Published:Updated:

Ayali Review: தமிழ் வெப்சீரிஸ்களில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும் `அயலி'; ஏன் தெரியுமா?

Ayali Review

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் பிரச்னையைச் சுற்றி கதையைக் கட்டமைத்த இயக்குநர் முத்து குமாருக்குப் பாராட்டுகள்.

Published:Updated:

Ayali Review: தமிழ் வெப்சீரிஸ்களில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கும் `அயலி'; ஏன் தெரியுமா?

தமிழ்நாட்டின் பல கிராமங்களில் வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் பிரச்னையைச் சுற்றி கதையைக் கட்டமைத்த இயக்குநர் முத்து குமாருக்குப் பாராட்டுகள்.

Ayali Review
தமிழிலும் ஓ.டி.டி-க்கான பிரத்யேக படைப்புகள் அடுத்தடுத்து ரிலிஸாகும் காலத்துக்கு வந்துவிட்டோம். குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் தமிழ் வெப்சிரீஸ்கள், ஆந்தாலஜிகள் வெளியாகிவிட்டன. ஆனால் வெப்சிரீஸ்களைப் பொறுத்தவரை, அவை பெரும்பாலும் த்ரில்லர் என்ற ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் மட்டுமே சுருங்கிக் கிடக்கின்றன. அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு, ஒரு சமூக பிரச்னையைப் பேசும் வெப்சிரீஸாக Zee5 தளத்தில் வெளியாகியுள்ளது `அயலி' (Ayali).

1990-களின் முற்பகுதியில் புதுக்கோட்டையிலிருக்கும் ஒரு கிராமத்தில் பழைமைவாதம், பெண்ணடிமைத்தனம் போன்றவை மேலோங்கி காணப்படுகின்றன. பெண்கள் வயதுக்கு வந்தாலே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துவைக்கும் கலாசாரம் அங்கே இருக்கிறது. அதிலும் வயதுக்கு வந்த பெண்கள் ஊரைவிட்டு வெளியில்கூட செல்லக்கூடாது என்பதாகப் பல பிற்போக்கான ஊர் கட்டுப்பாடுகளும் அங்கே நிலவுகின்றன. இப்படியான ஒரு கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவி தமிழ்ச்செல்விக்குத் தான் டாக்டராக வேண்டும் என்பதுதான் கனவு. தன் கனவை நிறைவேற்றிக்கொள்ள, தான் வயதுக்கு வந்த விஷயத்தையே மறைத்துக்கொண்டு வாழ முற்படுகிறாள். இதனால் என்னென்ன சிக்கல்கள் வருகின்றன, அந்தக் கிராமத்திலிருக்கும் பல பெண்களின் நிலை என்ன, தமிழ்ச்செல்வி அந்த ஊரை மாற்றினாளா போன்ற கேள்விகளுக்கு நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகவும், அதே சமயம் சமூகப் பொறுப்புடனும் பதில் தருகிறது எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த சிரீஸ்.

Ayali Review
Ayali Review

'அயலி'யின் ஆன்மா தமிழ்ச்செல்வியாக அபி நக்ஷத்ரா. ஊர்க்கட்டுப்பாடுகளைத் தாண்டி, தான் விரும்பியதை அடையப் போராடும் பாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்திப் போகிறார். ஒரு கட்டத்தில் 'இந்த ஊர்ல இருக்கற எல்லாரும் முட்டா பசங்க' என்பதாக அவர் எடுக்கும் முடிவுகளும் செய்யும் செயல்களும் அப்ளாஸ் ரகம். அப்பாவைப் பாசத்தால் வீழ்த்துவது, அம்மாவிடம் உரிமையோடு சண்டையிட்டு காரியம் சாதிப்பது, ஊரின் தெய்வமான 'அயலி'யிடம் டீல் பேசுவது எனப் படு யதார்த்தமான தமிழ்ச்செல்வி பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அபி. இந்தத் தமிழுக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறார் மலையாளம் கலந்த தமிழில் வசீகரிக்கும் அனுமோள். முதலில் ஊர்க்கட்டுப்பாடு, கணவர் போன்றவற்றுக்குப் பயந்து, பின்னர் யதார்த்தம் உணர்ந்து மகளுக்கு ஆதரவாக நிற்கும் இடத்தில் நெகிழச் செய்கிறார்.

