கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஓய்வு பெறும் வெட்டல்... சொதப்பும் ரிக்கார்டோ!

ஃபார்முலா 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபார்முலா 1

ரேஸ்: ஃபார்முலா 1

2022 ஃபார்முலா 1 சீசனின் முதல் பாதி மிகச் சிறந்த முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சீசனின் ரிவ்யூ போல அமைந்திருந்தது ஹங்கேரியன் கிராண்ட் ப்ரீ. வழக்கம்போல் வெற்றி வாய்ப்பை ஃபெராரி கோட்டை விட, அதைப் பயன்படுத்தி இன்னொரு வெற்றியைப் பதிவு செய்தார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். மெர்சிடீஸ் அணியின் கன்சிஸ்டன்ஸி, லூயிஸ் ஹாமில்ட்டனின் போடியம், ஃபெர்னாண்டோ அலோன்சோ vs எஸ்டபன் ஓகான் பஞ்சாயத்து, டேனியல் ரிக்கார்டோவின் தடுமாற்றம் என அனைத்துமே இந்த ரேஸிலும் அரங்கேறியது.

தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. Q3 சுற்றில் அவருடைய இன்ஜினில் பிரச்னை ஏற்பட்டதால், அவர் பத்தாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்க வேண்டியதாக இருந்தது. கார்லோஸ் சைன்ஸ், போல்பொசிஷனை வெல்வார் என்று நினைத்திருக்கையில், யாரும் எதிர்பாராத விதமாக போல்பொசிஷனை வென்றார் மெர்சிடீஸ் வீரர் ஜார்ஜ் ரஸல். ஃபார்முலா 1 வரலாற்றில் இதுதான் ரஸலின் முதல் போல். சார்ல் லெக்லர்க் மூன்றாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கினார்.

சாஃப்ட் டயரில் தொடங்கிய வெர்ஸ்டப்பன், புயல் வேகத்தில் ஒவ்வொரு காராக முந்தி முன்னேறிக்கொண்டிருந்தார். தன் போல்பொசிஷனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரஸல், முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ஆனாலும் பிட் ஸ்டாப் மெதுவாக இருந்ததால், அதை இழக்க நேரிட்டது. சைன்ஸுக்கும் அதே பிரச்னை ஏற்பட, விரைவிலேயே லெக்லர்க் முதல் இடத்துக்கு முன்னேறினார். வெர்ஸ்டப்பன் தன்னுடைய இரண்டாவது பிட் ஸ்டாப் மூலம் ரஸலை அண்டர்கட் செய்தார். இந்த இடத்தில் அவருக்குச் சாதகமான ஒரு முடிவை எடுத்தது ஃபெராரி.

 ஃபெர்னாண்டோ அலான்சோ
ஃபெர்னாண்டோ அலான்சோ
 லூயிஸ் ஹாமில்ட்டன்,  மேக்ஸ் வெர்ஸ்டப்பன்,  ஜார்ஜ் ரஸல்
லூயிஸ் ஹாமில்ட்டன், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், ஜார்ஜ் ரஸல்
 செபாஸ்டியன் வெட்டல்
செபாஸ்டியன் வெட்டல்

ஃபார்முலா 1 விதிப்படி, முழுக்க முழுக்க 'ஸ்லிக்' டயர்களைப் பயன்படுத்தும் ரேஸ்களில் இரண்டு விதமான டயர்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது விதி. லெக்லர்க் விஷயத்தில் இங்கு கோட்டை விட்டது ஃபெராரி. மீடியம் டயரில் தொடங்கிய லெக்லர்க்குக்கு, முதல் பிட் ஸ்டாப் முடிவிலும் மீடியம் டயரையே ஃபிட் செய்து அனுப்பியது அந்த அணி. 38-வது லேப்பில் வெர்ஸ்டப்பன் பிட் எடுத்ததால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அடுத்த லேப்பிலேயே லெக்லர்க்கை பிட்டுக்கு அழைத்தனர். வெர்ஸ்டப்பன் மீடியம் டயர்களோடு வெளியே வந்தார். அடுத்த 32 லேப்களுக்கு அது போதுமானதாக இருக்கும். ஆனால் லெக்லர்க் மீடியம் டயர்களைப் பயன்படுத்த முடியாது. சாஃப்ட் டயர்களைப் பயன்படுத்தினால், அது கடைசி வரை தாங்காது. கூடுதல் பிட் போகவேண்டாம் என ஹார்டு டயர்களைப் பயன்படுத்தியது ஃபெராரி. இந்த டிராக்கில் ஏற்கெனவே ஹார்ட் டயரைப் பயன்படுத்திய கார்கள் தடுமாறிக் கொண்டிருந்தன. லெக்லர்க்கும் தடுமாறவே செய்தார். அதைப் பயன்படுத்தி முதலிடத்துக்கு முன்னேறினார் வெர்ஸ்டப்பன்.

