பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

டெக்னாலஜி அடிமைகளா நாம்?

தொழில்நுட்பம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொழில்நுட்பம்

WEB SERIES

தொழில்நுட்பம் எப்போதுமே ஒரு மாயவலைதான். நாள்தோறும் அது தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. ஒருபுறம் அது நம் வாழ்க்கையை இன்னும் இலகுவாக்குகிறது. இன்னொருபுறம் ஆபத்துகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. இந்தச் சிக்கலை மிகுபுனைவு கலந்து நகைச்சுவை அச்சுறுத்தல் தொனியுடன் சொல்லும் ஆந்தாலஜி வெப்சீரிஸ்தான் ‘பிளாக் மிரர்.’

2011-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் பிளாக் மிரரின் முதல் எபிசோடான ‘தி நேஷனல் ஆந்தம்’, வெளியானபோது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்த சீசனில் வெளியான ‘ஒயிட் பியர்’ அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது. ஒரு பெண் செய்யும் அனைத்து விஷயங்களையும் தொடர்ச்சியாக மக்கள் வீடியோ கேமராக்களில் பதிவு செய்கிறார்கள். பின்பு ஒரு கட்டத்தில் அது அவளுக்கான தண்டனை என்பது தெரியவருகிறது. அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டு மீண்டும் இதே தண்டனை தொடர்கிறது.

Striking Vipers
Striking Vipers

ஒருவர் துன்பப்படுவதை யாரும் வீடியோ எடுப்பார்களா என சமூக வலைதளங்களில் எதிர்மறைக் கருத்துகள் எழாமல் இல்லை. கேரளாவில் உணவு திருடியதற்காக ஒருவரை அடித்தே கொன்று அதை வீடியோவும் எடுத்து அந்த எபிசோடை நிஜத்தில் மெய்ப்பித்துக் காட்டியது நம் சமூகம். தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறு வேறு லெவலில் வரிசைகட்டி அடிக்க, 2018-ம் ஆண்டு வித்தியாசமான முறையில் சினிமா ஒன்றை நெட்ஃபிளிக்ஸில் வெளியிட்டார்கள். நாம் தேர்வு செய்யும் வழிகளுக்கு ஏற்ப அந்த சினிமா விரியும். சிலருக்கு நாற்பது நிமிடங்களில் படம் முடிந்துவிடும். சிலருக்கோ இரண்டுமணி நேரம் ஆகும். இந்த ஆண்டு மூன்று எபிசோடு, மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் என மாஸ் காட்டியிருக்கிறது ‘பிளாக் மிரர்.’

Striking Vipers

டேனியும், கார்லும் வீடியோ கேமில் அதீத ஆர்வமுள்ளவர்கள். பதின்வயதில் அவர்கள் விளையாடிய ஒரு வீடியோ கேமின் மேம்பட்ட வெர்சன் நாற்பது வயதில் அவர்களுக்குக் கிடைக்கிறது. புதிதாகத் தரப்பட்டிருக்கும் கருவியின் மூலமாக எண்ணங்கள் வழியாகவே நாம் அந்த வீடியோ கேமை விளையாட முடியும். கிட்டத்தட்ட தொழில்நுட்ப ரீதியில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து வீடியோ கேம் கதாபாத்திரங் களாக விளையாடலாம். சமகால யதார்த்தமான கேம் அடிக்‌ஷனைப் பற்றிப் பேசுகிறது Striking Vipers. அவெஞ்சர்ஸ் படங்களில் ஃபேல்கனாக வரும் ஆன்டனி மேக்கி இதில் டேனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

Smithereens

செயலிகளின் மேல் நமக்கிருக்கும் ஆர்வத்தை இரட்டிப்பாக்குவது, அது தரும் நோட்டிஃபிகேஷன்கள்தான். நாம் பதிவிடும் புகைப்படம், கருத்து, ட்விட், வீடியோ என எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி யார் என்ன சொல்லியிருக்கிறார்கள் என மனித மனம் ஏங்கிக்கொண்டே இருக்கும். ‘சாலையில் பச்சை சிக்னலுக்காகக் காத்திருக்கும்போதுகூட வாட்ஸப் நோட்டிஃபிகேஷனை ஒரு பார்வை பார்க்க மனம் அலைபாயும். “வானத்தின் நிறம் ஊதாவாக மாறினாலும் சரி, யாரும் தலைநிமிர்ந்து பார்க்கப்போவதில்லை. எல்லோருக்கும் எல்லாமும் நோட்டிஃபிகேஷன் தான்’’ என்பார் இந்த எபிசோடில் வரும் கிறிஸ். இத்தகைய செயலியின் மோகத்தால் தன் வாழ்க்கையை இழந்த கிறிஸ், அந்த நிறுவனத்தைப் பழிவாங்குவதுதான் Smithereens.

Rachel, Jack and Ashley Too

சர்வதேச அரங்கில் அசத்தல் பாப் பாடகியாக வலம்வருகிறார் ஆஷ்லி. பிரபலங்களை வைத்து இன்னும் பணம் அறுவடை செய்ய நினைக்கும் அவரது குழு, அவரின் மூளையைப் பிரதி எடுத்து, செயற்கை நுண்ணறிவு பொம்மை ஒன்றை உருவாக்குகிறார்கள். ரேச்சல் என்னும் சிறுமிக்கோ எல்லாமே ஆஷ்லிதான்.

டெக்னாலஜி அடிமைகளா நாம்?

`ஆஷ்லி டூ’ நுண்ணறிவு பொம்மையைப் பிறந்தநாள் பரிசாகப் பெறுகிறாள் அந்தச் சிறுமி. மர்மமான முறையில் பாடகி ஆஷ்லி தன் நினைவுகளை இழந்து கோமாவுக்குச் செல்கிறார். ஆஷ்லியின் மூளையை வைத்து, அவர் சிந்தித்த சில பாடல்களை, அவரின் குரலிலேயே வெளியிடத் திட்டமிடுகிறது விளம்பரக் குழு. அதை எப்படி ரேச்சலும், ஆஷ்லி பொம்மையும் முறியடிக்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை. ஆஷ்லியாக பாப் உலக பிரபலம் மிலி சைரஸ் நடித்திருக்கிறார்.

டெக்னாலஜி அடிமைகளா நாம்?

மனிதனின் அடுத்தகட்ட நகர்வை எளிதாக்க உருவான தொழில்நுட்பம், தற்போது அவன் மன அழுக்காறுகளை மறைத்து எடுத்துச்செல்ல ஒரு கருவியாகப் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. உலகெங்கிலும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரை எழுதியவர் சார்லி ப்ரூக்கர். 24 எபிசோடுகள், ஒரு சினிமா என எல்லாமே வெவ்வேறு கதைகள். ஆனால், ஒவ்வொரு கதையும் தொழில்நுட்பம் மீதான உங்களின் பார்வையை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.