கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ரோ... ரோ... ரோபோடா!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

WEB SERIES

ருடம் 2058. வசதிபடைத்தவர்களின் பொழுதுபோக்குக்காக ஒரு தீம் பார்க். அங்கே செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோக்கள் (ஹோஸ்ட்ஸ்) தங்களின் விருந்தினர்களான (கெஸ்ட்ஸ்) மனிதர்களை வரவேற்கின்றன. தங்களுக்கு நிறுவப்பட்ட கோட்பாட்டின்படி, வரும் விருந்தினர்களைத் திருப்திப்படுத்த (எல்லா வகையிலும்தான்) மட்டுமே அவை இயங்குகின்றன. செய்ததையே ஒவ்வொரு நாளும் திரும்பச் செய்யும் புரொக்ராம்களுக்கும் கட்டமைப்புகளுக்கும் இடையில் சிக்கிக்கிடக்கும் ஒரு சில ரோபோக்கள் ஒரு புதிய அப்டேட்டினால் சுய சிந்தனைகளை வளர்த்துக்கொள்கின்றன. ஆறறிவு பெற்றுவிட்ட இவை தங்கள் உலகமான தீம் பார்க்கை விட்டுவிட்டு நம் நிஜ உலகுக்குள் பிரவேசித்தால்? இதுதான் HBO-வில் (இங்கே ஹாட்ஸ்டார்) ஒளிபரப்பாகும் ‘வெஸ்ட்வேர்ல்டு’ தொடரின் சாராம்சம்.

ரோபோக்கள்
ரோபோக்கள்

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் சகோதரர் ஜோனதன் நோலன் மற்றும் அவரின் மனைவி லிஸா ஜாயால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரின் மூலக்கதை ‘ஜூராசிக் பார்க்’ நாவலை எழுதிய மைக்கேல் கிறிக்டனின் ‘வெஸ்ட்வேர்ல்டு’ மற்றும் ‘ஃப்யூச்சர்வேர்ல்டு’ ஆகிய படங்கள்தாம். மூன்று சீசன் முடிந்த நிலையில் நான்காவது சீசனுக்கும் கிரீன் லைட் அடித்துவிட்டது HBO.

பல்வேறு கலாசாரங்கள் கொண்ட தீம் பார்க்குக்குள் மேற்கத்திய கௌபாய் நாகரிகத்தைப் பேசும் ‘வெஸ்ட்வேர்ல்டு’ எனும் இடத்தில் தொடங்குகிறது கதை. உண்மையான எஜமான்கள் மனிதர்கள்தாம் என்று உணரும் பெண் ரோபோக்களான டொலோரஸ் மற்றும் மீவ், தீம் பார்க்குக்குள் கலகத்தை உருவாக்குகிறார்கள். டொலோரஸ் தன்னை உருவாக்கிய சயின்டிஸ்ட் ராபர்ட் ஃபோர்டைக் கொல்வதோடு முடிகிறது முதல் சீசன்.

ரோபோக்கள்
ரோபோக்கள்

இரண்டாவது சீசனில் டொலோரஸ், பெர்னார்ட் எனும் சயின்டிஸ்ட் ரோபோவின் உதவியுடன், இந்த பார்க் எதற்காகக் கட்டப்பட்டது, இதை உருவாக்கியவர்களின் நிஜ உலகம் எப்படி இருக்கிறது போன்ற பல கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறிகிறாள்.

ரோ... ரோ... ரோபோடா!

பரிணாம வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு விட்ட டொலோரஸ் காணும் மனிதர்களின் உலகம், செராக் என்பவனால் கடவுளாகக் கட்டமைக்கப்பட்ட ரொஹோபம் எனும் மற்றொரு AI மெஷின் ஒன்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. ஒருவனின் எதிர்காலத்தைக் கணித்து அதற்கேற்ற முடிவெடுத்து அதைச் செயல்படுத்தவும் செய்கிறது ரெஹோபம். சுதந்திரமற்ற இந்த உலகமும் தன் தீம் பார்க் உலகைப் போன்ற ஒன்றுதான் எனப் புரிந்துகொள்ளும் டொலோரஸ், கேலப் என்ற மனிதனின் உதவியுடன் இதைச் சரிசெய்ய முயல்கிறாள். டொலோரஸ் புரட்சியைக் கண்டறியும் செராக், மீவ்வைத் தன் அணியில் சேர்த்துக்கொள்கிறான். ரெஹோபமுக்கு எதிராக, முதலாளி வர்க்கத்து அரசியலுக்கு எதிராக மக்களைக் கலகம் பண்ண வைக்கும் டொலோரஸ், நம் உலகை மீட்டாளா என்பதுதான் மூன்றாம் சீசன்.

WEB SERIES
WEB SERIES

நோலன் சகோதரர்களின் படங் களில் ஒரு மாய உலகம், அதற்கெனத் தனி விதிகள், சுவாரஸ்யமான திரைக்கதை, அதிரடி ட்விஸ்ட்கள் என்றே இருக்கும். `வெஸ்ட்வேர்ல்டு’ம் இதற்கு விதிவிலக்கல்ல. தன் முந்தைய சீரிஸான ‘பர்சன் ஆஃப் இன்டரஸ்ட்’டிலிருந்த AI கான்செப்டை இதில் மெருகேற்றி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் ஜோனதன். வெஸ்ட்வேர்ல்டின் சிறப்பே அசரடிக்கும் ட்விஸ்ட்களும், ‘வாவ்’ டெக்னாலஜிகளும்தான்.

டைம்லைன் விளையாட்டுகள் பெரிதாக இல்லையென்றாலும், ஆங்காங்கே வரும் டெக்னாலஜி விஷயங்களான வில்லியமுக்குக் கொடுக்கப்படும் AR தெரபி, ரெஹோபம் - சாலமன் AI-களின் கதைகள், 21-ம் நூற்றாண்டின் பாதியில் உலகம் எப்படியிருக்கும் என்ற கற்பனை ஆகியவை ஆச்சர்யம்.

WEB SERIES
WEB SERIES

சிந்திக்கத் தெரிந்த ஓர் உயிருக்கு நினைத்ததைச் செய்யும் சுதந்திரம்கூட இல்லாமல் எப்படி என்ற கேள்வியை அழுத்தமாகக் கேட்கிறது இந்த சீசன்.