51-வது லேப்பில் பிட்டுக்குள் நுழைந்து சாஃப் டயர்களுடன் வெளியேறிய ஹாமில்ட்டன், புயல் வேகத்தில் முன்னேறினார். கடைசிக் கட்டத்தில் ரஸலையும் முந்தி இரண்டாவது இடம் பிடித்தார். ஒருவேளை இன்னும் 4 லேப்கள் அதிகமாக இருந்திருந்தால், ஹாமில்ட்டன் இந்த ரேஸை வென்றிருக்கவுமே கூடும். ஹார்டு டயர்கள் வேலை செய்ததால் கடைசிக் கட்டத்தில் மீண்டும் பிட் எடுத்தார் லெக்லர்க். அதனால் அவரால் ஆறாவது இடமே பெற முடிந்தது.

வெர்ஸ்டப்பன், ஹாமில்ட்டன், ரஸல் ஆகியோர் போடியம் ஏற, சைன்ஸ் மற்றும் செர்ஜியோ பெரஸ் அடுத்த இரு இடங்களைப் பிடித்தனர். இந்த ரேஸின் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ரேஸாக போடியம் ஏறினார் ஹாமில்ட்டன். கார்லோஸ் சைன்ஸைப் பின்னுக்குத் தள்ளி டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் நான்காவது இடத்துக்கு முன்னேறினார் ஜார்ஜ் ரஸல்.

2023 மியூசிக்கல் சேர்

கடந்த சில வாரங்களில் பல பஞ்சாயத்துகள் எழுந்திருக்கின்றன. 2023 சீசனில் யார் எந்த அணிக்குப் பங்கேற்கப் போகிறார் என்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

வெட்டல் ஓய்வு

நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான செபாஸ்டியன் வெட்டல், 2022 சீசனோடு ஃபார்முலா 1 பந்தயத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்ட்டன் மார்ட்டின் அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பங்கேற்றுக் கொண்டிருக்கும் வெட்டல், 2010 முதல் 2013 வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இதுவரை 53 வெற்றிகளை ஃபார்முலா 1 அரங்கில் பதிவு செய்திருக்கிறார். இதுவரை 3077 புள்ளிகள் குவித்திருக்கும் அவர், தன் கடைசி 9 ரேஸ்களிலும் முத்திரை பதித்து விடை பெறுவார் என்று அவர் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ஆஸ்ட்டன் மார்ட்டினில் அலோன்சோ

வெட்டல் ஓய்வால் காலியாகும் இடத்தை, ஃபெர்னாண்டோ அலோன்சோவைக் கொண்டு நிரப்புகிறது ஆஸ்ட்டன் மார்ட்டின் அணி. 4 முறை சாம்பியன் பட்டம் வென்றவரின் இடத்தை 2 முறை சாம்பியனுக்குக் கொடுத்துக் காத்திருக்கிறது அந்த அணி. ஆல்பைன் அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாகப் போட்டியிட்ட அலோன்சோவுக்குக் கடந்த சில மாதங்களாக அந்த அணியின் அணுகுமுறைகளில் பிரச்னை இருந்தது. சக ஆல்பைன் வீரர் ஓகான் சில ரேஸ்களில் மிகவும் அக்ரஸ்ஸிவாகச் செயல்பட்டது அலோன்சோவின் புள்ளிக் கணக்கைச் சற்று பாதித்தது. ஆல்பைன் அணி நிர்வாகம் அப்படியான தருணங்களில் தனக்குச் சாதகமான முடிவுகளை எடுக்காததால் அலோன்சோ விரக்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. அதன் காரணமாகவே அவர் அணி மாறியிருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதில்தான் மிகப்பெரிய பிரச்னை எழுந்திருக்கிறது. அலோன்சோ 3 ஆண்டு ஒப்பந்தம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார். 41 வயதான அவரோடு நீண்ட ஒப்பந்தம் செய்ய ஆல்பைன் தயாராக இல்லை. சுமுகமான முடிவு எட்டப்படாததால் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஃபார்முலா 1 அரங்குக்கு கடந்த ஆண்டு திரும்பிய அலோன்சோ, எதிர்பார்த்ததை விடவுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை நடந்த 13 ரேஸ்களில் 41 புள்ளிகள் எடுத்திருக்கும் அவர், தொடர்ந்து 8 ரேஸ்களாகப் புள்ளிகள் பதிவு செய்திருக்கிறார். நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரில், நல்ல நிலையில் இருக்கும்போது தடுமாறிக்கொண்டிருக்கும் ஆஸ்ட்டன் மார்ட்டின் அணிக்கு அலோன்சோ மாறியிருப்பது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. ரெனோ/ஆல்பைன் அணியை விட்டு அலோன்சோ விலகுவது இது மூன்றாவது முறை.

