Published:Updated:

``WWE ரிங்ல நின்னு தமிழ்ல பேசணும்னு ஆசை!" - ப்ரோ ரெஸ்லிங் முதல் தமிழன் ஜெய் ஜாக்சன்

Jey Jackson

முதல்முறையாக ஓர் இளைஞர் அந்தக் கனவு நிஜமாகும் தொலைவுக்கு நகர்ந்திருக்கிறார். ப்ரோ ரெஸ்லிங் உலகின், முதல் தமிழனாக சாதனை படைத்திருக்கிறார். அவரே, CWE-யின் நேஷனல் சாம்பியன் ஜெய் ஜாக்சன்.

``WWE ரிங்ல நின்னு தமிழ்ல பேசணும்னு ஆசை!" - ப்ரோ ரெஸ்லிங் முதல் தமிழன் ஜெய் ஜாக்சன்

முதல்முறையாக ஓர் இளைஞர் அந்தக் கனவு நிஜமாகும் தொலைவுக்கு நகர்ந்திருக்கிறார். ப்ரோ ரெஸ்லிங் உலகின், முதல் தமிழனாக சாதனை படைத்திருக்கிறார். அவரே, CWE-யின் நேஷனல் சாம்பியன் ஜெய் ஜாக்சன்.

Published:Updated:
Jey Jackson

WWE ரிங் என்பது, தமிழகத்தின் பல தலைமுறை இளைஞர்களுக்கும் பெரும் கனவு. அங்கு பார்வையாளனாக செல்வதே அவ்வளவு எளிதல்ல என்கிற உண்மை, அங்கு வீரர்களாகச் செல்ல நினைத்தவர்களின் கனவையும் கைவிட வைத்தது. அப்படியான ஆயிரமாயிரம் இளைஞர்களுக்கு மத்தியில், முதல்முறையாக ஒரு தமிழ் இளைஞர் அந்தக் கனவு நிஜமாகும் தொலைவுக்கு நகர்ந்திருக்கிறார். ப்ரோ ரெஸ்லிங் உலகின், முதல் தமிழனாக சாதனை படைத்திருக்கிறார், CWE-யின் நேஷனல் சாம்பியன் ஜெய் ஜாக்சன். அவரிடம் பேசினேன்.

``என் உண்மையான பெயர் ஜெயபாண்டியன். ஜெய் ஜாக்சன்றது ரிங் நேம். திண்டுக்கல் மாவாட்டம், நிலக்கோட்டை பக்கத்தில் முத்துக்காமன்பட்டி என்ற கிராமத்துல, ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பையன் நான். எனக்கு நான்கு அண்ணன்கள். அதில் எனக்கும் எனக்கு நேர் அண்ணனுக்கும் தினமும் ரெஸ்லிங் விளையாடுறதுதான் வேலை. ஹார்ட்கோர் மேட்ச் விளையாடி, டி.வியை உடைச்சு, இரண்டு பேருமே வீட்டில் வகைவகையாக அடி வாங்கியிருக்கோம். இப்படி ஆரம்பிச்ச ரெஸ்லிங் ஆர்வம்தான், இந்த இடத்துக்கு என்னை நகர்த்திக்கொண்டு வந்திருக்கு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

WWE-க்குள் நுழைவது எப்படி, அதற்கு என்ன செய்யணும்ங்கிற சிந்தனை, தினமும் மனசுக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கும். நாள்கள் தொடர்ந்து இப்படியே நகர்ந்துகிட்டு இருக்கும்போது, CWE பற்றி ஒருநாள் கேள்விப்பட்டேன். WWE-யை கலக்கின இந்தியன் சூப்பர் ஸ்டார் தி கிரேட் காளி, பஞ்சாபில் ஆரம்பிச்ச ரெஸ்லிங் நிறுவனம்தான் CWE. 2015-ல் இதைத் தொடங்கும்போது, நான் கல்லூரியில் யு.ஜி படிச்சுக்கிட்டிருந்தேன். அதனால், `படிப்பு முக்கியம். அதை முடிச்சுட்டு முதல் வேலையா பஞ்சாப்க்கு கிளம்பிடுவோம்'னு முடிவு பண்ணிட்டேன்" எனச் சொல்லும் ஜெய் ஜாக்சன், சி.ஏ படித்திருக்கிறார்.

Jey Jackson
Jey Jackson

``கோயம்புத்தூரில் படிச்சுக்கிட்டு இருந்தபோதே கிடைக்கும் நேரங்கள்ல CWE மேட்ச்கள் பார்ப்பது, டுடோரியல்கள் பார்த்து கத்துக்குறது, முக்கியமா உடம்பைத் தேத்துறதுன்னு என்னை தயார் பண்ணிக்கிட்டேன். யு.ஜி கடைசி ஆண்டில் மூணு மாசம் லீவ் கிடைச்சது. அந்த மூணு மாசமும் ஜிம்மிலேயே கிடந்து, 65 கிலோ எடை இருந்த நான் 85 கிலோவுக்கு மாறினேன். மனசுக்குள்ள இருந்த லட்சிய வெறிதான், என்னை இப்படி ஓடவெச்சது. கல்லூரி முடிஞ்சு, வீட்டுக்கு 85 கிலோ உடம்போடு போனப்ப வீட்ல மிரண்டு போயிட்டாங்க. என் அப்பாவுக்கு பெரிய அதிர்ச்சி.

