`உண்மை நடக்கும்... பொய் பறக்கும்!' - இதுதான் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகியிருக்கும் 8 எபிசோடுகளைக் கொண்ட `வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப்சீரிஸின் ஒன்லைன். `லீலை', `கொலைகாரன்' படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ்தான் இத்தொடரின் இயக்குநர். சினிமாவின் தரத்தோடு தயாரித்திருக்கிறார்கள் புஷ்கர் - காயத்ரி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். அவர் ஒரு ஹீரோயின் என மீடியாக்களில் செய்திகள் வருகின்றன. ஆனால், இறந்தவராகச் சொல்லப்பட்ட அந்தப் பெண் இறக்கவில்லை என பின் தெரிய வருகிறது. அப்படியென்றால் இறந்தது யார்? இறந்ததாக வதந்தி கிளப்பப்பட்ட இந்தப் பெண் யார்..? கொலையின் மர்மத்தை விசாரிக்கப் புறப்படும் காவல்துறைக்குக் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக அடுக்கடுக்காய் மர்ம முடிச்சுகள் விழுவதும் மெல்ல அது அவிழ்வதுமாய் விசாரணை நீ...ள்...கி..ற..து! இன்னொருபுறம் றெக்கைக் கட்டிப் பறக்கும் வதந்திகளும் கிளைக்கதைகளாக விரிய, இறுதியில் வெலோனி என்ற அந்தப் பெண்ணைக் கொன்றது யார், ஏன் அவர் கொல்லப்பட்டார் போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் 'வதந்தி' க்ளைமாக்ஸ்!
முதன்முறையாக வெப்சீரீஸ் பக்கம் வந்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்குச் சவாலான கொலையைத் துப்பறியும் போலீஸ் ரோல். காக்கிக்குள் ஈரம் கொண்ட மனிதராய் விசாரணையில் சமரசமில்லாமல் நடந்து கொள்ளும் போலீஸாய் மிளிர்கிறார். பரபரக்கும் ஆர்வத்தோடு விசாரித்து, குழம்பித் தவிக்கும் காட்சிகளிலும், ஒவ்வொரு க்ளூவாய் அவர் கண்டுபிடிக்கும் காட்சிகளிலும் நம்மையும் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார். கன்னியாகுமரி வட்டார வழக்குக்காக அவர் மெனக்கெட்டிருப்பதும், இதற்கு முன்பு நடித்த பாத்திரங்களின் சாயல் விழாமல் அவர் நடித்திருப்பதிலும் கடும் உழைப்பு தெரிகிறது.

வெலோனியாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்திக்கு அருமையான விசிட்டிங் கார்டு இந்த வெப்சீரீஸ். எஸ்.ஜே.சூர்யாவுக்கு அடுத்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். க்ளோஸ்-அப் காட்சிகளில் உணர்ச்சிகளைக் காட்டும்விதம் அபாரம். தமிழ் சினிமாவில் தடம் பதிக்க வாழ்த்துகள். லைலாவின் பாத்திரமும் அவரது நடிப்பும் அருமை. சீனியரான நாசர் பத்திரிகையாளர் பாத்திரத்தில் பளிச்சென மிளிர்கிறார். எஸ்.ஜே.சூர்யாவோடு வரும் விவேக் பிரசன்னாவும் வட்டார மொழி பேசி கவனம் ஈர்க்கிறார். ஹரீஷ் பேரடி, ஸ்மிருதி வெங்கட், அஸ்வின் குமார் எனப் பலரும் அவரவர் பாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
முதல் இரண்டு எபிசோடுகளுக்குப் பிறகு சிறு தொய்வு ஏற்பட்டாலும் ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து அடுத்த எபிசோடுக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது திரைக்கதை. கொலையாளி யார் என ஒவ்வொரு லூப்-ஹோலாக எஸ்.ஜே சூர்யா விசாரணையைத் தொடங்குமிடம் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. கன்னியாகுமரி நாஞ்சில் வட்டார மொழியை இத்தனை நெருக்கமாக இதற்கு முன்பு நாம் சினிமாவில் பார்த்ததில்லை என்பதால் அந்த முயற்சிக்குப் பாராட்டுகள். கதை நடக்கும் இடம் எங்கும் அமானுஷ்யத்தைப் படரவிடும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு இந்தத் தொடரின் பெரும்பலம்.

வெறும் த்ரில்லராக மட்டுமில்லாமல் ஒரு பெண்ணைச் சுற்றிப் பரப்பப்படும் வதந்திகள் எப்படியெல்லாம் அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்ற கருத்தையும் முன்வைக்கிறது இந்த 'வதந்தி'. ஆனால், சில இடங்களில் லாஜிக் மீறல்கள், தேவையற்ற நீளம் என 5 எபிசோடுகளில் முடித்திருக்க வேண்டிய கதை இது! குறிப்பாக, முதல் எபிசோடும் கடைசி எபிசோடும் பார்த்தாலே ஒரு கதையாகப் புரியும் அளவுக்குப் பலவீனமான திரைக்கதை அமைப்பு. ஆனால், அதுதான் இந்தக் கதையின் ஃபார்மேட்டும் என்பதால் அது குறையாக உறுத்தவில்லை.
கொஞ்சம் பொறுமையைச் சோதித்தாலும் வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்துக்காக இந்த வதந்தியைப் பரப்பலாம்... பார்க்கலாம்!