Published:Updated:

ஃபார்முலா-1 எந்த அணி எவ்வளவு புள்ளி?

FORMULA ONE
பிரீமியம் ஸ்டோரி
FORMULA ONE

ஃபார்முலா-1

ஃபார்முலா-1 எந்த அணி எவ்வளவு புள்ளி?

ஃபார்முலா-1

Published:Updated:
FORMULA ONE
பிரீமியம் ஸ்டோரி
FORMULA ONE

2021 ஃபார்முலா-1 பந்தயத்தின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கப் போகிறது என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஏப்ரல் மாதம் நடந்த முதல் இரண்டு ரேஸ்களின் முடிவில் 1 புள்ளி வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் நடப்பு சாம்பியன் லூயிஸ் ஹாமில்ட்டன். இப்போது 5 ரேஸ்கள் முடிவில் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்திருக்கிறார் மேக்ஸ் வெர்ஸ்டப்பன். கேம் ஆன்!

போர்ச்சுகல், ஸ்பெய்ன் என இரண்டு ரேஸ்களிலும் போடியம் ஜெராக்ஸ் எடுத்தது போலத்தான் இருந்தது. லூயிஸ் ஹாமில்ட்டன் - மேக்ஸ் வெர்ஸ்டப்பன் - வால்ட்டேரி போட்டாஸ் : இதுதான் அந்த இரண்டு ரேஸ்களின் டாப் 3 முடிவுகள். ஸ்பெய்ன் கிராண்ட் ப்ரீ முடிவில், 14 புள்ளிகள் டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் முன்னிலை பெற்றிருந்தார் ஹாமில்ட்டன். ஆனால், மொனாகோ கிராண்ட் ப்ரீ புள்ளிப் பட்டியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

மொனாகோ - மிகவும் சவாலான இடம். நகரின் வீதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரேஸ் சர்க்யூட் மிகவும் குறுகலானது. மேடு பள்ளங்கள், கடினமான வளைவுகள் அதிகம் இருக்குமிடம். முன்னால் செல்லும் காரை முந்துவது சிரமம். அதனால், நிறைய விபத்துகள் நடக்கும். Safety கார்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும். அதனால், இங்கு poll பொசிஷன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மிக முக்கியமான இந்த ரேஸின் தகுதிச் சுற்றில், ஃபெராரி வீரர் சார்ல் லெக்லர்க் poll பொசிஷனைத் தனதாக்கினார். ஆனால், தன் சொந்த மண்ணில் சரித்திரம் படைக்க நினைத்த அவர் ஆசை நனவாகவில்லை.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?தகுதிச் சுற்றில் அதிவேக லேப்பைப் பதிவு செய்த லெக்லர்க், சில நிமிடங்களிலேயே தடுப்புகளில் காரை மோதினார். அதனால், தகுதிச் சுற்றும் முடிவுக்கு வந்தது. லெக்லர்க் பிரச்னை அதோடு ஓயவில்லை. ரேஸ் அன்று காலை அவர் கியர் பாக்ஸில் பிரச்னை என்ற செய்தி வந்தது. ஆனால், பரிசோதனைகளுக்குப் பிறகு கியர் பாக்ஸில் பிரச்னை இல்லையென்றும் லெக்லர்க் poll பொசிஷனில் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரைவ்ஷாஃப்டில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் வெளியேற நேர்ந்தது.

