என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

‘ங்க’ போட்டு பேசினேன்... செலக்ட் ஆயிட்டேன்! - சிநேகாஸ்ரீ

சிநேகாஸ்ரீ
பிரீமியம் ஸ்டோரி
News
சிநேகாஸ்ரீ

#Entertainment

‘விளையும் பயிர் முளையில் தெரியும்’ என்பதைப் போல் ஆறு வயதிலேயே மைக் பிடித்து பேசத் தொடங்கியவர் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தைச் சேர்ந்த சிநேகாஸ்ரீ. ப்ளஸ் டூ படித்து வரும் அவர், இந்த இளம் வயதிலேயே 7,000 மேடைகளைக் கண்டிருக்கிறார்.

“என் தமிழாசிரியர் நாகராஜ் ஐயாதான் எனக்குள்ள இருந்த பேச்சுத்திறனை அடையாளம் கண்டுபிடிச்சு மேடையேத்தினாரு. ‘பெரியாரால் வாழ்கிறோம்’ன்றது தலைப்பு. நான் பேசப் போனப்போ ‘மைக் ஸ்டாண்டு உயரம்கூட இல்ல. நீ என்னம்மா பேசப் போற’ன்னு கலாய்ச்சாங்க. ‘நான் சொல்லிக்கொடுத்ததைப் பேசு. உன்னைச் சுத்தி இருக்கிறதெல்லாம் நாங்கதான்’னு தைரியம் கொடுத்தாரு தமிழய்யா. நிஜமாவே மைக் எட்டல. அதே ஆசிரியர்தான் ஒரு நாற்காலிய எடுத்துப் போட்டு அதுல ஏறி நிக்க வெச்சுப் பேச வெச்சாரு. அன்னிக்கு அவரு கொடுத்த தைரியம்தான் இப்போ வரைக்கும் எனக்குத் துணையா இருக்குது” என்பவர் 3-ம் வகுப்பிலிருந்தே பரதம் கற்றுக்கொண்டு அரங்கேற்றமும் செய்திருக்கிறார். தொலைக்காட்சிகளில் மேடைப் பேச்சு, ஸ்டாண்டு அப் காமெடி, நடனப் போட்டி என அனைத்திலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.

“கலக்கப்போவது யாரு சீஸன் 6-க்கு செலக்‌ஷனுக் காகப் போனப்போ கோயம்புத்தூர் பாஷைல பேசச் சொன்னாங்க. பேச்சுப் போட்டி, மேடை நிகழ்ச்சி களுக்குத் தயாராகும்போதெல்லாம் தூய தமிழ்லதான் பேசிப் பழகியிருந்தேன்.

‘ங்க’ போட்டு பேசினேன்...
செலக்ட் ஆயிட்டேன்! - சிநேகாஸ்ரீ

அம்மாதான், ‘நீ பேசும்போது என்னங்க, ஏனுங்கன்னு ‘ங்க’ சேத்துப் பேசு. அதுதான் கோயம்புத்தூர் பாஷை’ன்னு சொல்லிக்கொடுத்தாங்க. 10 நிமிஷம் பிராக்டிஸ் பண்ணிட்டு போய், ‘எல்லாருக்கும் வணக்கங்க’ன்னு தொடங்குனேன் பாருங்க. அப்பவே செலக்ட் ஆயிட்டேன்” நாஸ்டாலஜியா பகிர்ந்தவர் படிப்பிலும் ஸ்டூடன்ட் நம்பர் ஒன். இரவு நிகழ்ச்சிகளுக்குப் போய்விட்டு வந்தாலும் மறுநாள் பள்ளிக்குப் போகாமல் இருக்க மாட்டாராம்.

``சேலம் பக்கத்துல ஒரு நிகழ்ச்சியில பேசிட்டு இருந்தேன். பெர்ஃபாமன்ஸுக்கு ஆடியன்ஸ்கிட்ட பெரிய ரெஸ்பான்ஸ் இல்ல. மைக் செட் போடுற அண்ணா மட்டும் நான் சொல்ற ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தாங்க. அவரு ஒருத்தராவது சிரிக்கிறாரேன்னு நானும் கைய வீசி வீசி உற்சாகமா ஜோக் சொல்லிட்டு இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு, அந்த அண்ணாவைத் தேடிப் போய், ‘யாருமே சிரிக்கல நீங்க மட்டும் விழுந்து விழுந்து சிரிச்சீங்க. அவ்ளோ நல்லா இருந்துச்சா’ன்னு கேட்டேன்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் சிரிச்சதாலதான் நீ கைய வீசி வீசிப் பேசுன. நானும் கம்முன்னு இருந்திருந்தா பதற்றத்துல உன் கை நேரா மைக்கைப் பிடிச்சிருக்கும். அதுல ஏற்கெனவே எர்த் ஆகிட்டு இருந்துச்சு. கையை வெச்சதும் தூக்கிப் போட்டிருக்கும். நான் சிரிச்சதால நீ தப்பிச்ச மவளே!’ன்னாரு பாருங்க, மிரண்டுட்டேன்” - ஷாக்கிங் ஃபிளாஷ்பேக் பகிர்ந்தவர் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்தார்.

“பல பேர் சப்போர்ட் பண்ணினாலும் சிலர் மனசு புண்படும்படி பேசவும் செய்வாங்க. சின்ன பொண்ண சம்பாதிக்க வைக்கிறாங்கன்னு சொல்வாங்க. இதை என் அப்பாகிட்ட சொன்னப்போ, ‘உன்னோட திறமைகளை வளர்க்கிறதுக் காகத்தான் நிகழ்ச்சிகள்ல பங்கேற்க வைக்கிறோம். பணத்துக்கு ஆசைப்பட்டு இல்ல. ஒருவேளை பணத்துக்காகத்தான் நிகழ்ச்சிகள் பண்றோம்னு உனக்குத் தோணிடுச்சுன்னா இன்னிக்கே அதை நிறுத்திடும்மா'ன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் யாரு என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்கிறதே இல்ல” தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.

``இதுவரைக்கும் 1,500-க்கும் அதிகமா விருதுகள், கேடயம்னு வாங்கியிருக்கேன். 250 ஷீல்டை மட்டும்தான் வீட்டுல வைக்க முடியுது. மீதிய தண்ணி பிடிக்கிற இரண்டு டிரம்முக்குள்ள போட்டு வெச்சிருக்கேன். நான் வாங்குன ஷீல்டையெல்லாம் அடுக்கிவைக்கிற மாதிரி ஒரு வீடு கட்டணும் அதுதான் என் ஆசை” - கண்கள் விரியப் பேசி விடைகொடுத்தார் சிநேகாஸ்ரீ.

“சினிமாவுக்கும் சீரியலுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு!”

“என்ன வித்தியாசம்?”

“சீரியல் பாக்குறவங்க அழுவாங்க... சினிமாவ எடுத்தவங்க அழுவாங்க.அவ்ளோதோன்!”

“இளைஞர்களோட ஸ்ட்ரெஸ்ஸுக்கு காரணம் ரெண்டே விஷயம்தான்”

“என்ன அது?”

“மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்தான்!”

“கடவுள்கிட்டயும் டாக்டர்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது”

“ஏன்?”

“கடவுள்கிட்ட பொய் சொன்னா... டாக்டர்கிட்ட போக வேண்டியிருக்கும். டாக்டர்கிட்ட பொய் சொன்னா... கடவுள்கிட்டயே போக வேண்டியிருக்கும்!”