அரசால் ஒழித்துக்கட்டப்படுகிறதா பி.எஸ்.என்.எல்? - அதிர்வை ஏற்படுத்தும் ‘முடிவுறாத அழைப்பு’ ஆவணப்படம்!

உலக அளவில் 2,600 மில்லியன் டாலராக இருக்கும் தொலைத்தொடர்புத்துறைகளின் வர்த்தகம், இன்னும் சில ஆண்டுகளில் 3,800 மில்லியன் டாலராக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
‘பி.எஸ்.என்.எல் முடிவுறாத அழைப்பு’ (BSNL - The Unending Ringing) எனும் ஆவணப்படம், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள், பொது மக்களை அதிரவைத்திருக்கிறது
தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட இந்த ஆவணப்படம், “உலகத்திலேயே இரண்டாவது அதிக தொலைத்தொடர்பு பயனர்களைக்கொண்ட நாடு இந்தியா. ஆனால், இந்திய தொலைத்தொடர்பு கட்டமைப்பு பெருவாரியாக தனியாரிடம்தான் இருக்கிறது. இருக்கிறதா... கொடுக்கப்பட்டதா?” என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. சுமார் 30 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம், மக்கள் ஏன் பி.எஸ்.என்.எல்-லிலிருந்து தனியார் சேவைக்கு மாறும் கட்டாயத்துக்கு ஆளானார்கள்... பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி சேவை தரப்படாமல் இருப்பது ஏன்... அதன் சேவை முடிவுக்கு வந்தால் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்தே அதிகம் பேசுகிறது.

இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட நோக்கம் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர்.பத்ரியிடம் கேட்டபோது, “பணக்காரர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்றிய பெருமை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு உண்டு. அரசுக்கு பெரும் வருவாய் தருகிற நிறுவனமாகவும் பி.எஸ்.என்.எல் இருந்தது. ஆனால், 2014-ல் பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்குவித்த அரசு, வேண்டுமென்றே பி.எஸ்.என்.எல்-ஐ ஒழித்துக்கட்டும் வேலையையும் செய்தது. அதன் விளைவாகவே தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவை எட்டிய பிறகும், பி.எஸ்.என்.எல் இன்றும் தன் பயனாளர்களுக்கு 4ஜி சேவையைக்கூட வழங்க முடியாமல் திணறிவருகிறது.
உலக அளவில் 2,600 மில்லியன் டாலராக இருக்கும் தொலைத்தொடர்புத்துறைகளின் வர்த்தகம், இன்னும் சில ஆண்டுகளில் 3,800 மில்லியன் டாலராக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒன்றிய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கையால், ‘தொலைத்தொடர்பு மக்களுக்கான சேவை’ என்னும் நிலை மாறி, வர்த்தகம் என்னும் கண்ணோட்டம் மேலோங்கிவிட்டது. எனவே, தனியார் நிறுவனங்களுக்குத் தன் முழு ஆதரவை அளித்து, அதன் மூலம் மறைமுகமாகப் பெரும் லாபம் அடைந்துவருகிறது ஆளும் பா.ஜ.க.
4ஜி மறுத்தது போதாது என்று ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ (National Monetisation Pipeline) என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் சேவை மற்றும் பராமரிப்பைத் தனியாருக்கு வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல் இருப்பதால்தான், தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்கள் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கின்றன. கூடிய விரைவில் பி.எஸ்.என்.எல்-க்கு மொத்தமாகச் சமாதி கட்டிவிட்டு, இணைய இணைப்பு, அழைப்புகள், குறுஞ்செய்தி என அனைத்துக்கும் தாறுமாறான கட்டணத்தைத் தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும். எனவே, அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஆவணப்படம்” என்றார்.
பி.எஸ்.என்.எல் எம்ப்ளாயீஸ் யூனியனின் மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணனோ, “தமிழ்நாட்டில் செல்போன் சேவை அறிமுகமானபோது நீலகிரி மலைக் கிராம மக்கள் தங்களுக்கும் இந்தச் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். தனியார் நிறுவனங்களெல்லாம், ‘சாலை வசதி மோசம் என்பதால், இங்கே டவர் அமைக்க அதிகம் செலவாகும். மக்கள்தொகை குறைவு... எனவே லாபமும் இருக்காது’ என்று கைவிரித்துவிட்டன. ஆனால், பி.எஸ்.என்.எல் மட்டுமே லாப நோக்கமின்றி நீலகிரி பகாசூரன் மலையில் டவர் அமைத்துக்கொடுத்தது. இப்படி இந்தியா முழுக்க லட்சக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. பி.எஸ்.என்.எல் நிறுவனம் அழிந்தால், இந்த மக்கள் 20 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடுவார்கள்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவிலுள்ள 70,000 பி.எஸ்.என்.எல் டவர்களில் 49,100 டவர்கள் 4ஜி சேவைக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வசதிகொண்டவை. இதற்கு அரசு வெறும் 1,500 கோடி ரூபாய் செலவு செய்தால் போதும். ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூச்சை நிறுத்தவே இந்த அரசு விரும்புகிறது” என்றார் கோபமாக.

இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். “எந்த ஒரு நிறுவனமும் லாபம் ஈட்டினால் மட்டுமே அதன் வளர்ச்சி மேம்படும். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்குறைப்பு, காலியாகக் கிடக்கும் கட்டடங்களை வாடகைக்குவிடுவது போன்றவற்றின் மூலம் கடந்த சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல்-ன் வருவாய் அதிகரித்திருக்கிறது. அதன் வளர்ச்சியை மேம்படுத்தும்விதமாக தற்போது ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறது மத்திய அரசு. பி.எஸ்.என்.எல் சேவை எதுவும் தனியாருக்கு விற்கப்படாது என்பதைத் தெளிவாக நாடாளுமன்றத்தில் விளக்கியிருக்கிறோம். இருப்பினும், கம்யூனிஸ்ட்டுகள் வதந்தியைப் பரப்புகின்றனர். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இன்னும் சில மாதங்களில் பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி சேவை வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 5ஜி சேவையும் வழங்கப்படும்” என்றார்.
அரசுக்கென ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் இல்லாமல் போனால் என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது!