சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

18 - ம் நூற்றாண்டின் புதிய கள்!

Emily Dickinson
பிரீமியம் ஸ்டோரி
News
Emily Dickinson

WEB SERIES

தீப்பற்றுவதையும் உணரமுடியாத அளவு ஒரு புத்தகம் என்னைச் சில்லிட வைக்க வேண்டும்.

என் தலை என்னிலிருந்து விடுபடும் உணர்வை ஒரு கவிதை எனக்குத் தர வேண்டும்.

புத்தகத்தையும், கவிதையையும் நான் வேறு எப்படி உணர்வது?

- எமிலி டிக்கின்சன்

நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் ஆகியவற்றைத் தொடர்ந்து, ‘நாங்களும் கோதாவில் இறங்குகிறோம்’ என ஆப்பிள் நிறுவனமும் வெப் சீரீஸ் தயாரிப்பில் குதித்திருக்கிறது. ஆப்பிள் டிவி + என்னும் பெயரில் ஆப்பிள் லேப்டாப், ஐபேட், ஐபோன், ஆண்டிராய்டு டிவி என அனைத்துத் தளங்களிலும் இது வேலை செய்யும்.

பெண் கவிஞர் எமிலி டிக்கின்சனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் புனைந்து ‘டிக்கின்சன்’ என்ற வெப்சீரிஸைத் தொடங்கியிருக்கிறது ஆப்பிள் டிவி +.

எமிலி டிக்கின்சனுக்கு கவிதை எழுதுவது என்றால் உயிர். ஆனால், அவர் பிறந்த பணக்காரக் குடும்பத்தில் பெண்கள் என்பவர்கள் வீட்டு வேலையைச் செய்ய சபிக்கப்பட்டவர்கள். தன் குடும்பத்தில் ஒரு பெண் சம்பாதிப்பது, அதுவும் எழுதிச் சம்பாதிப்பது என்பதை அவப்பேறாக எண்ணுகிறார் எமிலியின் தந்தை எட்வார்டு டிக்கின்சன். எமிலியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் ஜியார்ஜ் என்பவரைத் தவிர எமிலியின் எழுத்துக்கு யாதொரு ஆதரவும் இல்லை. ஆனாலும் எழுதுகிறார் எமிலி.

18 - ம் நூற்றாண்டின் புதிய கள்!

தன் அண்ணன் பெயரில், பத்திரிகையில் வெளியான எமிலியின் கவிதையும் வரவேற்பு பெறுகிறது. தந்தையின் கண்டிப்பு மேலும் அதிகமாகிறது. எமிலியின் அம்மாவுக்கோ சமையலறைதான் எல்லாம்.. எமிலியின் வாழ்க்கையில் நிகழும் இந்த விஷயங்களைக் கற்பனை கலந்து சொல்கிறது ‘டிக்கின்சன்’.

காமெடி என்றாலும் அமெரிக்க தத்துவவியலாளர் ஹென்றி டேவிட் தொரியை (Henry David Thoreau) இப்படி ஏளனம் செய்திருப்பது ரசிக்கும்படி இல்லை.

18-ம் நூற்றாண்டின் உடைகளை அப்படியே பயன்படுத்திவிட்டு, வசனங்கள், கலர் டோன் போன்றவற்றில் தற்கால லெவலுக்கு இறங்கி அடித்திருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் இது ஒரு பீரியட் வெப் சீரிஸ் என்பதை மறக்கவைக்கின்றன.

எமிலி டிக்கின்சனின் வாழ்க்கை இதற்கு முன்பு திரைப்படங்களாக வந்திருந்தாலும், இந்த வெப் சீரிஸ் பார்ப்பதற்கு செம ஜாலியாக இருப்பதற்குக் காரணம், டிக்கின்சனாக நடித்திருக்கும் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்டு.

சட்டென மாறும் உறவுநிலைகள், தன் பாட்டனின் மரத்தைக் காப்பாற்றப் போராடுவது, வீட்டை மீறித் திமிறிக்கொண்டு எழுவது என அனைத்து விஷயங்களிலும் ஒரு பதின்ம வயதுப் பெண்ணைக் கண்முன் நிறுத்துகிறார் 22 வயதான ஹெய்லி. “நான் சொல்லல, அக்கா சாகவெல்லாம் மாட்டாள்’’ என வெப் சீரிஸ் முழுக்க காமெடி லைனர்களாய் சிரிக்க வைக்கும் தங்கை லவினியாவாக வரும் அன்னா பேரிஸ்னிக்கோவும் சிறப்பு. எமிலியின் காதலியாக, பின் எமிலியின் சகோதரன் ஆஸ்டின் மணந்துகொள்ளும் பெண் ஸ்யூவாக எல்லா ஹன்ட். இந்த முக்கோணக் காதல் வரும் பகுதிகள் கச்சிதம். இலக்கியத்தின் மீதான எமிலியின் காதல், வெப் சீரிஸ் முழுக்கவே விரவிக்கிடக்கின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் சீரிஸ் என்பதைக் கடந்து ஆப்பிளில் இருந்து இந்த நவம்பரில் வெளியான படைப்புகளில் ஹிட்லிஸ்ட்டைத் தொட்டிருப்பது டிக்கின்சன் மட்டும்தான். வெப்சீரிஸ் பிரியர்களுக்கு புதிய களம் கிடைத்திருப்பதால் செம வேட்டைதான்!

மெரிக்காவில் பிறந்த எமிலி டிக்கின்சன் (1830-1886) தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கிறார். எல்லாம் அவரின் அறையிலிருக்கும் மேஜையிலேயே உறங்கிக்கொண்டு இருந்தது. வீட்டுக்கு வரும் யாரையும் எமிலி வரவேற்றதுமில்லை, திருமணமும் செய்துகொள்ளவில்லை. தன் படுக்கை அறையிலேயே தன் வாழ்நாளைக் கழித்தார்.

Emily Dickinson
Emily Dickinson

எமிலியின் மறைவுக்குப் பிறகு தங்கை லவினியாவின் முயற்சியில் 1890-ம் ஆண்டு எமிலியின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. யாருக்கும் தெரியாமல் எழுதிய கவிதைகள் என்பதால் தலைப்புகளோ, நிறுத்தல் குறியீடுகளோ எதுவுமற்று இருந்தன அவரது கவிதைகள். எமிலி தன் காதலி ஸ்யூ (Sue) பற்றி எழுதிய கவிதைகள் பெயர் மாற்றப்பட்டு வெளியாகின. எமிலியின் கவிதைகள் பெரும்பாலும் தனிமையையும் மரணத்தையும் பேசுபவை.