என் அப்பா கிட்டே `நான் ரெஸ்லர் ஆகப்போறேன்'னு சொன்னால், `உனக்கு இருக்குற பாடிக்கு, ஒரு அடில செத்துருவே'னு நிச்சயமா கலாய்ப்பார். அதனால், அவர் மறுவார்த்தை எதுவும் பேசாம மிரண்டுபோய் நிக்கணும், என் மேல அவருக்கு நம்பிக்கை பிறக்கணும்னுதான் 20 கிலோ வெயிட் போட்டு, உடம்பை கட்டுமஸ்தா மாத்தினேன். `அப்பா நான் ரெஸ்லர் ஆகப்போறேன்'னு சொன்னப்போ, எதிர்பார்த்ததைவிட திட்டு கம்மியாதான் வந்தது. அம்மாதான் அழுதுட்டாங்க. அடிவாங்கி, ரத்தம் கொட்டுற வீடியோக்களை அவங்க பார்த்துருக்காங்க. அப்புறமா, என் கனவு, என் லட்சியம், என் ஆசை எல்லாமே ரெஸ்லர் ஆகுறதுதான்னு அவங்களுக்கு எடுத்துச் சொன்னேன். `2 வருஷம் டைம் கொடுங்க. சரிபட்டு வரலைன்னா படிச்ச வேலைக்கே போயிடுறேன்'னு சொன்னதும்தான், சரின்னு சமாதானம் ஆனாங்க" என்றவர், அவரின் கனவு, லட்சியம், ஆசைகள் பற்றிச் சொன்னார்.

Jey Jackson
Jey Jackson

``WWE ரிங்ல, மைக் பிடிச்சு தமிழ்ல பேசணும்ங்கிறது என் மிகப்பெரிய ஆசை. WWE பார்க்கும்போது மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சாலே, சேனலை மாத்தின ஆள்தான் நான். நான் மட்டுமல்ல, நம் ஊர்ல பலபேர் அப்படித்தான். ஆனால், ப்ரோ ரெஸ்லிங்ல மைக் பிடிச்சு பேசுறதும் முக்கியமான ஒண்ணு. நல்ல ரெஸ்லருக்கான அளவுகோலா அதுவும் முன்வைக்கப்படுது. நான் தமிழ்ல ப்ரோமோ கட் பண்ணணும், அதைக் கேட்டு தமிழ் ரசிகர்கள் ஆரவாரமாகணும். பிறகு, WWE-ல் ஒரு சாம்பியன்ஷிப் ஜெயிக்கணும்னு ஆசை" எனும் ஜெய் ஜாக்சன்தான், CWE-ன் இப்போதைய நேஷனல் சாம்பியன். இந்திய ப்ரோ ரெஸ்லிங் வராலாற்றிலேயே, தனது முதல் மேட்சில் சாம்பியன்ஷிப் ஜெயித்த நபரும் இவர் மட்டும்தான்.

``CWE-யில் சேர ஆசைப்படுற எல்லோருமே, நிறுவனத்துக்கு ஒருமுறை விசிட் அடிப்பாங்க. அந்த விசிட்டில் எல்லாம் சரியா அமைஞ்சதுனா, அடுத்து ஜாய்ன் பண்ணிப்பாங்க. அமையலைனா கிளம்ப வேண்டியதுதான். ஆனால், நான் விசிட்லாம் அடிக்கலை. நேரா கிளம்பிப்போயிட்டேன். என் மேலிருந்த நம்பிக்கைதான் காரணம். நான் நம்பின மாதிரியே எல்லாம் சரியா அமைஞ்சது, CWE-ல் ஜாய்ன் பண்ணிட்டேன். 60-க்கும் மேற்பட்ட மேட்ச்கள் விளையாடியிருக்கேன். வெறும் 3 மேட்ச்கள்தான் நான் இதுவரை தோற்றுப்போனது" என்றவரிடம், தி கிரேட் காளியை முதல்முறையாக சந்தித்த தருணம் பற்றிக் கேட்டோம்.

Jey Jackson
Jey Jackson

``முதல்நாள் அங்கிருந்த மற்ற ரெஸ்லர்களே என் பார்வைக்கு பல்கா தெரிய, அப்போ தி கிரேட் காளி எப்படி இருப்பார்னு பார்க்க எனக்கு ஆர்வம் அடங்கலை. மூணு நாள் கழிச்சு, அவரை முதன்முறையா பார்த்தேன். ரிங்ல உட்கார்ந்து போன் பார்த்துட்டு இருந்தார். திடீர்னு என்னைப் பார்த்தவர், கண் அடிச்சார். எனக்கு புல்லரிச்சுடுச்சு. WWE ரிங்ல அண்டர்டேக்கரையே தூக்கி வீசின மனுஷன் அவர்! அடுத்து ஜிம்ல மீட் பண்ணோம். அங்கே சின்னதா ஆரம்பிச்ச பேச்சு, செல்ஃபில முடிஞ்சு, இப்போ அவர் செல்லப்பிள்ளை ஆகிட்டேன்" எனச் சிரிக்கிறார் ஜெய்!

பேட்டியை வீடியோ வடிவில் காண :