Published:Updated:

கிங் கோலி... டேட்டாக்கள் சொல்வது என்ன?! #HBDKohli #Vikataninfographics

விராட் கோலி

இலக்கு என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பின் அதற்கேற்ப தன் ஆட்டங்களை வடிவமைத்து ஆடக் கூடியதில் கோலிக்கு நிகர் கோலி மட்டுமே.

கிங் கோலி... டேட்டாக்கள் சொல்வது என்ன?! #HBDKohli #Vikataninfographics

இலக்கு என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பின் அதற்கேற்ப தன் ஆட்டங்களை வடிவமைத்து ஆடக் கூடியதில் கோலிக்கு நிகர் கோலி மட்டுமே.

Published:Updated:
விராட் கோலி
`கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு'

என்ற வரிகளுக்கேற்ப, கிரிக்கெட்டை முறையாகக் கற்ற இவருக்குச் சென்ற இடமெல்லாம் புகழ் மட்டுமே பரிசாகக் கிடைத்தது. விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட்டின் மூலம் அடையாளத்தைத் தேடிக்கொள்ள விரும்பியவர், இன்று கிரிக்கெட்டின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறார். விராட் கோலி - பேட்டிங்கில் அசாத்திய சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இவரைப் பற்றிய புள்ளி விவரக் கட்டுரைதான் இது.

Virat Kohli
Virat Kohli

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருநாள் போட்டிகள்!

ஜூனியர் உலகக் கோப்பையைக் கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமையோடு, இலங்கைச் சுற்றுப் பயணத்தில் தன் முதல் ஒருநாள் போட்டியை ஆடினார் கோலி. முதல் போட்டியில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்து பெவிலியனுக்குத் திரும்பினார். ஆனால், இன்று ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அன்று 12 ரன்களோடு மைதானத்தை விட்டு வெளியேறி பெவிலியனுக்குச் சென்ற கோலி, இன்று டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் (சாரி, இப்போது அருண் ஜேட்லி மைதானம்) உள்ள பெவிலியன் ஸ்டாண்டின் அடையாளமாக மாறியிருக்கிறார். இதுதான் 'கிங்' கோலியின் சாதனைச் சுருக்கம். இளம்வயதிலேயே பெவிலியனுக்குப் பெயர் சூட்டும் அளவுக்குப் பெருமையை எட்டியது கோலி மட்டும்தான்.

Virat Kohli Pavilion In Delhi cricket stadium
Virat Kohli Pavilion In Delhi cricket stadium

2008-ம் ஆண்டு இலங்கை தொடருக்கு அடுத்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றார் கோலி. ஆனால், எந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2009-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 316 ரன் என்ற இமாலய இலக்கோடு களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணியின் ஓப்பனிங் ஜாம்பவான்களான சேவாக் மற்றும் சச்சின் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், கம்பீரோடு கைகோத்த கோலி தன் முதல் சதத்தைப் பதிவு செய்து 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்த கம்பீர் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். அந்தப் போட்டியில் கம்பீர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஆட்டநாயகன் விருதைக் கோலிக்குக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

கோலியின் பாசிட்டிவான ஆட்டம் மற்றும் விரைந்து ரன் சேர்க்கும் திறன் ஆகியவை என் தோளிலிருந்து சுமையை இறக்கி வைத்துவிட்டு, எளிதாக ரன் சேர்க்க உதவியது. எனவே, இந்த ஆட்டநாயகன் விருது கோலிக்கானது.
கௌதம் கம்பீர்

அன்று கோலி சேஸிங்கில் ஆடிய ஆட்டம்தான், இன்று கோலிக்குக் கிடைத்திருக்கும் `சேஸிங் கிங்' பட்டத்தின் விதை. முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் இரண்டாம் இன்னிங்ஸில் கோலியின் ஆட்டம் வெறித்தனமாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் கோலியின் சராசரி 51.32 என்றால் அதுவே சேஸிங்கில் 68.50 ஆக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை அடைய, கோலிக்கு இன்னும் 7 சதங்கள் தேவைப்படுகின்றன. அதுவே, சேஸிங்கில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையை எப்போதோ எட்டிவிட்டார் கோலி. இலக்கு என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பின் அதற்கேற்ப தன் ஆட்டங்களை வடிவமைத்து ஆடக் கூடியதில் கோலிக்கு நிகர் கோலி மட்டுமே. பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் 5,054 ரன்கள் குவித்திருக்கும் கோலி, ஓடி எடுத்த ரன்கள் அதைவிட அதிகம். 6,466 ரன்கள் ஓடியே எடுத்துள்ளார். இந்தப் புள்ளி விவரம் கோலியின் ஃபிட்னஸ் மற்றும் க்ளாஸை நமக்கு உணர்த்துகிறது.