தமிழின் அப்பாவாக அருவி மதன், மைதிலியாக லவ்லின், ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா என அனைவரும் தங்களின் பாத்திரம் உணர்ந்து திரையை ஆக்கிரமிக்கின்றனர். ஊர்ப் பெரியவராக சிங்கம்புலி, அவரின் மகனாக லிங்கா, அந்த ஊரிலிருக்கும் பள்ளிக்கூடத்தின் உதவி தலைமை ஆசிரியராக டி.எஸ்.ஆர். தர்மராஜ் என மூவரும் வில்லன் கோட்டாவை டிக் செய்கின்றனர். அதிலும் பிற்போக்கான யோசனைகளை அள்ளிவீசி, கடுப்பேற்றும் வில்லனாக டி.எஸ்.ஆர் நல்லதொரு நடிப்பு. இவர்கள் தவிர யூடியூப் புகழ் ஜென்சன், பிரகதீஸ்வரன், நட்புக்காக லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில் வேல், பகவதி பெருமாள் என ஆங்காங்கே தெரிந்த முகங்கள்.

Ayali Review
Ayali Review
தமிழ்நாட்டின் பல கிராமங்களில் வெவ்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் பிரச்னையைச் சுற்றி கதையைக் கட்டமைத்த இயக்குநர் முத்து குமாருக்குப் பாராட்டுகள். கொஞ்சம் பிசகினாலும் பிரசாரத் தொனியாகிவிடும் கதைக்களத்தை முடிந்தவரை காமெடி கலந்த டிராமாவாக நீளச் செய்து கவனிக்க வைக்கிறார்.

பொதுவாக வெப்சீரிஸ் என்றாலே ஒரு படத்தின் கதையை இழுத்துச் சொல்வது என்ற தவறான இலக்கணத்தை விட்டொழித்து, ஒரு தொடருக்குத் தேவையான பாணியில் திரைக்கதை அமைத்த வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்து குமாருக்குப் பாராட்டுகள். அதை எங்கும் தொய்வில்லாமல் நகர்த்த, ஆங்காங்கே கதைக்குள்ளாகவே காமெடியைக் கலந்தது உறுத்தாத பார்முலா.

அதேபோல் "உன் அறிவுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்" எனத் தந்தை பெரியாரின் கருத்தை ஆழமாகப் பதிவு செய்ய இதே மூவர் கூட்டணியின் வசனங்களும் உதவியிருக்கின்றன. "உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?", "அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?" என ஆண்களை நோக்கி பெண்கள் வீசும் வசனங்கள் பல காலமாக குடும்பக் கட்டமைப்புக்குள் நீடிக்கும் பழைமைவாதத்துக்குக் கொடுக்கப்பட்ட சரியான சாட்டையடி!
Ayali Review
Ayali Review

இரண்டு கிழவிகள் இடைவிடாது சக்களத்தி சண்டை போட்டாலும் அவர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் நடக்கும் அந்த நெகிழ்வான உபசரிப்பு, மாதவிடாய் ரத்தத்தை மறைப்பதற்காக தமிழ்ச்செல்வி சிவப்பு மையுடன் ஊர் முழுக்க நடந்துபோவது, ஒரு கட்டத்தில் யதார்த்தம் புரிந்து மகளுக்கு அப்பாவே ஆதரவளிப்பது எனப் பல ரசிக்கத்தகுந்த காட்சிகள் அழகான ஹைக்கூக்களாகத் திரையில் விரிகின்றன. இவற்றைத் தாண்டி சிறுவயதிலேயே திருமணம் என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், அவர்களுக்குத் தவறு இழைத்துவிட்டு பின்னர் வருந்தும் அம்மாக்கள் எனப் பல காட்சிகள் நம்மைக் கலங்கச் செய்கின்றன.

அதே சமயம், தேவையில்லாமல் கதைக்கு வெளியே வரும் காமெடி காட்சிகள், லட்சுமிபிரியாவின் அந்த கேமியோ போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம். சுவாரஸ்யத்துக்காக காமெடி சேர்க்கப்பட்டாலும் ஒரு சில இடங்களில் சீரியஸான பிரச்னையாக ஒன்றைக் காட்டிவிட்டு அதனுடைய தாக்கத்தை, பதைபதைப்பை அடுத்த நொடியே காலிசெய்யும் வகையில் சிரிக்க வைத்திருப்பது சற்றே நெருடல்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு அந்தக் கிராமத்தின் வெயிலையையும், அதன் மனிதர்களின் இயல்பையும் யதார்த்தம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது. டைட்டில் சீக்குவென்ஸ் தொடங்கி, பல சீரியஸ் காட்சிகளின் தாக்கத்தைச் சிறப்பாகக் கடத்த உதவியிருக்கிறது ரேவாவின் இசை. எட்டு எபிசோடுகளையும் சுவாரஸ்யம் குறையாமல் கச்சிதமாகத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் கணேஷ் சிவா.

Ayali Review
Ayali Review
எடுத்துக்கொண்ட கருவுக்காகவும், அதைச் சமரசமின்றி காட்சிப்படுத்தியதற்காகவும் தமிழ் வெப்சிரீஸ்களில் மிக முக்கியமான ஓர் இடத்தை தன்னுடையது ஆக்கிக் கொள்கிறாள் இந்த `அயலி'.