு குருமார்களின் படங்கள் அலங்கரிக்கின்றன. ஒன்று, மகாத்மாவின் படம். மற்றொன்று, ரவீந்திரநாத் டாகூரின் படம்.

ஆசிரமத்தில் உள்ள இதர முக்யஸ்தர்களில் குறிப்பிடப் பட வேண்டியவர்கள் புரொபசர் பன்ஸாலி, மஷ்ரூவாலா ஆகியோர். கடவுளிடம் நம்பிக் கையில்லாதவரான ராமச்சந்தர்ஜி என்ற ஆந்திரர் ஒருவரும் இப்போது ஆசிரமத்தில் இருக்கிறார். காலையில் 5-30 மணிக்கு காந்திஜியின் குடிசையிலும் மாலை 7-40 க்குத் திறந்த வெளியிலும் நடக்கும் பிரார்த்தனைகளுக்கு ராமச்சந்தர்ஜி வரவேண்டு மென்ற கட்டுப்பாடு மில்லை. பிரார்த்தனைக்கு வருகிற முஸல்மான்கள் குர் - ஆன் படிக்கிறார்கள்.

சேவா கிராமத்தில் உள்ள இதர கட்டிடங்களும் ஸ்தாபனங்களும் எங்கள் மனதைக் கவர்ந்தன.

மூலக்கல்விப் பயிற்சி பள்ளிக்கூடம்

 இந்தப் பள்ளியிலே ஆறு வருஷங்களாகப் பயின்று வரும் பல மாணவர்களைப் பார்த்தோம். பையன்கள் திட சரீரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தேஜஸ்விகளாகவும் தோன்றுகிறார்கள். புதுப் புது விஷயல்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆவலுள்ளவர்கள் என்பதையும் அறிந்தோம். இவர்களுக்கு சங்கீதம், ஒவியம் முதலிய கலைகளிலும் பயிற்சி தரப்படுகிறது. இந்த மாணவர்களுக்கு நூல் நூற்பது ஒரு முக்கிய பாடம்.

பசு சம்ரட்சணை

ஆசிரம காம்பவுண்டுக்கு அடுத்தாற்போல 'கோ சாலா' இருக்கிறது. இங்கே 60 பசு மாடுகள் சம்ரட்சிக்கப்படுகின்றன. இந்த சம்க்ஷணை வேலையை தாலிமி சங்க பயிற்சி மாணவர்களே செய்கிறாகள். வேலைக்காரன் என்று யாருமே தாலிமி சக்கத்திலோ ஆசிரமத்திலோ கிடையாதென்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

காரியக் கமிட்டி கட்டிடம்

கோசாலாவுக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு நல்ல கல்லுக் கட்டிடம் இருக்கிறது. 'பிளஷ் அவுட்', குளிக்க பாத் டப் ' முதலிய சௌகர்யங்கள் அங்கே உண்டு. காரியர் கமிட்டி மெம்பர்கள் வந்தால் இங்கு கூடுவதற்கு வசதியாயிருக் கட்டுமென்று ஸ்ரீ பிர்லா இதைக் கட்டி வைத்திருக்கிறார்! இந்தக் கட்டிடத்தில் 'கஸ்தூர்பா' ஆஸ்பத்திரி இனி நடத்தப்படுமெனத் தெரிகிறது. இதற்குக் கொஞ்ச தூரத்தில் உள்ள காதி வித்தியாலயத்தில் 60 மாணவர்கள் கதர் உற்பத்தி சம்பந்தமான  நுணுக்கங்களைக் கற்று வருகிறார்கள்.

இங்கிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ள மஹிலாச்ரமம் பெண்கள் கல்லூரியும், வார்தா ஸ்டேஷனுக்கு அருகே டாக்டர் குமரப்பாவால் நடத்தப்படும் சொமக் கைத்தொழில் பள்ளிக் கூடமும், பஜாஜ் வாடிக்குப் பக்கத்தி ஸ்ரீ அகர்வாலால் நடத்தப்படும் சர்க்ஸாரியா கர்த்தகக் கல்லூரியும் குறிப்பிடத்தக்க ஸ்தாபனங்கள் ஆகும்.

மகாத்மா காந்தி, நேரு
மகாத்மா காந்தி, நேரு

தமிழ் பேசினார் மகாத்மா!

எங்களால் முடிந்த அளவுக்கு இவைகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்பு மறுநாள் மார்ச் 9. இரவு 9 மணிக்கு மகாத்மாவை ஒரு முறை பேட்டி கண்டோம்.

நாங்கள் அவர் அறைக்குள் போனதும் முதலில் 'பைட்டியே' என்று ஹிந்துஸ்தானியில் சொன்னார். பிற்பாடு தமிழில் உட்காருங்கள்' ' என்று புன்முறுவலோடு கூறி உட்காரச் சொன்னார்.

அந்த பேட்டியில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு மகாத்மா அளித்த பதில்கள் பின் வருமாறு :

காங்கிரஸும் கிஸான்களும்

"கிஸான்களும் காங்கிரஸ் கொடியையே உபயோகிக்க வேண்டும். கிஸான்களுக்கு இப்பொழுது அகில இந்திய ஸ்தாபனம் தேவை இல்லை.

“காங்கிரஸ்காரர்களுக்கும் அகில இந்திய ஸ்தாபனம் தேவையில்லை. காரியக் கமிட்டி மெம்பர்கள் சிறையில் உள்ளவரை இப்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும்.