அதனால் இரண்டாவது இடத்திலிருந்த வெர்ஸ்டப்பன் முன்னிலையில் இருந்து தொடங்கினார். இருந்தாலும், டிராக்கின் வளைவு, மூன்றாவது பொசிஷனில் இருந்த போட்டாஸ், முன்னிலை பெறுவதற்குத் தோதானதாக இருந்தது. ஆனால், ஆரம்பத்திலேயே அதைச் சிறப்பாகக் கையாண்டார் வெர்ஸ்டப்பன். ரேஸ் தொடங்குவதற்கு முன்பே காரை கொஞ்சம் வலது பக்கமாக திருப்பி வைத்திருந்து அட்டகாசமாக டிஃபெண்ட் செய்தார். அப்போது பெற்ற முன்னிலையை 78 லேப்களிலும் அவர் தொடர்ந்தார்.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?மொனாகோ ரேஸ் தொடங்கியதிலிருந்தே சேஃப்டி கார் நிச்சயம் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. இதற்கு முன்பு நடந்த 10 ரேஸ்களில் ஒன்பதில் சேஃப்டி கார் பயன்படுத்தப் பட்டிருந்தது. அதனால்கூட, ஒருசில டிரைவர்கள் தங்கள் பிட் ஸ்டாப்பைத் தாமதப்படுத்தினார்கள். ஆனால், நேற்று அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ரேஸ் ஒரே சீராகச் சென்றது. ஒரு சில இடங்களில் மட்டுமே சில மாற்றங்கள் நடந்தன.

31-வது லேப்பில் வால்ட்டேரி போட்டாஸ் பிட்டுக்குள் நுழைந்தார். அவர் காரின் வலது முன் டயரைக் கழட்ட முடியாத நிலை ஏற்பட, அவர் ரேஸ் அந்த இடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஏழாவது இடத்தில் ரேஸைத் தொடங்கிய ஹாமில்ட்டன், அந்த இடத்திலிருந்து முன்னேறத் தடுமாற, மொனாகோ கிராண்ட் ப்ரீ மெர்சிடீஸ் அணிக்குச் சாதகமாக அமையவில்லை. பிட் ஸ்டாப்பை அட்டகாசமாகத் திட்டமிட்டதால் செபாஸ்டியன் வெட்டல், செர்ஜியோ பெரஸ் இருவரும் ஹாமில்டனை முந்தி அசத்தினர்.

இதைத் தவிர்த்து இந்த ரேஸில் பெரிய அதிசயமோ ஆச்சர்யமோ நிகழவில்லை. முதல் நொடியில் முன்னிலை பெற்ற வெர்ஸ்டப்பன் கடைசி வரை அதைத் தக்க வைத்தார். அவர் பிட் எடுத்து, செர்ஜியோ பெரஸ் பிட்டுக்குள் நுழையும் அந்த இடைவெளியில் மட்டும் பெரஸ் முன்னிலையில் இருந்தார். மற்றபடி ஆரம்பத்தில் இரண்டாம் இடத்திலிருந்த போட்டாஸ், இரண்டாம் இடத்தில் முடித்த கார்லோஸ் செய்ன்ஸ் யாரும் அவருக்கு சவாலளிக்கவில்லை. அதனால், எந்தவித பிரச்னையுமின்றி அவர் முதலிடம் பிடித்தார். மெக்லரன் வீரர் லாண்டோ நாரிஸ் மூன்றாவது இடம் பிடித்து போடியத்தை நிறைவு செய்தார்.ஏழாவது இடத்தை உறுதி செய்ததால், கடைசியில் சாஃப்ட் டயர் பயன்படுத்தி, அதிவேக லேப்புக்கான ஒரு புள்ளியை வசப்படுத்தினார் ஹாமில்ட்டன். ஆனால், இந்த ரேஸில் புள்ளிகள் தவறவிட்டதால் டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டார் நடப்பு சாம்பியன். அவரைவிட 4 புள்ளிகள் அதிகம் பெற்று 105 புள்ளிகளோடு முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார் வெர்ஸ்டப்பன்.

அதேபோல் அணிகளுக்கான சாம்பியன்ஷிப்பில் ரெட்புல் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது. போட்டாஸ், ஹாமில்ட்டன் இருவரும் மொனாகோவில் சறுக்கியதாலும், செர்ஜியோ பெரஸும் நான்காம் இடம் பெற்று புள்ளிகள் பெற்றதாலும், மெர்சிடீஸை விட இப்போது ஒரு புள்ளி முன்னிலை பெற்றிருக்கிறது அந்த அணி!

இந்த சீசனில் இதுவரை ஐந்து சுற்றுகள் முடிந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியின் செயல்பாடும் எப்படி இருக்கிறது? ஓர் அலசல்...

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Gonzalo Fuentes

ரெட்புல்

எப்போதும் தங்கள் ரிசர்வ் அணியிலிருந்தே டிரைவர்களை ப்ரமோட் செய்யும் ரெட்புல், இம்முறை அனுபவ வீரர் செர்ஜியோ பெரஸை ஒப்பந்தம் செய்ய, அதற்கான பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

முந்தைய ரேஸ்களில் பெரிய தாக்கம் ஏற்படுத்தாவிட்டாலும், மொனாகோவில் ரெட்புல் திட்டத்தைச் சரியாக அரங்கேற்றினார் பெரஸ்.

இந்த இடத்தில் பெரஸின் டிரைவிங்கை மட்டுமல்லாது ரெட்புல் நுணுக்கத்தையும் பாராட்டியாக வேண்டும். வெர்ஸ்டப்பனை பெரஸுக்கு முன்பாக பிட் எடுக்க வைத்து, அவருக்கு அந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அமைந்தது. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே அதிகம் எதிர்பாக்கப்பட்ட அவர்கள் காரின் வேகம், சிறப்பாகக் கைகொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அவர்களின் பிட் குழு - வழக்கம்போல் ஏலியன் லெவல்!

இதுவரை நடந்த 5 ரேஸ்களிலுமே முதல் இரு இடங்களுக்குள் முடித்திருக்கிறார் வெர்ஸ்டப்பன். ஆனால், பெரஸ் இன்னும் போடியம் ஏறவில்லை. போர்ச்சுகல், மொனாகோ இரண்டு ரேஸ்களிலும் அதிகபட்சமாக நான்காவது இடம் பிடித்திருக்கிறார். ரேஸில் பட்டையைக் கிளப்பும் பெரஸ், இன்னும் தகுதிச் சுற்றில் சிறப்பாகச் செயல்படவேண்டும். ஏனெனில், இன்னும் ஒருமுறை மட்டுமே (எமிலியா கிராண்ட் ப்ரீ) டாப் 3 பொசிஷனில் தொடங்கியிருக்கிறார். அதனால், இன்னும் நல்ல இடத்தில் பந்தயத்தைத் தொடங்குவது அவருக்கும் அவர் அணிக்கும் சாதகமாக அமையும்.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Sebastian Nogier

மெர்சிடீஸ்

2021 - மெர்சிடீஸுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையப் போகிறது. அவர்களின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டையிடும் திட்டத்தோடு களமிறங்கியிருக்கும் ரெட்புல், அதை இதுவரை சிறப்பாகச் செயல்படுத்திக்கொண்டும் இருக்கிறது.

ரெட்புல் கார்களின் வேகம் அவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தாலும், தங்களின் சிறப்பான யுக்திகளால் தொடர்ந்து தங்கள் கிளாஸை நிரூபித்தார்கள். பிட் ஸ்டாப்களை முடிவு செய்ததிலேயே போட்டிகளின் முடிவில் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது அந்த அணி. நடப்பு சாம்பியன் ஹாமில்ட்டன் இன்னும் தன் பிடியை விடாமல் ஒவ்வொரு ரேஸிலும் பட்டையைக் கிளப்பிக் கொண்டே இருக்கிறார்.

இதைவிட, மெர்சிடீஸ் அணிக்குப் பிரச்னையாக இருப்பது போட்டாஸின் சீசன் சென்றுகொண்டிருக்கும் விதம். முந்தைய சீசன்களில் ஹாமில்ட்டனோடு சேர்ந்து அவருமே ஒரு சாம்பியன்ஷிப் போட்டியாளராகத்தான் இருந்தார். ஆனால், இந்த முறை ஹாமில்ட்டன், வெர்ஸ்டப்பன் இருவருக்கும் அவரால் போட்டியளிக்க முடியவில்லை. ரெட்புல் கார் பெரஸுக்கு செட்டாகி விட்டால், அவர் ஸ்டார்டிங் கிரிட்டில் நல்ல இடத்திலிருந்து தொடங்கினால், நிச்சயம் போட்டாஸ் இன்னும் பின்தங்கக்கூடும். கடந்த சீசன் ஹாமில்ட்டன் - போட்டாஸ் எப்படி வெர்ஸ்டப்பனுக்குக் குடைச்சல் கொடுத்தார்களோ, அதை வெர்ஸ்டப்பன் - பெரஸ் கூட்டணி ஹாமில்ட்டனுக்குக் கொடுக்கக்கூடும். மெர்சிடீஸுக்கு இனி புதிய வியூகங்கள் தேவை!

