Published:Updated:

``தி.மு.க. அல்லது அ.தி.மு.க... எதுல சேரலாம்... சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!'' - நடிகை ஶ்ரீரெட்டி

சர்ச்சைக்குப் பெயர்போன நடிகை ஶ்ரீரெட்டி, தனது சினிமா அனுபவங்கள் குறித்தும், அரசியல் ஆர்வம் குறித்தும் பேசியிருக்கிறார். விரைவில் தி.மு.க அல்லது அ.தி.மு.க-வில் இணையவிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

பட வாய்ப்புகள் தருவதாகச் சொல்லி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி. `ஆந்திராவில் எனக்கு நீதி கிடைக்கவில்லை; தமிழ்நாடு என் வலிக்கு மருந்தாக இருக்கிறது' என்று கூறிய ஶ்ரீரெட்டி, சென்னை வளசரவாக்கத்தில் குடியேறி வசித்து வருகிறார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ், தான் இயக்கவிருக்கும் படத்தில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி, தன்னை ஆடிஷன் செய்ததாக விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். தவிர, `ரெட்டி டைரி' என்ற படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகியிருந்தார். இது குறித்து அவரிடம் பேசினேன்..

ஶ்ரீரெட்டி
ஶ்ரீரெட்டி

``உங்களுக்கு வாய்ப்பு தருவதாக லாரன்ஸ் சொல்லியிருந்தாரே?"

``லாரன்ஸ் மாஸ்டர் என்னை ஆடிஷன் பண்ணதுக்குப் பிறகு, மூணு முறை அவரை சந்தித்துப் பேசினேன். அவருடைய `காஞ்சனா 3' படத்தின் வெற்றி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்போ அவர் பாலிவுட்ல படம் இயக்கப்போயிட்டார். ஆனாலும், அவர் சொன்ன வாக்கைக் காப்பாத்துவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. என் நண்பர்களும் அந்த இந்திப் படத்துக்குப் பிறகு, அவர் இயக்கும் படத்தில் வாய்ப்பு தருவார்னு சொல்றாங்க. அவருடைய அழைப்புக்காகத்தான் காத்திருக்கேன். அவர் படத்தில் நடிக்கணும்னு எனக்கு வந்த சின்னச் சின்ன பட வாய்ப்புகளைக்கூட மறுத்துட்டேன். லாரன்ஸ் மாஸ்டர் நிச்சயம் என்னை அடுத்த படத்துல நடிக்க வைப்பார்னு பெரிய நம்பிக்கை இருக்கு. தவிர, `ரெட்டி டைரி' படம் ஜூலை 15-ம் தேதி தொடங்குது."

"சென்னை உங்களுக்குப் பழக்கமாகிவிட்டாதா?"

``சென்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. தமிழ்நாடு மக்கள் ரொம்பவே பணிவா இருக்காங்க. இங்கே சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. எனக்கு ஆன்மிகத்துல ஆர்வம் அதிகம். அடிக்கடி கும்பகோணம், காஞ்சிபுரம், மதுரைன்னு அங்கிருக்கிற கோயில்களுக்குப் போய் சாமி கும்பிடுவேன். அதுமட்டுமல்லாம, சாய் பாபா பக்தை நான். அதனால, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மயிலாப்பூர் அல்லது வளசரவாக்கத்துல இருக்கிற சாய் பாபா கோயிலுக்குப் போயிடுவேன். என் வாழ்நாள் முடியிறவரை சென்னையிலதான் இருப்பேன். ஐ லவ் தமிழ்நாடு."

ஶ்ரீரெட்டி
ஶ்ரீரெட்டி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஃபேஸ்புக்ல ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவா நிறைய பதிவுகளைப் போட்டிருந்தீங்களே?"

``ஆமா. எனக்கு ஜெகன்மோகன் ரெட்டி சாரைப் பிடிக்கும். அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் எனக்கு நல்லாத் தெரியும். நடந்து முடிந்த தேர்தல்ல அவருடைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்காக சோஷியல் மீடியாவுல என் ஆதரவைத் தெரிவிச்சுக்கிட்டிருந்தேன். அவர் மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறவர். அவர் நல்ல மனசுக்கு, தேர்தல்ல ஜெயிச்சுட்டார். எல்லோரும் 20 தொகுதியிலகூட ஜெயிக்கமாட்டார்னு நினைச்சாங்க. ஜெகன் காரு ஜெயிச்சது, நானே முதலமைச்சர் ஆனமாதிரி அவ்ளோ சந்தோஷம். அந்தக் கட்சியில இருக்கிற சில முக்கியப் பிரமுகர்கள் என்னை அந்தக் கட்சியில சேரச் சொல்லிக் கேட்குறாங்க. ஆனா, நான் போகமாட்டேன்."

"உங்களுக்கு அரசியல் ஆசை இல்லையா?"

``இருக்கு. ஆந்திரா அரசியல்ல இல்லை; தமிழ்நாடு அரசியல்ல இருக்கணும்னு ஆசை இருக்கு. எனக்கு ஜெயலலிதா அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்க இருந்தவரை அ.தி.மு.க நல்லா இருந்ததுனு எல்லோரும் சொல்லக் கேள்விப்பட்டிட்ருக்கேன். அவங்க இறந்த பிறகு, சரியில்லைனு சொல்றாங்க. தி.மு.க, அ.தி.மு.க இந்த ரெண்டு பெரிய கட்சிகள்ல ஏதாவது ஒரு கட்சியில நிச்சயம் இணைவேன். எது பெஸ்ட்? ஆந்திராவை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டுல வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்க அதிகம். அவங்களுக்கு உதவி பண்ணத்தான் நிறைய இடங்களில் தண்ணீர்ப் பந்தல் அமைச்சுக் கொடுத்தேன். ஏதோ என்னால முடிஞ்சது."

``தி.மு.க. அல்லது அ.தி.மு.க... எதுல சேரலாம்... சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!'' - நடிகை ஶ்ரீரெட்டி

`` `டிக் டாக்'ல உங்களை அதிகமா பார்க்க முடியுதே?"

``கடந்த ஒன்றரை வருடமா நான் பத்திரிகைக்காரங்களோடுதான் அதிகமா பேசிட்டிருக்கேன். எனக்குக் கொஞ்சம் ரிலாக்ஸ் கொடுக்கிறது, டிக் டாக் ஆப்தான். அதுல என் நடிப்புத் திறமையையும் காட்டமுடியுது. பலபேர் நான் ரொம்ப சீரியஸ்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. எனக்கு ஜாலியாவும், ரொமான்ட்டிக்காவும் நடிக்க வரும்னு காட்டத்தான் அந்த மாதிரி வசனங்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுறேன். இது மூலமாகவும் எனக்குப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியிருக்கு."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு