Published:Updated:

கவாஸ்கர் முதல் ஹர்பஜன் சிங் வரை... சினிமாவுக்கு வந்த கிரிக்கெட் வீரர்கள்!

சினிமாவுக்கு வந்த கிரிக்கெட் வீரர்கள்!
Listicle
சினிமாவுக்கு வந்த கிரிக்கெட் வீரர்கள்!

கிரிக்கெட் வீரராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர்களின் பட்டியல் இது!


இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கும் சினிமாவுக்கும் எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சினிமா நட்சத்திரங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டாடி தீர்க்கின்றனர். கிரிக்கெட் வீரர்களின் பயோபிக் உருவானால் அந்தப் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம், 'எம்.எஸ்.தோனி - அன்டோல்ட் ஸ்டோரி'.

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு வீரர் புகழ்பெற்றால் உடனே அவர்களை விளம்பரங்களில் நடிக்க வைத்துவிடுவது இங்கே வழக்கம். `Boost is the secret of my energy' முதல் `தொண்டையில் கிச் கிச்' வரை அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. வெள்ளித்திரையில் நாயகர்களாகவும் அவதாரம் எடுத்துள்ள சில கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இது.


1
சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கருக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றைய பெரும்பாலான சாதனைகளுக்கு அஸ்திவாரமாக இருந்தவர் கவாஸ்கர். கிரிக்கெட்டில் ஜொலித்த இவரை `சாவ்ளி ப்ரேமாச்சி' என்ற படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது, மராத்திய சினிமா. 1974-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மதுமதி என்பவர் நடித்திருந்தார். கவாஸ்கர் நடிப்பதால் இதற்கு எதிர்பார்ப்பு இருந்ததே தவிர படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு, 1988-ல் வெளியான `மாலாமால்' என்ற பாலிவுட் படத்தில் கிரிக்கெட் வீரராகவே ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார், சுனில் கவாஸ்கர்.


2
அஜய் ஜடேஜா

அஜய் ஜடேஜா

இவர் 1992 - 2000 காலக்கட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ஆல்ரவுண்டர். மேட்ச் ஃபிக்ஸிங் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டு, ஐந்து ஆண்டு கழித்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். 2003-ல் வெளியான 'கேல்' என்ற பாலிவுட் படத்தில் சன்னி தியோல் - சுனில் ஷெட்டி ஆகியோருடன் நடித்திருந்தார். பிறகு, 'பல் பல் தில்கே சாத்' என்ற படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவில் முறையான வரவேற்பு கிடைக்காததால் கிரிக்கெட் வர்ணனையாளராக தன் பணியைத் தொடங்கினார் அஜய் ஜடேஜா. ராஜ்குமார் ராவ், சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் நடிப்பில் வெளியான 'கை போ ச்சே' என்ற படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக கேமியோ ரோலில் நடித்திருப்பார்.


3
வினோத் காம்ப்ளி

வினோத் காம்ப்ளி

சச்சினையும் இவரையும் அச்சரேக்கரின் குருகுலத்திலிருந்து வந்த இரட்டை கதிர்கள் என்றே சொல்லலாம். இவரின் முதல் ரஞ்சி போட்டியில் முதல் பந்தே சிக்ஸர் அடித்து எதிரணியை அசரடித்தவர். குறைவான இன்னிங்ஸில் (14) 1000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ஆனால், கிரிக்கெட் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லாத காரணத்தால் இவரின் கவனம் சினிமா பக்கம் திரும்பியது. `அன்னார்த்' என்ற பாலிவுட் படத்தில் சஞ்சய் தத், சுனில் ஷெட்டி ஆகியோருடன் நடித்திருந்தார். பிறகு, 'பல் பல் தில்கே சாத்' படத்தில் அஜய் ஜடேஜாவுடன் நடித்தார். ஒரு கன்னட க்ரைம் த்ரில்லர் படத்திலும் நடித்துள்ளார். தவிர, இந்தி பிக்பாஸ் 3-வது சீசனில் ஒரு போட்டியாளராக இருந்துள்ளார் வினோத் காம்ப்ளி.


4
சையது கிர்மானி

சையது கிர்மானி

1983-ல் கபில் தேவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பை வென்றபோது சையது கிர்மானிதான் விக்கெட் கீப்பர். ஆலன் பார்டரின் கேட்சை தாவிப்பிடிக்கும்போது, காலில் இவருக்கு அடிப்பட்டது. அப்போது சில காலம் விளையாடாமல் இருந்தவருக்கு அடுத்து இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. 1985-ல் வெளியான 'கபி அஜ்னபி தி' என்ற பாலிவுட் படத்தில் வில்லனாக நடித்தார். இதன் பிறகு, `மழவில்லாட்டம் வரே' என்ற மலையாளப் படமொன்றில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.


5
சலில் அன்கோலா

சலில் அன்கோலா

சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான டெஸ்ட் போட்டியில்தான் இவரும் அறிமுகமானார். ஆனால், இவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியும் அதுதான். இந்தியாவுக்காக 54 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளார். அணியில் இடம் கிடைக்காததால் இவரின் கவனம் வெள்ளித்திரை பக்கம் திரும்பியது. முதல் படமே சஞ்சய் தத்துடன் 'குருஷேத்திரம்'. இவரது நடிப்பு பிடித்துப்போக வெள்ளித்திரை, டிவி சீரியல் என சலில் மிகவும் பிஸியானார். இதுவரை 10 சீரியல்கள், 6 படங்கள் என நடித்துள்ளார். தவிர, பிக் பாஸ் முதல் சீசனில் ஒரு போட்டியாளராகவும் கலந்துகொண்டார். 'Fear Factor India', 'Power couple 1', 'Box cricket League 1' உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்றுள்ளார்.


6
யோக்ராஜ் சிங்

யோக்ராஜ் சிங் :

யுவராஜ் சிங்கின் தந்தை. இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். காயம் காரணமாக அணியிலிருந்து விலகியவர், பிறகு சேர்க்கப்படவே இல்லை. அதனால் சினிமா பக்கம் கவனம் செலுத்தி வந்தார். பஞ்சாபி சினிமா, பாலிவுட் என முழுநேர நடிகராக 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். தற்போது 'தர்பார்' படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.


7
சந்தீப் பாட்டீல்

சந்தீப் பாட்டீல் :

1983ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இவரும் இருந்தார். இந்தத் தொடர் முடிந்தவுடன் சினிமா வாய்ப்பு வர, 'கபி அஜ்னபி தி' படத்தில் ஹீரோவாக நடித்தார், சந்தீப். இதில் இவருக்கு வில்லனாக சையது கிர்மானி நடித்திருந்தார். இரண்டு கிரிக்கெட் வீரர்கள் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால், வரவேற்பு கிடைக்கவில்லை.


8
சடகோபன் ரமேஷ்

சடகோபன் ரமேஷ் :

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், இந்தியாவுக்காக 19 டெஸ்ட் போட்டிகளிலும் 24 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பர்ஃபாமன்ஸ் சரியாக இல்லாத காரணத்தால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். சவுண்ட் இன்ஜினீயரான இவர் தனது பிசினஸில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது வந்த வாய்ப்புதான் 'சந்தோஷ் சுப்ரமணியம்'. இதில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்திருந்தார். பிறகு, 'போட்டா போட்டி 50/50' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.


9
ஶ்ரீசாந்த்

ஶ்ரீசாந்த் :

மைதானத்திற்குள் தனது ஆக்ரோஷத்தை வெளிக்காட்டுவதில் புகழ்பெற்றவர் ஶ்ரீசாந்த். 2013-ல் நடந்த ஆறாவது சீசன் ஐபிஎல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்ததாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை வாய்ப்பு வர பயன்படுத்திக்கொண்டார். ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டவருக்கு பிக் பாஸ் (12வது சீசன்) வாய்ப்பு வர, அந்த சீசனின் ரன்னராக வெளியே வந்தார். தவிர, இந்தியில் 'அக்சார் 2', 'கேபரட்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் 'டீம் 5' என்ற படத்தில் நிக்கி கல்ராணியுடன் நடித்திருந்தார். தற்போது, ஹாரர் காமெடி ஜானரில் ஹன்சிகா நடிக்கும் தமிழ்ப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஶ்ரீசாந்த். இதை `அம்புலி' படத்தை இயக்கிய ஹரி ஷங்கர் - ஹரீஷ் நாரயணன் இயக்குகிறார்கள்.


10
இர்ஃபான் பதான்

இர்ஃபான் பதான் :

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் இவருக்கும் ஆக்‌ஷன் கேரக்டர்தானாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.


11
ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் :

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்ததிலிருந்தே தமிழில் ட்வீட் செய்து வருகிறார். இவரது ட்வீட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு தானேதான் டப்பிங் பேசுவேன் என ஸ்ட்ரிக்டாகச் சொல்லிவிட்டாராம் ஹர்பஜன்.

வெல்கம் பாய்ஸ்!


12

இவர்கள் தவிர, கபில் தேவ், சச்சின் டெண்டுகர் உள்ளிட்ட வீரர்கள் கேமியோ ரோல்களில் தலைக்காட்டி சென்றுள்ளனர். யுவராஜ் சிங் தனது தந்தையுடன் 'மென்டி சக்னா டி' என்ற பஞ்சாபி படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றியிருப்பார். மொய்ன் கான், பிரெட் லீ, பிராவோ உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் வெள்ளித்திரையில் இடம்பெற்றுள்ளனர்.