“அதிகாரிகள் அனுமதி பெற்றுக் காங்கிரஸ்காரர்கள் கூட்டம் நடத்துவது எனக்குப் பிடிக்கவில்லை."

அலிப்புரம் கைதிகளுக்கு 

”நீண்ட கால தண்டனை பெற்று அலிப்புரம் போன்ற சிறைகளில் பல ராஜீயக் கைதிகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் முழு தண்டனைக் காலமும் சிறையில் இருக்க மாட்டார்களென்று உறுதி கூறுகிறேன். ' '

இவர்களுடைய குடும்பங்களுக்குப் பொது ஜனங்கள் உதவி செய்ய வேண்டுமென தாம் ஏற்கெனவே ஒரு அறிக்கை விட்டிருப்பதாகவும் காந்திஜி கூறினார்.

பதவியும் நிர்மாண் திட்டமும்

பதவி யேற்பதின் மூலம் தான் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்று ஸ்ரீ வி. ஆர். சொல்லுவதையும், இப்போதைய நிர்மாண வேலைகளை அவர் பரிகசிப்பதையும் காந்திஜியிடம் அது கோஷ்டியினர் பிரஸ்தாபித்தார்கள்.

பதில் : - "நீங்கள் பிரிட்டிஷ் சர்க்காருடைய எதிர்ப்பையே பொருட்படுத்தாதவர்கள். ஆகவே ஸி. ஆருடைய எதிர்ப்பை லக்ஷியம் செய்ய வேண்டாம். பதவி இல்லாமல் நிர்மாண திட்டத்தை நிறை வேற்ற முடியும் என்பது அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் அவர் வேறு தினுசாகப் பிரசாரம் செய்கிறார்"

காங்கிரஸூம் கம்யூனிஸ்டுகளும்

ஸ்ரீ காளேசுவர ராவ் தலைமையில் வந்த ஆந்திர காங்கிரஸ் காரர்கள் தூது கோஷ்டி, கம்யூனிஸ்டுகள் விஷயத்தை பிரஸ்தாபித்தது. நமது நிர்மாணத் திட்ட வேலைகளில் கம்யூனிஸ்டுகளையும் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தங்கள் யுத்த கொள்கை முதலியவற்றைக் கூட்டு மேடையில் பரப்புவார்களென்றும், அந்தக் கொள்கையைக் காங்கிரஸ்காரர்கள் எதிர்க்க வேண்டியிருக்குமென்றும் அதன் விளைவாகக் காங்கிரஸ்காரர்கள் கைதியாக நேரிடுமென்றும் ஆந்திர கோஷ்டியினர் சொன்னார்கள்.

காந்திஜி பதில் :- 'அப்படியானால் சரி. உங்கள் விருப்பப்படியே கம்யூனிஸ்டுகளை விலக்கி விடுங்கள்."

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி

சொத்த முயற்சி அவசியம்

ஆந்திராவிலிருந்து வந்திருந்த தூது கோஷ்டியீடம் மகாத்மா ஒரு கேள்விக்குப் பின் வருமாறு பதிலளித்தார் :

“பொதுவாக எல்லா நண்பர்களுக்கும் பதிலளிக்க நான் தயாராயிருக்கிறேன், அனால் அவர்கள் தங்கள் இஷ்டப்படியே நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் பாதகமில்லை. எவ்வளவு காலத்திற்கு உங்களுடன் நான் இருக்கப் போகிறேன்? 125 வயதைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பது என் விருப்பம். ஆனால் ஆண்டவன் அலட்சியமாக இருக்கிறார். அதற்கு முன்னால் என்னை அழைத்துச் செல்ல அவர் விரும்பக்கூடும். யாருக்கும் அதிர்ச்சி உண்டாக்க நான் சொல்லவில்லை! ஆனால் நம்மை எதிர்நோக்கியுள்ள நிலைமையை நீங்கள் உணர வேண்டும். 1942 ம் வருஷ ஆகஸ்டு தீர்மானத்தின் கடைசி ஷரத்தை நன்றாகக் கவனியுங்கள். ஒவ்வொருவரும் தனக்குத்தானே தலைவராக விளங்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் சொல்லுகிறது. இது பொம்ப அர்த்தபுஷ்டியுள்ள வாசகம் என்பதை நினைப்பூட்டுகிறேன்."

மகாத்மாவும் ரமணரும்

இவ்வாறு எங்கள் பேட்டிகள் முடிவடைந்து மறுநாள் சென்னைக்குப் பிரயாணமாகி பஜாஜ்வாடியிலிருந்து புறப்பட்டோம். அந்தக் கட்டிட மாடியில் மகாத்மாவின் படமும் ரமண ரிஷிகளின் படமும் இருக்கின்றன. ஐந்தாறு வருஷங்களுக்கு முன் பஜாஜும் ராஜன்பாபுவும் திருவண்ணாமலைக்கு விஜயம் செய்து ரிஷியை தரிசித்தனர். முந்திய இருவரும் மகாத்மாவைப் பற்றியும் பேச்செடுத்தார்கள். அப்போது சமணர், “காந்திஜியின் உடலிலும் இந்த உடலிலும் ஆத்மா ஒன்று தான்” என்றாராம். அந்த இருவரின் படங்களையும் ஒரே இடத்தில் கண்டபோது, “சென்று வாருங்கள்; தமிழ் நாட்டில் சேவை செய்யுங்கள்” என்று எங்களுக்கு விடையளிப்பது போலிருந்தது.

(18.03.1945, 25.03.1945 ஆகிய தேதிகளில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)