பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ‘கோல்டன் குளோப்’ விருதுக்கு தேர்வாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து பலரும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சினிமா தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ராஜமௌலி, பாலிவுட்டின் தொடர் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், “பாலிவுட்டின் தொடர் தோல்விக்கான காரணம், கார்ப்ரேட் நிறுவனங்கள் பாலிவுட்டில் கால்பதித்து நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக சம்பளத்தை தர ஆரம்பித்து விட்டனர். இதனால் படங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மத்தியிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.
இந்த ஆண்டு பாலிவுட்டில் காஷ்மீர் ஃபைல்ஸ், கங்குபாய் கதியாவாடி, த்ரிஷ்யம் 2 போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளைக் கொடுத்தது. பிரம்மாஸ்திராவும் ஒரு பிளாக்பஸ்டர்தான் ஆனால் அதன் தயாரிப்பு செலவு பாக்ஸ் ஆபிஸ் வருவாயை விட அதிகமாக இருந்தது. ஏ-லிஸ்ட் நடிகர்கள் நடித்த பல உயர் தரப் படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தது. பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி படங்களை இயக்குவதுதான் வெற்றிக்கான ஒரே மந்திரம்.

தென்னிந்திய திரையுலகம் இந்த ஆண்டு நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஏனென்றால் இதுபோன்ற சூழல் அங்கு இல்லை. இதனால் பாலிவுட் திரையுலகினர் சற்று அதிகமாக நீந்த வேண்டும் இல்லையென்றால் மூழ்கிவிடுவீர்கள்” என்று பாலிவுட்டின் தொடர் தோல்வி குறித்து ராஜமௌலி பேசியிருக்கிறார்.