கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

ஃபெராரி இஸ் பேக்!

ஃபெராரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபெராரி

ரேஸ்: ஃபார்முலா 1

ஃபெராரி இஸ் பேக்!

2022 ஃபார்முலா ஒன் சீஸன் தொடங்கிவிட்டது. யாரும் எதிர்பார்த்திடாத ஒரு முடிவோடு பஹ்ரைனில் திரைவிலக்கியிருக்கிறது இந்தப் புதிய சீஸன். மெர்சிடிஸ் - ரெட்புல் யுத்தத்தை எல்லோரும் எதிர்பார்த்திருக்க, இரண்டு ஃபெராரி டிரைவர்கள் போடியம் ஏறி இந்தப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கின்றனர்.

புதிய விதிமுறைகள் பயன்பாட்டுக்கு வந்ததால், புதிய கார்களுக்குப் பழக்கப்படுத்திக்கொள்ள பல டிரைவர்கள் சிரமப்பட்டது பயிற்சியின்போதே தெரிந்தது. ‘போர்போய்சிங்’ பல அணிகளுக்கும் பெரும் சிக்கலாக அமைந்தது. நடப்பு சாம்பியன் மெர்சிடிஸ்கூட அதைச் சரிக்கட்டத் திணறியது.

சனிக்கிழமை நடந்த தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், ஃபெராரியின் சார்ல் லெக்லர்க் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹாமில்ட்டன், ஜார்ஜ் ரஸல் இருவருமே அந்த அணிகளுக்கு ஈடு கொடுக்கு முடியாமல் தடுமாறினார்கள். தகுதிச் சுற்றின் முதலிரு சுற்றுக்களிலும் வெர்ஸ்டப்பன் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், மூன்றாவது சுற்றில் செய்த தன் கடைசி முயற்சியில் அதிவேக லேப்பை பதிவு செய்து போல் பொசிஷனைத் தனதாக்கினார் லெக்லர்க்.

கடந்த ஆண்டு பஹ்ரைனில் போல் பொசிஷனிலிருந்து தொடங்கிய வெர்ஸ்டப்பன், இம்முறை இரண்டாவது இடத்திலிருந்து தொடங்கினார். கார்லோஸ் சைன்ஸ் (ஃபெராரி), செர்ஜியோ பெரஸ் (ரெட்புல்), ஹாமில்ட்டன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் தொடங்கினார்கள். மெர்சிடீஸ் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டு ஆல்ஃபா ரோமியோ அணியில் இணைந்த வால்ட்டேரி போட்டாஸ் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஆறாவதாக வந்தார். மெர்சிடீஸ் அணியில் அவருக்குப் பதில் இணைந்த ஜார்ஜ் ரஸல் ஒன்பதாவது இடத்தில் தகுதி பெற்றதால், போட்டாஸின் இந்தச் செயல்பாடு மெர்சிடீஸ் அணிக்கு நிச்சயம் கசப்பானதாகவே அமைந்திருக்கும்.

கார்லோஸ் சைன்ஸ், சார்ல் லெக்லர்க், லூயிஸ் ஹாமில்ட்டன்
கார்லோஸ் சைன்ஸ், சார்ல் லெக்லர்க், லூயிஸ் ஹாமில்ட்டன்
சார்ல் லெக்லர்க்
சார்ல் லெக்லர்க்

கடந்த ஆண்டு தகுதிச் சுற்றின் இரண்டாவது சுற்றுக்குள் நுழையவே தடுமாறிக் கொண்டிருந்த ஹாஸ் அணி இம்முறை கிரிட்டில் ஏழாவது இடம் பிடித்து அசத்தியது. அந்த அணிக்காக மீண்டும் களமிறங்கிய கெவின் மேக்னேசன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு தன் கம்பேக்கைச் சிறப்பாக்கினார்.

தகுதிச் சுற்றில் மெக்லரன், ஆஸ்ட்டன் மார்டின், வில்லியம்ஸ் அணிகள் மிகவும் தடுமாறின. அதுவும் மெக்லரன் அணியின் செயல்பாடு அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. பார்சிலோனாவில் நடந்த பயிற்சியின்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அந்த அணியின் கார்கள், பஹ்ரைனில் நேரெதிராகச் செயல்பட்டன. லாண்டோ நாரிஸ் 12-வது இடத்திலும், டேனியல் ரிக்கார்டோ 18-வது இடத்திலும் தகுதிபெற்றனர். இரண்டு ஆஸ்ட்டன் மார்டின் கார்களுமே மூன்றாவது தகுதிச் சுற்றைத் தாண்டவில்லை. மெர்சிடீஸ் அணிக்கு வேண்டுமானால் அதிர்ஷடத்தால் கூடுதல் புள்ளிகள் கிடைத்தது. மற்றபடி எந்த அணியாலும் ஞாயிற்றுக்கிழமை மாற்றத்தைக் காண முடியவில்லை.