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Luca Bruno

மெக்லாரன்

எதிர்பார்த்தது, எதிர்பாராதது என இரண்டும் கலந்த கலவையாகச் செல்கிறது மெக்லாரன் அணியின் சீசன். இளம் வீரர் லாண்டோ நாரிஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த சீசனை விடப் பலமடங்கு அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த சீசனில் 17 ரேஸ்களிலும் சேர்ந்து 97 புள்ளிகள் பெற்றவர், இந்த 5 ரேஸ்களிலேயே 56 புள்ளிகள் எடுத்திருக்கிறார். சென்ற ஆண்டு ஒரு முறை மட்டுமே போடியம் ஏறியவர் இப்போது இரண்டு முறை ஏறிவிட்டார். இது போக, டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். எல்லா வகையிலும் இந்த சீசன் அவருக்கு அட்டகாசமானதாகத் தொடங்கியிருக்கிறது. இதே ஃபார்மை அவர் தொடர்ந்தால் நிச்சயம் மூன்றாவது இடத்தைத் தக்க வைக்கலாம்.

நாரிஸ் பாசிட்டிவான முடிவுகள் கொடுத்தாலும், டேனியல் ரிக்கியார்டோவிடமிருந்து இன்னும் எதிர்பார்த்த முடிவுகள் மெக்லாரனுக்குக் கிடைக்கவில்லை. தன் புதிய அணிக்கு இன்னும் அவரால் பொருந்திப் போக முடியவில்லை. இதுவரை 24 புள்ளிகள் பெற்றிருந்தாலும், அவரால் எந்த ரேஸிலும் டாப் 5 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. குறிப்பாக மொனாகோவில் ரொம்பவே தடுமாறினார். முன்னாள் மெக்லாரன் வீரர் கார்லோஸ் சைன்ஸ், சார்ல் லெக்லர்க் இருவரும் ஃபெராரிக்கு நல்ல தொடக்கம் கொடுத்திருப்பதால், மெக்லாரன் மூன்றாவது இடம் பிடிக்க ரிக்கியார்டோ தன் பழைய ஃபார்முக்கு வருவது அவசியம். லாண்டோ நாரிஸோடு அவருக்கு இருக்கும் நட்பு, இவர் சீக்கிரம் அணிக்குள் செட் ஆவதற்கும், நாரிஸ் அனுபவம் பெறுவதற்கும் உதவலாம்!

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Roberto Piccinini

ஃபெராரி

இந்த சீசன் ஃபெராரிக்கு ஒரு நல்ல கம்பேக் சீசனாக அமையலாம். கார்லோஸ் சைன்ஸ், லெக்லர்க் இருவரும் சிறப்பாக இந்த சீசனைத் தொடங்கியிருக்கிறார்கள். மொனாகோவில் லெக்லர்க் காரில் மட்டும் கோளாறுகள் ஏற்படாமல் இருந்திருந்தால் போடியத்தில் இரு ஃபெராரி வீரர்களைப் பார்த்திருக்கலாம். சமீபத்தில் நடந்திடாத அந்தக் காட்சி அரங்கேறியிருக்கும். ஆனால், அவர்களால் அந்த டிரைவ்ஷாஃப்ட் பிரச்னையைச் சரி செய்யமுடியவில்லை. இன்னும் சுமார் 20 புள்ளிகள் அவர்கள் வசம் வந்திருக்க வேண்டியது. இரு நம்பத்தகுந்த டிரைவர்கள் கிடைத்துவிட்டார்கள். இனி காரில் இருக்கும் இதுபோன்ற சிறு பிரச்னைகளைச் சரிசெய்தால் நிச்சயம் ஃபெராரியால் மூன்றாம் இடத்துக்குப் போட்டியிட முடியும்.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Luca Brunoஆஸ்ட்டன் மார்ட்டின்

