தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

புட்டுப்புட்டு வைக்கும் ‘புர்கா’!

புர்கா’ திரைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
News
புர்கா’ திரைப்படம்

கலவரத்தில் கத்திக்குத்து வாங்கும் கதை நாயகன் (இளவரசன்), உயிருக்குப் போராடும் நிலையில், நாயகியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான்.

மதம், குடும்பம் மற்றும் கலாசாரம் என்கிற பலவிதமான போர்வைகளால் தினம்தினம் செத்துப்பிழைக்கிறாள் பெண். அனைத்து மதங்களிலும் இதுதான் நிதர்சனம். இந்நிலையில், ‘ஆஹா ஓடிடி’ தளத்தில் கடந்த வாரத்தில் வெளியாகியிருக்கும் ‘புர்கா’ திரைப்படம், இஸ்லாம் மதத் தினரிடையே எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. ஆனால், படம் பேசியிருப்பது என்னவோ... எதார்த்தம்தான்!

முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் திருமணம்; ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்குள் ஒரே வாரத்துக் குள்ளாக கணவனின் மரணம்; மதத்தின்படி `இத்தாத்’ எனும் சடங்கு... சிக்கித் தவிக்கிறாள் 21 வயது இளம்பெண்.

அம்மாவின் எதிர்ப்பை மீறி, அப்பாவின் ஆதரவுடன் ப்ளஸ்டூவுக்குப் பிறகு நர்ஸிங் படித்திருப்பவள் நாயகி (மிர்னா). அங்கேயே ஆரம்பித்துவிடுகிறது அவளுடைய முற்போக்குப் பாய்ச்சல். ஆனாலும் கணவன் இறந்தபிறகு ‘இத்தாத்’ என்கிற பெயரில், நான்கு மாதங்களுக்கு வீட்டை விட்டே வெளியில் வராமல் வாழவேண்டிய கட்டாயம். கணவனை இழந்த இளம்பெண், நான்கு மாதங்கள் வரை வெளி ஆண்களைப் பார்க்கக்கூடாது. இடைப்பட்ட காலத் தில் பெண் கருவுற்றால், குழந்தைக்குத் தகப்பன் யாரென்பதில் குழப்பம் வரும் என்பதால்தான்... ‘இத்தாத்’. இது, நவீனயுகத்திலும் உயிரோடுதான் இருக்கிறது.

புர்கா’ திரைப்படம்
புர்கா’ திரைப்படம்

கலவரத்தில் கத்திக்குத்து வாங்கும் கதை நாயகன் (இளவரசன்), உயிருக்குப் போராடும் நிலையில், நாயகியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். ஆரம்பத்தில் மறுக்கும் நாயகி, பிறகு முதலுதவி சிகிச்சையளித்துக் காப்பாற்றும் அளவுக்கு மனிதாபிமானம் காட்டுகிறாள். நாள் முழுக்க அதேவீட்டில் நாயகியுடன் வாழவேண்டிய நிர்பந்தம். உடலில் காயம்பட்டவனுக்கும், மனதால் காயப்பட்டவளுக் கும் இடையான உரையாடலே முழுப் படம். மதம், எதார்த்தம் என்று பற்பல விவாதங்களை ஒவ்வொன்றாக போகிறபோக்கில் எடுத்துவைத்து நாயகியைச் சிந்திக்க வைக்கிறான். வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பதால் மனதளவில் சோர்வுற்றிருக்கும் நாயகிக்கு, மெள்ள காதல் எட்டிப்பார்க்கிறது... அடுத்து?

வீர வசனமெல்லாம் பேசாமல், படு எதார்த்தமாக பெண்ணின் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தி யிருக்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம்.காதல் கொள்வதும், சுதந்திரமாக மூச்சுவிடுவதும் மனிதனின் அடிப்படையான உணர்வுகள். ஆனால், மூச்சுகூட விட முடியாமல் புர்கா அணிந்துகொண்டு, கொளுத்தும் வெயிலாக இருந்தாலும் பெண் நடமாட வேண்டும். முகமே வெளி அடையாளம். ஆனால், மதத்தின் பெயரால் அதுவும் மறைக்கப்படுகிறது. அந்த ‘புர்கா’ என்கிற ஒற்றை வார்த்தையைத் தலைப்பாக்கி, மொத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

எல்லா மதங்களிலும் பெண்களுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரான விஷயங்கள் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன. இந்து மதத்தில் இருக்கும் இத்தகைய பிற்போக்குத் தனங்களை அவ்வப்போது திரைப்படங்கள் கேள்வி கேட்கத்தான் செய்கின்றன, சமீபத்தில் வெளியான ‘அயோத்தி’ படம்போல! இப்போது, இஸ்லாத்திலிருக்கும் பெண்ணடிமைத் தனத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது புர்கா!