கடந்த ஆண்டு போல் பொசிஷனில் தொடங்கியபோதும் பஹ்ரைன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தை வெர்ஸ்டப்பனால் வெல்ல முடியவில்லை. இரண்டாம் இடத்திலிருந்து தொடங்கிய ஹாமில்ட்ட்டன்தான் வெற்றி பெற்றார். அவரால் லெக்லர்க்கை முந்த முடியவில்லை.

நல்ல தொடக்கம் பெற்ற லெக்லர்க், அதைச் சிறப்பாகத் தக்கவைத்துக் கொண்டார். நேர்க்கோட்டில் ரெட்புல் அதிக வேகம் கொண்ட அணியாகக் கருதப்பட்டாலும், ஃபெராரியின் துல்லியமான செயல்பாட்டுக்கு மத்தியில் அவர்களால் முன்னிலை பெற முடியவில்லை. பிரேக் செய்யும்போது இன்ஜின் ஒத்துழைப்புக் கொடுக்காததால், வளைவுகளில் நேரத்தை இழந்தது ரெட்புல். இந்தப் பிரச்னைகளெல்லாம் ஃபெராரிக்கு ஏற்படவில்லை. அதனால், ஒவ்வொரு லேப்பும் வெர்ஸ்டப்பனுடனான இடைவெளியை அதிகரித்துக்கொண்டே இருந்தார் லெக்லர்க்.

ஃபெராரிக்கு அமைந்த தொடக்கம் ஆல்ஃபா ரோமியோவுக்கு அமையவில்லை. ஆறாவது இடத்திலிருந்து தொடங்கிய வால்ட்டேரி போட்டாஸ், மோசமான தொடக்கத்தின் காரணமாக 14-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதேபோல், செர்ஜியோ பெரஸ் இரண்டு இடங்களை இழந்தார். தொடக்கத்தில் இடங்களை இழந்திருந்தாலும், அதன்பிறகு சிறப்பாக செயல்பட்டு மேக்னேசன், ஹாமில்ட்டன் இருவரையும் முந்தினார் பெரஸ்.

தகுதிச் சுற்றில் தடுமாறியதைப் போலவே ரேஸிலும் தடுமாறியது மெர்சிடீஸ். அந்தக் கார்களில் பழைய வேகத்தைக் காண முடியவில்லை. 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்ட்டனால்கூட பிரச்னைகளை மீறி பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால், முதல் வீரராக லூயிஸை பிட்லேனுக்குள் அழைத்தது மெர்சிடீஸ். 11-வது லேப்பிலேயே பிட்டுக்குள் நுழைந்த அந்த முடிவில் ஹாமில்ட்டனுக்கும் பெரிதாக உடன்பாடில்லை. ஆனால், காரின் வேகத்தை உணர்ந்த அவருக்கு அதை ஏற்றுக் கொள்வதைத் தவிரவும் வேறு வழியில்லை.

லெக்லர்க்கை முந்த அண்டர்கட் செய்வதே வழியென்று முடிவெடுத்த ரெட்புல், 14-வது லேப்பிலேயே வெர்ஸ்டப்பனை பிட் செய்ய வைத்தது. டயர்கள் மாற்றப்பட, புயலெனப் பாய்ந்த மேக்ஸ், லெக்லர்க் உடனான இடைவெளியை வெகுவாகக் குறைத்தார். அடுத்த லேப்பில் லெக்லர்க் பிட்டில் இருந்து வெளியே வரும்போது, அந்த இடைவெளி நன்றாகக் குறைந்திருந்தது. இரண்டு கார்களும் போட்டி போடத் தொடங்கின. 17-வது லேப்பில் அந்தப் போட்டி உக்கிரமானது.

17-வது லேப்பின் முதல் திருப்பத்தில் லெக்லர்க்கை முந்தி முதல் முறையாக இந்த சீசனில் முன்னிலை பெற்றார் வெர்ஸ்டப்பன். ஆனால், நான்காவது திருப்பத்திலேயே அவரைத் துரத்தி மீண்டும் முன்னிலை பெற்றார் லெக்லர்க். அதன்பிறகு வெர்ஸ்டப்பனால் அந்த லேப்பில் லெக்லர்க்கை முந்த முடியவில்லை. 18-வது லேப்பில் இது மீண்டும் தொடர்ந்தது.

19-வது லேப்பிலும் இது தொடருமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லெக்லர்க் டிரேக்கின் வெளிப்புறம் சற்று அகலமாகச் சென்றதைப் பார்த்த வெர்ஸ்டப்பன் அதிவேகமாக பிரேக்கை அழுத்த, ‘லாக்-அப்’ ஏற்பட்டது. அதனால், அவரால் லெக்லர்க்கை முந்தவும் முடியவில்லை, அதன்பிறகு விரட்டவும் முடியவில்லை.