ஃபார்முலா ஒன் கம்பேக் ஆஸ்ட்டன் மார்ட்டின் அணிக்கு ஓரளவு சுமாராகவே தொடங்கியிருக்கிறது. முன்னாள் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் சுமாராகவே இந்த ரேஸைத் தொடங்கினார். முதலிரு ரேஸ்களிலும் 15-வது இடம் பிடித்தவர், போர்ச்சுகல், ஸ்பெய்ன் ரேஸ்களில் 13-வது இடமே பிடித்தார். ஆனால், மொனாகோவில் அட்டகாசமான ஒரு கம்பேக் கொடுத்தார். பிட்டில் இருந்து வெளியே வந்தபோது மிகச் சிறப்பாக செயல்பட்டு பீரே கேஸ்லி, ஹாமில்ட்டன் இருவரையும் முந்தினார். அந்த இடத்தில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியவர் கடைசி வரை அந்த இடத்தைத் தக்கவைத்து 10 புள்ளிகள் பெற்றார். இந்த சீசனில் முதல் முறையாக புள்ளிகள் பெற்றிருப்பது அவர் நம்பிக்கையை நிச்சயம் அதிகரிக்கும்.

மொனாகோ ரேஸில் ஆஸ்ட்டன் மார்ட்டின் எடுத்த ஒரு முடிவும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. 12-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கியவர் ‘ஹார்டு’ டயர் பயன்படுத்தியதால், 58-வது லேப் வரை பிட் ஸ்டாப் எடுப்பதற்கான தேவை ஏற்படவில்லை. அதனால், தனக்கு முன் இருந்து பிட் ஸ்டாப் எடுத்த டிரைவர்களை அவர்களால் முந்த முடிந்தது. போதாதற்கு போட்டாஸும் விலகியதால், எட்டாவது இடம் பிடித்தார் ஸ்ட்ரோல். கடந்த சீசன், நிறைவு செய்த ரேஸ்களில் ஒன்றில் மட்டுமே ஸ்ட்ரோல் புள்ளிகள் பெறவில்லை. ஆனால், இம்முறை முடித்த 5 ரேஸ்களில் இரண்டில் புள்ளிகள் பெறத் தவறவிட்டார். இவருக்குமே ஆஸ்ட்டன் மார்ட்டின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லைதான். ஆனால், மொனாகோ ரேஸ் நிச்சயம் அந்த அணிக்கு ஒரு பெரிய நம்பிக்கையாக இருக்கும்.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Luca Bruno

ஆல்ஃபா டூரி

இதுவரை நடந்த 5 ரேஸ்களிலும் குறைந்தபட்சம் ஒரு புள்ளியாவது பெற்றிருக்கிறது ஆல்ஃபா டூரி. முதல் ரேஸில் தடுமாறிய பீரே கேஸ்லி, அடுத்த ரேஸ்களில் நல்ல கம்பேக் கொடுத்துவிட்டார். மொனாகோவில் ஹாமில்ட்டன் முந்த முடியாத அளவுக்கு செயல்பட்டதே அட்டகாசமான விஷயம். இந்த சீசனின் மிகவும் இளம் வீரரான யூகி சுனோடா நம்பிக்கையளிக்கும் வகையில் இந்த சீசனைத் தொடங்கினார். பஹ்ரைனில் 2 புள்ளிகள் பெற்று தன் ஃபார்முலா 1 கரியரைத் தொடங்கியவர் அதன்பிறகு பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதுவரை, 5 ரேஸ்களிலும் சேர்ந்து 18 புள்ளிகள் பெற்றிருக்கிறது ஆல்ஃபா டூரி.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Luca Bruno

