
Web series
என்ன சொல்றாங்கன்னா
தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் சிஐஏ அதிகாரிகள்; அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்; இரு பக்கக் கறுப்பு ஆடுகள் எனப் பக்கா ஆக்ஷன் த்ரில்லர் பேக்கேஜ் இந்த ‘ஹோம்லேண்டு.’

தீவிரவாதி அபு நஸீரின் பிடியிலிருந்து அமெரிக்க வீரர் ப்ரோடி தப்பிக்கிறார். அமெரிக்கா சிவப்புக் கம்பளம் விரித்து ப்ரோடியை வரவேற்க, சிஐஏ அதிகாரியான கேரி மட்டும் `ஏதோ தப்பு நடக்குது’ என யூகிக்கிறார். ப்ரோடியா இந்த லேடியா என ஆரம்பிக்கும் முதல் சீசனில், ப்ரோடிக்குத் துணை அதிபர் பதவி வரை தேடி ஓடி வர, மோப்பம் பிடித்துத் துப்புத்துலக்கி, வழக்கம் போல ப்ரோடியின் காதலியாகிறார் கேரி. ஆனால், இவையெல்லாம் இரண்டு சீசன்கள்தான். அதன்பின், ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, ஜெர்மனி எனக் கண்டம் விட்டுக் கண்டம் தாவும் கதையில் ஆக்ஷனுக்குக் குறையொன்றுமில்லை.
ஸ்டார்ஸ்

மேடை நாடகம், சினிமா நடிகை எனத் தெரிந்த முகமான க்ளேரி டேன்ஸ்தான் ஹோம்லேண்டின் நாயகி கேரி மேத்திசன். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த நடிகைக்கான, கோல்டன் குளோப், எம்மி விருதுகளை இத்தொடருக்காக வென்று அசத்தியிருக்கிறார். பைபோலார் டிஸார்டரால் பாதிக்கப்பட்டவராக அவர் நடித்த ஒவ்வொரு எபிசோடும் அப்ளாஸ் ரகம். ஸ்னைப்பர் கில்லர் டு துணை அதிபர், அதற்குள் ஒரு தீவிரவாதக் கறுப்பு ஆடு என ப்ரோடியாக பன்முகம் காட்டியவர் டாமியன் லெவிஸ். இவரும் இத்தொடருக்காக எம்மி, கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கிறார்.
சேம்பிஞ்ச்
24 ( தொடர்) Designated Survivor (தொடர்)
திரைக்குப்பின்னால்

இஸ்ரேலியத் தொடரான ப்ரிசனர்ஸ் ஆஃப் வார்-ஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் கடைசி அத்தியாயத்திற்கு அதே பெயரை வைத்து முடித்தது சிறப்பு. டைட்டில் கார்டில் வரும் ஒபாமாவின் வீடியோதொடங்கி தொடரும் நிறைய நிஜ சம்பவங்களால் கூகுள் பக்கம் அவ்வபோது நாம் செல்லும் வாய்ப்பு அதிகம். ஐந்தாவது சீசன் முழுக்க முழுக்க ஜெர்மனியில் படமாக்கப்பட்டது. அமெரிக்கத் தொடர் ஜெர்மனியில் முழுவதுமாகப் படமாக்கப்பட்டது இதுவே முதல்முறை. எப்படியும் டொனால்டு ட்ரம்ப் வெர்சஸ் ஹிலாரி கிளிண்டனில், ஹிலாரிதான் வெல்வார் என நினைத்த படக்குழு பெண் அதிபர் கதாபாத்திரத்தை உருவாக்க, ட்ரம்ப் வென்று ட்விஸ்ட் அடித்துவிட்டார். ஆனாலும் தொடரில் பெண் ஜனாதிபதிதான்.
ப்ளஸ்

அமெரிக்காவின் புகழ் மட்டும் பாடாமல், அமெரிக்காவின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களை முன் வைக்கிறது. நடப்பு அரசியல், பொய்ச் செய்திகள், டிரோல்கள், தீவிரவாத ஊடுருவல்கள், ரஷ்யாவின் செல்லச் சீண்டல்கள் என சுவாரஸ்ய பேக்கேஜ் நேர்த்தியாய் வந்திருக்கிறது. அரசு துஷ்பிரயோகத்தில் மாட்டிக்கொள்ளும் அதிகாரிகள், காவு கொடுக்கப்படும் பலி ஆடுகள் எனக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், பெரியவர்கள் விளையாடும் போரின் கைதிகள்தான் என்பதை அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறது.
மைனஸ்

அதிரடியாய்ச் சென்றுகொண்டிருந்த தொடர், ப்ரோடி கதாபாத்திர முடிவுக்குப் பின்னர் சற்று வேகம் குறைகிறது. ஷேர் ஆட்டோ என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்பதுபோல், எட்டு சீசன்கள் 96 எபிசோடுகள் நீளம். சில காட்சிகளை அப்படியே ஓட்டிவிடலாம்.
இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்த இந்த சீரிஸை, வீக் எண்டுகளில் அல்லது அதிரடி வியாழன்களில் தாராளமாய் விடிய விடியப் பார்க்கலாம்.
யார் பார்க்கலாம்: எங்கு பார்க்கலாம்: டிஸ்னி ஹாட்ஸ்டார் - ஆங்கிலம்.