இரண்டாவது முறையாக லெக்லர்க்கை அண்டர்கட் செய்ய நினைத்தது ரெட்புல். ஆனால், கடந்த முறை டயரை ஆரம்பத்திலேயே அதிகமாகப் பயன்படுத்தியதால், இம்முறை அவுட்லேப்பில் வெர்ஸ்டப்பனை நிதானமாக ஓட்ட அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதுவும் அவர்களுக்குப் பின்னடைவாகவே அமைந்தது. லெக்லர்க் பிட் எடுத்துத் திரும்பும்போது, வெர்ஸ்டப்பனால் அந்த இடைவெளியை முன்பைப்போல் குறைக்க முடியவில்லை.

இருந்தாலும், முதலிடம் பிடிக்க வெர்ஸ்டப்பனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. பியர் கேஸ்லியின் கார் பிரச்னைக்குள்ளாகி தீப்பிடித்ததால், சேஃப்டி கார் வரவழைக்கப்பட்டது. ரேஸ் தொடர்ந்தபோது, வெர்ஸ்டப்பன் சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்ஜின் பவர் குறைந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர் பவர் பிரச்னை பற்றித் தொடர்ந்து அணிக்குச் சொல்லிக்கொண்டிருந்தாலும், ரெட்புல் அணியால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அவர் காரின் வேகம் குறையத் தொடங்கியது. ஒருகட்டத்தில் மூன்றாவது இடத்திலிருந்த சைன்ஸும் அவரை முந்தினார். இறுதியில் பேட்டரி பிரச்னை பெரிதாக 54-வது லேப்பின் முடிவில் ஓய்வு பெற்றார் வெர்ஸ்டப்பன்.

இந்த அதிர்ச்சியிலிருந்து ரெட்புல் மீள்வதற்குள் அடுத்த அடியும் விழுந்தது. வெர்ஸ்டப்பனைப்போல பெரஸும் இன்ஜின் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். அவர் வேகமும் குறைய, ஹாமில்ட்டன் அவரை நெருங்கிக் கொண்டிருந்தார். எப்படியும் தாக்குப் பிடித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசி லேப்பின்போது இன்ஜின் முழுமையாக நின்று சுழன்றது அவர் கார். இரண்டு ரெட்புல் கார்களும் சில நிமிட இடைவெளியில் ரேஸிலிருந்து வெளியேறின. 5 நிமிட இடைவெளியில் 30 புள்ளிகளை இழந்தது அந்த அணி!

இது மெர்சிடீஸ் அணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது. ஐந்தாவது இடத்தில் இருந்த ஹாமில்ட்டன், மூன்றாவது இடம் பிடித்து போடியம் ஏறினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1, 2 என முதலிரு இடங்களையும் பிடித்து அசத்தியது ஃபெராரி. தன்னுடைய மூன்றாவது ரேஸ் வெற்றியைப் பதிவு செய்தார் சார்ல் லெக்லர்க்.

ஃபெராரி இஸ் பேக்!

மேசபின் அவுட்; மேக்னசன் இன்!

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக, விளையாட்டு உலகம் ரஷ்யாவைப் புறக்கணிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, இந்த ஆண்டு நடக்கவிருந்த ரஷ்ய கிராண்ட் ப்ரீ பந்தயத்தை ரத்து செய்திருந்தது ஃபார்முலா ஒன் நிர்வாகம். இந்நிலையில், புதின் உடன் மேசபின் குடும்பம் நட்புறவில் இருந்ததால், அவர்களின் ‘உரல்கலி’ நிறுவன ஸ்பான்சர்ஷிப்பை ரத்து செய்தது ஹாஸ் அணி. அதோடு, தங்கள் டிரைவர் நிகிதா மேசபினையும் அணியிலிருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாக, 2020-ம் ஆண்டு அந்த அணியில் பங்கேற்றிருந்த கெவின் மேக்னசன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த சீஸனில் ஒரு முறை கூட இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு மேசபின் தகுதி பெறவில்லை. ஆனால், அணியில் ஒரு வாரம் முன்பே இணைந்திருந்த மேக்னேசன், தகுதிச் சுற்றில் ஏழாம் இடம் பிடித்து அசத்தினார். அதோடு நிற்காமல் ரேஸிலும் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தினார்!

புள்ளிப் பட்டியல் - டிரைவர்கள்

சார்ல் லெக்லர்க்: 26

கார்லோஸ் சைன்ஸ் ; 18

லூயிஸ் ஹாமில்ட்டன்: 15

ஜார்ஜ் ரஸல் : 12

கெவின் மேக்னசன் : 10

புள்ளிப் பட்டியல் - அணிகள்

ஃபெராரி : 44

மெர்சிடீஸ்: 27

ஹாஸ் : 10

ஆல்ஃபா ரோமியோ: 9

ஆல்பைன் : 8