ஓய்வு பெறும் வெட்டல்... 
சொதப்பும் ரிக்கார்டோ!

ஆல்பைனைப் புறக்கணித்த பியாஸ்டிரி!

அலோன்சோவின் இந்த நகர்வு பற்றி ஆஸ்ட்டன் மார்ட்டின் அணி சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகுதான் அது ஆல்பைன் அணிக்கே தெரிந்திருக்கிறது. இதையடுத்து தங்கள் ரிசர்வ் டிரைவராக இருந்த ஆஸ்திரேலியாவின் ஆஸ்கர் பியாஸ்டிரியை 2023-ம் ஆண்டுக்கான தங்கள் டிரைவராக அடுத்த நாளே அறிவித்தது ஆல்பைன். ஆனால் அந்த அறிவிப்பு வந்த சில நேரத்திலேயே தன் சமூக வலைதளத்தில் அதைப் புறக்கணித்தார் பியாஸ்டிரி. தான் ஆல்பைன் அணியோடு ஒப்பந்தம் செய்யவில்லை என்றும், அந்த அணிக்குப் பங்கேற்கப் போவதில்லை என்றும் கூறினார். அவர் மெக்லரன் அணிக்குப் பங்கேற்க விரும்புவதாக பலரும் கருதுகிறார்கள். 2021-ம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன் பட்டம் வென்றவர் பியாஸ்டிரி. அவருடைய இந்த முடிவு ஆல்பைன் அணியை வெகுண்டெழச் செய்திருக்கிறது. அந்த அணியின் தலைமை நிர்வாகி ஓட்மார் ஷாஃப்னர், பியாஸ்டிரி கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாகவும், அவர் மீது வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ரிக்கார்டோவின் நிலை என்னவாகும்?!

மெக்லரன் அணியில் டேனியல் ரிக்கார்டோவின் செயல்பாடு, கடந்த 2 ஆண்டுகளாகவே மிகவும் சுமாராக இருந்து வருகிறது. 2021 சீசனின் மோன்சா வெற்றியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், 34 ரேஸ்களில் அவர் ஒரு போடியம்கூட ஏறவில்லை. 13 ரேஸ்களில் சேர்த்தே 19 புள்ளிகள்தான் பெற்றிருக்கிறார். ஒருபக்கம் லாண்டோ நாரிஸ் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், ரிக்கார்டோவின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. பியாஸ்டிரி மெக்லரன் அணியில் இணைய விருப்பம் தெரிவித்தால் அந்த அணி ரிக்கார்டோவின் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும். அதேசமயம் ரிக்கார்டோவுக்கு அடுத்த வாய்ப்பும் கேள்விக்குறியாகும். ஏனெனில், இரண்டு ஆண்டுகள் முன்பு ரெனோ (இப்போது ஆல்பைன்) அணியில் இருந்து வெளியேறியிருந்தார் ரிக்கார்டோ. அந்த அணியின் செயல்பாடுகள் திருப்தியளிக்காமல்தான் அந்த முடிவை எடுத்திருந்தார். இதைப் பார்க்கும்போது, ஆல்பைன் அணியும் அவரை மீண்டும் ஒப்பந்தம் செய்ய யோசிக்கலாம். ஹாஸ் அணி மிக் ஷூமேக்கரை ஒப்பந்தம் செய்யாவிட்டால், ரிக்கார்டோவின் அனுபவத்தைப் பயன்படுத்த நினைத்து அவரை ஒப்பந்தம் செய்யலாம். இல்லையெனில், ரிக்கார்டோ அடுத்த ஆண்டு ரேஸ் செய்யும் வாய்ப்பு கேள்விக்குறிதான்.

ஓய்வு பெறும் வெட்டல்... 
சொதப்பும் ரிக்கார்டோ!
ஓய்வு பெறும் வெட்டல்... 
சொதப்பும் ரிக்கார்டோ!