சேஸிங்கில் எவரும் கோலிக்கு அப்பால் சென்றுவிட முடியாது; என் வாழ்வையே கோலியின் மீது பணையம் வைப்பேன்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன்

ஆண்டு வாரியாக கோலியின் ரன் கணக்கை எடுத்துக்கொண்டால், அறிமுகமான முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு சதத்தோடு 484 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 2010-ம் ஆண்டு, 3 சதங்கள், 995 ரன்கள் என்று பேட்டிங்கில் அவர் காட்டிய வளர்ச்சி, அவரை உலகக் கோப்பை அணியில் இடம்பெறச் செய்தது. இந்தியா விளையாடிய அனைத்து உலகக் கோப்பை போட்டிகளிலும் கோலியும் ஆடினார். 2011 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து, `அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே சதமடித்த முதல் இந்தியர்' என்ற பெருமையைப் பெற்றார் கோலி. 9 உலகக் கோப்பை போட்டிகளில் 282 ரன்கள் மட்டுமே அடித்திருந்தாலும், முதல் போட்டியில் அடித்த சதமும், இறுதிப் போட்டியில் கம்பீர் உடனான 83 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் கோலிக்கு ப்ளஸாக அமைந்தது.

அதன்பின், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து உடனான தொடர்களில் ரன்கள் குவித்து அசத்தினார் கோலி. 2011-ம் ஆண்டு மட்டும் 1381 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பெயராக மாறினார் விராட். 2012-ம் ஆண்டும் 1,000 ரன்களைக் கடந்தார். ஆசியக் கோப்பை போட்டிகளில், இந்திய அணியின் துணைக் கேப்டன் பொறுப்பு கோலிக்கு வழங்கப்பட்டது. 357 ரன்களோடு அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் கோலி.

2012-ம் ஆண்டில் கோலி ஆடிய ஆட்டம் அவரை, ஐசிசி-யின் `ODI XI' அணியில் இடம்பெறச் செய்தது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளிலும் 1,000 ரன்களுக்கு மேல் கடந்து அசத்தினார் கோலி. 2015-ம் ஆண்டு அவரது ரன் குவிப்பில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதற்கு முன்பான மூன்று ஆண்டுகளில் 50+ சராசரி வைத்திருந்தவர், 2016-ம் ஆண்டில் 36.65 சராசரி மட்டுமே வைத்திருந்தார். அவர் மீது விமர்சனங்கள் எழத் தொடங்கின. மிகக் குறுகிய காலத்திலேயே தன் பேட்டிங் மூலம் அனைத்து நெகட்டிவ் விமர்சனங்களையும் தகர்த்தெரிந்தார். 2016-ம் ஆண்டு 92.38 சராசரியோடு 739 ரன்களைக் குவித்து கம்பேக் கொடுத்தார். 2017-ம் ஆண்டு 76.84 சராசரி வைத்திருந்தவர், 2018-ம் ஆண்டு 133.56 சராசரி பெற்று பேட்டிங்கில் வேற லெவல் செய்தார். இந்த ஆண்டும் 1,000 ரன்களுக்கு மேல் கடந்துவிட்டார்.

Virat Kohli
Virat Kohli
Vikatan Infographics

இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற ஆசிய மைதானங்களில் மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மைதானங்களிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கோலி. ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதமடித்துள்ளார். கிரிக்கெட் விளையாடும் முக்கிய நாடுகளுள், அவர் சதமடிக்காத ஒரே நாடு பாகிஸ்தான். காரணம். கோலியின் வருகைக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில், இந்தியா ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை.

Virat Kohli
Virat Kohli
Vikatan Infographics

டெஸ்ட் போட்டிகள்!

2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் கோலி. அந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 76 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட ஆரம்பித்த முதல் ஐந்து ஆண்டுகளில் (2011-2015) 2,994 ரன்கள் குவித்திருந்தார். `டெஸ்ட் போட்டிக்குக் கோலி சரிப்பட்டு வரமாட்டார்', `5 வருடங்களில் ஒரு இரட்டை சதம்கூட அடிக்கவில்லை' என்று தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்தன. இப்படியான விமர்சனம் வைத்தவர்களுக்கு அடுத்த இரண்டே ஆண்டுகளில் 6 இரட்டை சதங்களை பரிசளித்தார்.

Virat Kohli
Virat Kohli
Vikatan Infographics

2015-ம் ஆண்டுக்குப் பிறகான மூன்று ஆண்டுகளில் (2016-2018) மட்டும் 3,596 ரன்களைக் குவித்து `டெஸ்ட் போட்டிகளிலும் நான் ராஜாதான்' என்று காட்டினார். இந்த ஆண்டு மேலும் ஓர் இரட்டை சதமடித்து, டெஸ்ட் போட்டிகளில் `அதிக இரட்டை சதங்கள் (7) அடித்த இந்தியர்' என்ற பெருமையைத் தன்வசப்படுத்திக் கொண்டார்.

Virat Kohli
Virat Kohli
Vikatan Infographics

டெஸ்ட் போட்டிகளில், இந்திய மண்ணில் 3,422 ரன்கள் குவித்துள்ளார். அதற்கடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 6 சதங்கள் 3 அரைசதங்கள் என 1,274 ரன்களைக் குவித்துள்ளார் கோலி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டர் விருதை மட்டுமே பெற்றுவந்த கோலி கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் 1,322 ரன்கள் குவித்து `டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்' விருதையும் தட்டிச் சென்றார்.

சர்வதேச டி20 போட்டிகள்!

ஒருநாள் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியபோது சச்சின் தன் ஸ்டைலான ஆட்டத்தால் ஒருநாள் போட்டிகளின் அடையாளமாக மாறினார். டெஸ்ட் போட்டிகளில் தன் அசாத்திய பேட்டிங் திறமையால் தனக்கென தனி இடம் பிடித்தார் ப்ரெய்ன் லாரா. அதேபோல டி20 போட்டிகளின் அடையாளமாகக் கோலியைச் சொல்லலாம். சர்வதேச டி20 போட்டிகளில், 50+ போட்டிகளில் விளையாடி, 50.00 சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் கோலி மட்டுமே. 72 போட்டிகளில் 2,450 ரன்கள் குவித்து டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளார். முதலிடத்தில் உள்ள ரோஹித் ஷர்மா இவரைவிட 2 ரன்கள் மட்டுமே அதிகம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்களை (22) அடித்தவரும் கோலிதான்.

Virat Kohli
Virat Kohli

ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல டி20 போட்டிகளிலும் கோலிதான் `சேஸிங் கிங்' என்பதை உணர்த்துகிறது புள்ளி விவரங்கள். டி20 சேஸிங்கில் கோலியின் சராசரி 81.24. ஆட்டத்தின் இரண்டாம் இன்னிங்ஸில், 30 முறை களமிறங்கி 15 அரைசதங்கள் அடித்து 1,381 ரன்கள் குவித்துள்ளார் கோலி. 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் மட்டும் 319 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் `ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்' என்ற பெருமையைப் பெற்றார்.

Virat Kohli
Virat Kohli
Vikatan Infographics

டி20 என்பது அதிரடியாக சிக்ஸர் மழை பொழியும் வீரர்களுக்கான விளையாட்டு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து உண்டு. ஆனால், பவுண்டரிகள் மூலமே டி20 போட்டிகளில் கொடிகட்டிப் பறக்கிறார் கோலி. சர்வதேச டி20 போட்டிகளில், அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில் கோலிக்கே முதலிடம். அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 20 இடங்களில்கூட அவர் இல்லை. சர்வதேச டி20-களில் 235 பவுண்டரிகளை அடித்துள்ள கோலி, வெறும் 58 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்தப் புள்ளிவிவரம், தூக்கி அடித்து தன் விக்கெட்டை விட்டுவிடக் கூடாதென்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் கோலி என்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில் கேப்களைக் கண்டறிந்து பவுண்டரிகளை ஸ்கோர் செய்து ஸ்ட்ரைக் ரேட்டையும் சரியாக வைத்துக்கொள்ளக் கோலி தவறவில்லை.

`கேப்டன் பொறுப்பேற்ற பின்பு கோலியால் ரன் குவிக்க முடியாது' என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தற்போது மூன்று ஃபார்மெட்டிலும் கேப்டனாக பொறுப்பேற்று தான் குவிக்கும் ரன்கள் மூலம் அந்த விமர்சனத்தைக் காணாமல் போகச் செய்துவிட்டார் கோலி.

சிறந்த டெஸ்ட் வீரர்... கோலி, சிறந்த ஒருநாள் வீரர்... கோலி, சிறந்த டி20 வீரர்... கோலி!
முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன்

சர்வதேச கிரிக்கெட்டில் இது `கோலியின் காலம்'. எனவே, விமர்சனங்கள் முன்வைப்பதைத் தவிர்த்துவிட்டு கோலியை முழுமையாகக் கொண்டாடுவதே அவர் திறமைக்கு நாம் செய்யும் மரியாதை. வாருங்கள் கோலியைக் கொண்டாடுவோம்!

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் கோலோச்சும் பேட்டிங் ராட்சசன் விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!