சினிமா
Published:Updated:

வெறும் விளையாட்டு அல்ல!

டி20
பிரீமியம் ஸ்டோரி
News
டி20

WEB SERIES

ற்போது கிரிக்கெட் எவ்வளவோ மாறிவிட்டது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியையெல்லாம் எத்தனை பேர் முழுவதுமாகப் பார்த்திருப்பார்கள் என்பதே கேள்விக்குறி. ஒருநாள் தொடர்களே சமயங்களில் போர் அடிக்கின்றன. இது டி20-களின் காலம். அதுவும் மாநிலம் மாநிலமாக சண்டையிட்டுக்கொள்ளும் ஐபிஎல் என்றால் இன்னும் ஏக குஷி நம் ரசிகர்களுக்கு. டி20 தொடர்களை மையப்படுத்தி அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் தொடர்தான் ‘இன்சைடு எட்ஜ்.’

WEB SERIES
WEB SERIES

‘ஆட்டுமந்தைகள் மைதானத்தில் நடக்கும் விளையாட்டை விளையாடட்டும், நாம் கோடிகளில் விளையாடுவோம்’ என்பார் ஒரு புக்கி. கிட்டத்தட்ட ‘இன்சைடு எட்ஜ்’ வெப் சீரிஸின் ஒன்லைன் இதுதான். மும்பை மேவ்ரிக்ஸ் அணியின் உரிமையாளர், முன்னாள் நடிகையான ஜரினா மாலிக். விளையாட்டுப் பொருள்கள் விற்கும் நிறுவனத்தின் உரிமையாளர் விக்ராந்த் தவான் (விவேக் ஓபராய்). மேலிடத்து ஆலோசனைக்கேற்ப, மும்பை மேவ்ரிக்ஸ் அணியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார் விக்ராந்த். வீரர்களை பெட்டிங்கில் ஈடுபடுத்துவது. வீரர்களுக்குள் இருக்கும் வர்க்க பேதங்கள், கிரிக்கெட் எப்படி ஒரு சமூகத்தின் பிரியத்துக்குரிய விளையாட்டாகவும் அதேநேரம் வணிகமாகவும் இருக்கிறது போன்றவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்த சீரிஸ். விளையாட்டு வீரர்கள் இதற்கு எப்படி பலிகடா ஆக்கப்படுகிறார்கள்; கிரிக்கெட்டில் நடக்கும் அதிகார அத்துமீறல்கள்; கிரிக்கெட் வீரர்களின் ஏலம்; பண போதை; லேட் நைட் பார்ட்டிகள்; ஊக்க மருந்து சர்ச்சைகள் என அனைத்தையும் தோலுரிக்கிறது இந்தத் தொடர்.

விக்ராந்த் தவானின் வீழ்ச்சியுடன் முதல் சீசன் முடிகிறது. பிபிஎல் தொடர்கள், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவரான யஷ்வர்தன் படேலின் தகிடுதத்தங்களுடன் தொடங்குகிறது இரண்டாம் சீசன். தன் விரல் அசைவில் ஊக்க மருந்து சோதனைக்குழுவின் சர்வதேசத் தலைவர் முதல் தேசிய தொலைக்காட்சியின் ப்ரைம்டைம் நிர்வாக ஆசிரியர் வரை அனைவரின் நாற்காலிகளையும் காலி செய்யும் சர்வ வல்லமை படைத்தவர் யஷ்வர்தன். இந்திய கிரிக்கெட் போர்டின் தலைவர் பதவிக்கான தேர்தல் நெருங்க நெருங்க, யஷ்வர்தனின் நிலையோ சற்று ஆட்டம் காணத் தொடங்குகிறது. அடுத்துவரும் தேர்தலில் வெல்ல, கோடிகளில் பணம் தேவைப்படுகிறது. ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் பெட்டிங்கில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பணம் புழங்கிய விக்ராந்த் தவானின் கைகள் தற்போது வெறுமையில் தவிக்கின்றன. யஷ்வர்தன் காய்களை நகர்த்த, விக்ராந்த் கட்டங்களை நகர்த்துகிறார். இந்த சீசனில் கோப்பை வெல்பவர் யார், ஜாம்பவான் யார் போன்றவற்றைச் சொல்லி, அடுத்த சீசனுக்கான ஆர்வத்தைத் தூண்டி முடிந்திருக்கிறது இரண்டாம் சீசன்.

கதையின் முதன்மைப் பாத்திரங்களுக்கு அப்பால் நடக்கும் சில காட்சிகள்தான் இன்சைடு எட்ஜின் சிக்ஸர் மொமன்ட்டுகள். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் கனௌஜியா, ரசிகர்களின் ஃபேவரைட். அவருக்கும் தேவேந்திர மிஸ்ராவுக்கும் நடக்கும் சண்டையுடன் முடியும் முதல் சீசன், இரண்டாம் சீசனில் பிரசாந்தின் குற்றவுணர்ச்சியுடன் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் முன், இருவருமே சமமாக இகழப்படுவதும், தேவேந்திர மிஸ்ரா கண்ணீர் சிந்துவதும், இது, தான் விரும்பாமலே தன் மேல் திணிக்கப்பட்ட ஒன்று என தேவேந்திர மிஸ்ரா புலம்புவதும் ஓர் அழகிய சிறுகதை.

வெறும் விளையாட்டு அல்ல!
வெறும் விளையாட்டு அல்ல!

‘ஆமா, இந்த லேடி, அவங்க இல்ல’, ‘ இந்த கிராமத்து லுக்ல வேகமா பந்து வீசற பையன் இவன்ல’, ‘ ஆமா, இந்த ஓனர் பொண்ணுதான போன சீசன்ல...’ என நமக்குத் தொடர் பார்க்கும்பொழுது ஆயிரம் கேள்விகள் எழலாம். தொடர் முழுக்க இப்படியான நிஜ கதாபாத்திரங்களின் நிழல்களை உலவவிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட நடுவர் தீர்ப்புகள் கேள்விக்குள்ளாகின. அதையும் ஸ்கிரிப்ட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார், இந்தத் தொடரை உருவாக்கிய கரண் அன்ஷுமான். சென்னை சூப்பர் கிங்ஸுக்கான இரண்டாண்டுத் தடை, தேர்தலைக் காரணம்காட்டி தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு சீசன், இவற்றுக்குப் பின் நடந்த அரசியல் யாருக்கும் இதுவரையில் தெரியாது. ஆனால், இவற்றுக்கான முடிச்சுகளைப் புனைவுடன் அவிழ்க்கிறது இந்தத் தொடர்.

வெப் சீரிஸில் சென்சார் இல்லை என்பதால் சிற்சில அடல்ட் காட்சிகளும், பற்பல கெட்ட வசவுகளும் கொட்டிக்கொண்டே இருப்பது சற்று உறுத்தல். அதேபோல், கிரிக்கெட்டில் தற்செயலாக நடக்கும் விஷயங்கள் என நாம் நம்பும் பலவற்றுக்கு இப்படி பெட்டிங், டோப்பிங் சாயங்கள் பூசுவது அந்த விளையாட்டுமீதான குறைந்தபட்ச நம்பிக்கையையும் கெடுத்துவிடும் என்பது இதன் மைனஸ்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஜாலியாக, அதே சமயம் அதன் அதிகார அரசியலையும் சுவாரஸ்யத்துடன் புரிந்துகொள்ள ‘இன்சைடு எட்ஜ்’ ஓர் அட்டகாசத் தொடர்.