ஆல்பைன்

பஹ்ரைனில் ஆல்பைன் அணிக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்த ஃபெர்னாண்டோ அலான்சோ, சீசனின் முதல் ரேஸிலேயே ஓய்வு பெற்றார். எஸ்டபன் ஓகானாலும் புள்ளிகள் பெற முடியவில்லை. ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு ரேஸிலும் தவறாமல் புள்ளிகள் பெற்றிருக்கிறார் ஓகான். 2017 சீசனுக்குப் பிறகு, இப்போதுதான் முதல் முறையாக தொடர்ந்து 4 ரேஸ்களில் புள்ளிகள் பெற்றிருக்கிறார் ஓகான். அந்த கன்சிஸ்டன்ஸி இப்போது திரும்பி விட்டால் ரிக்கியார்டோ, கேஸ்லி ஆகியோருக்குப் போட்டியளிக்கலாம். இதுவரை 5 புள்ளிகள் எடுத்திருந்தாலும், அலான்சோவால் எந்த அளவுக்கு சீராக செயல்பட முடியும் தெரியவில்லை. அதனால், ஓகான் தவறாமல் புள்ளிகள் பெறுவது ஆல்பைன் அணிக்கு முக்கியம்.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?

ஆல்ஃபா ரோமியோ

41 வயதிலும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் கிமி ராய்க்கோனன். ஆனால், இந்த சீசனில் இன்னும் புள்ளிகள்தான் வசப்படவில்லை. இரண்டு முறை 11-வது இடத்தில், ஒரு முறை 12-வது இடத்தில் முடித்திருக்கிறார். இவர் புள்ளிகள் பெறவேண்டும் என்று நிச்சயம் ஒவ்வொரு ஃபார்முலா 1 ரேஸருமே எதிர்பார்ப்பார்கள். முதல் 4 ரேஸில் ஆன்டோனியோ ஜியோவனாசியும் புள்ளிகள் பெறத் தவறினார். ஆனால், ஒருவழியாக மொனாகோ முதல் புள்ளியைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. கடந்த சீசனில் மொத்தமே 8 புள்ளிகள்தான் பெற்றது ஆல்ஃபா ரோமியோ. அதைவிட அதிகம் பெறுவது அவர்களின் முக்கிய இலக்காக இருக்கும். ஆனால், அதற்கான ஒளி இதுவரைப் பெரிதாகத் தெரியவில்லை.

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Luca Bruno

வில்லியம்ஸ்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக புள்ளிக் கணக்கைத் தொடங்காமலேயே வில்லியம்ஸின் சீசன் முடிவதற்கான அத்தனை சாத்தியங்களும் இப்போது தெரிகிறது. நிகோலஸ் லடிஃபி, ஜார்ஜ் ரஸல் இருவருமே இன்னும் ஒருமுறை கூட பத்தாவது இடத்துக்குப் பக்கத்தில்கூட வரவில்லை. ஆளுக்கு ஒரு ரேஸில் ஓய்வும் பெற்றுவிட்டனர். ஓகான், கேஸ்லி, ரிக்கியார்டோ, கேஸ்லி, சைன்ஸ் போன்றவர்களே 7-10 இடங்களுக்குப் போராடிக் கொண்டிருப்பார்கள் என்பதால், வில்லியம்ஸ் டக் அவுட் ஆகத்தான் வாய்ப்புகள் மிக அதிகம்.ஆ

ஃபார்முலா-1
எந்த அணி எவ்வளவு புள்ளி?
Luca Bruno

ஹாஸ்

கடந்த முறை 3 புள்ளிகள் பெற்ற ஹாஸ், இந்த முறை வில்லியம்ஸுக்கு நிச்சயம் டஃப் கொடுக்கும். ஆனால், ஒரு புள்ளி எடுத்துவிட்டாலும் அது நிச்சயம் அவர்களுக்குப் பெரிய நம்பிக்கையாக விளங்கும். முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஷுமேக்கரின் மகன் மிக், இன்னொரு இளம் வீரர் நிகிதா மேஸபின் என இரு புதுமுக வீரர்களுமே ஃபார்முலா 1 பந்தயத்தின் சுவையை இப்போதுதான் ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், மேஸபின் தன் முதல் ரேஸின் இரண்டாவது டர்னிலேயே வெளியேறிய பிறகு இருவரும் தங்கள் ரேஸ்களை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதைச் சொல்கிறது. முன்பு சொல்லியதைப்போல் அவர்கள் ஒரு புள்ளி எடுத்தாலும் அவர்களுக்கு அது பெரிய விஷயமே!