பள்ளி, கல்லூரி நாள்களை மையப்படுத்தி தமிழில் நிறையவே படைப்புகள் வந்திருக்கின்றன. பெரும்பாலும் காமெடி அல்லது ரொமான்ஸ் ஜானரில் அதிக ரிஸ்க் எடுக்காத கதைகளாகவே அவை இருந்திருக்கின்றன. அந்தப் பழங்கால பார்முலாவைத் தூசி தட்டி ஓ.டி.டி-க்கும் பரவவிட்டால் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் `எங்க ஹாஸ்டல்' (Engga Hostel) வெப்சிரீஸ் ரெடி.
பொறியியல் கல்லூரிக்குக் கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், கூடவே ஜாலியாக இருக்கவேண்டும் என்ற திட்டத்தோடும் வரும் முதலாமாண்டு மாணவர்கள் ஹாஸ்டல் கூடாரத்தில் சந்திக்கும் ரேகிங் பிரச்னைகள், முதல் காதல், ஏமாற்று வேலைகள் எனப் பலவற்றையும் கலந்துகட்டி ஐந்து எபிசோடுகளாகச் சொல்லியிருக்கிறது இந்தத் தொடர்.

ஜெய வீர பாண்டியன், யுவராஜ், அஹானா, ராஜ திலகம், அஜய், செந்தில் என ஆறு கதாபாத்திரங்களைப் பிரதானப்படுத்தி நகரும் கதையில் காட்சிகளில் காமெடி இருக்கிறதோ இல்லையோ, மருந்துக்கும் புதிதாக எதுவுமே இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருந்திருக்கிறார்கள் போல. தற்போதெல்லாம் கல்லூரி வளாகங்கள் எப்படியிருக்கின்றன, அதிலும் பொறியியல் மாணவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் யோசிக்காமல், இவ்வகை கல்லூரிகள் குறித்து சினிமாவில் இதுவரை என்னவெல்லாம் காட்சிகளாகக் காட்டப்பட்டிருக்கின்றனவோ அவற்றை மட்டுமே ரெஃபரன்ஸ் புத்தகங்களாக வைத்து மாற்றி மாற்றி ஜெராக்ஸ் போட்டிருக்கிறார்கள்.
சித்தப்புவாக அவினாஷ் ரமேஷ், அஜய்யாக சச்சின் நாச்சியப்பன், அஹானாவாக சம்யுக்தா விஸ்வநாதன், ராஜதிலகமாக சரண்யா ரவிச்சந்திரன், செந்திலாக கௌதம் ராஜ், ஜெய வீரபாண்டியன் என்னும் பாண்டியாக 'பரிதாபங்கள்' டிராவிட் செல்வம் என மாணவர் படை இருக்க, இவர்களுடன் காலேஜ் பணியாளர்களாக லொள்ளு சபா சேஸூ, ராஜ் கிருஷ்ணன் எனச் சிலர் அவ்வப்போது அட்டெண்டன்ஸ் போடுகின்றனர். இவர்களில் நமக்குப் பரிச்சயப்பட்ட முகங்களான டிராவிட்டும், சரண்யாவும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கின்றனர். இவர்களைத் தாண்டி நடிப்பில் நல்ல பர்சன்டேஜ் வாங்கியிருப்பது அஜய்யாக வரும் சச்சின் மட்டுமே. மற்றவர்கள், ஒன்று பார்டரில் பாஸாகி இருக்கிறார்கள், அல்லது கூடுதலாகச் சொதப்பி அரியர்ஸ் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் சதீஷ் சந்திரசேகர், இதே பிரைம் வீடியோவில் வெளியாகி மூன்று சீசன்கள் கடந்த இந்தி `ஹாஸ்டல் டேஸ்' வெப்சீரிஸைக் கொஞ்சமே கொஞ்சம் தமிழ்ப்படுத்தி அப்படியே இறக்கியிருக்கிறார். ஆனால், சுமாரான காமெடிகள் சிரிக்க வைக்கவும் இல்லை, கிச்சு கிச்சு மூட்டவும் இல்லை.
சித்தப்பு, சாங், அஜய் என ஒரு சில கதாபாத்திரங்களின் ஸ்கெட்ச் மட்டும் ரசிக்க வைக்கிறது. அதைத் தாண்டி 30 நிமிட எபிசோடுகளில் பெரும்பாலும் சுவாரஸ்யமற்ற காட்சிகளே நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, அடல்ட் வசனங்கள் அதிகம் இடம்பெற்ற இந்தி வெர்ஷனிலிருந்து சற்றே காரம் குறைத்து தமிழுக்கு ஏற்றவாறு எடுக்கிறேன் என்ற முயற்சியால் சில இடங்கள் மட்டுமே சிரிக்க வைக்கின்றன.
ஹாஸ்டலில் சேரும்போது வரும் ரேகிங், ரூம் பிரச்னைகள், புகழால் வரும் சிக்கல்கள், போட்டி, பொறாமைகள், காதலுக்கு உதவுவதாக நண்பர்கள் செய்யும் அலப்பறைகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பரீட்சைக்கு முந்தைய இரவில் நடக்கும் கூத்துகள் என சுவாரஸ்யமான ஐடியாக்களை மையமாகக் கொண்டே எபிசோடுகளும் நகர்கின்றன. ஆனால், புதிதாகக் காட்சிகள் எதையும் யோசிக்காததுதான் சிக்கல். 2கே கிட்ஸின் கல்லூரி உலகம் எப்படியிருக்கிறது என்று ஒருநாள் இண்டஸ்டீரியல் விசிட் அடித்திருந்தால்கூட நச்சென நான்கு காட்சிகள் கிடைத்திருக்குமே என்ற அங்கலாய்ப்புதான். 'Engineering in One Night' என்று கிரியேட்டிவ்வாக புத்தகப் பெயர்கள் எல்லாம் யோசித்தவர்கள் சற்று ஸ்க்ரிப்ட்டுக்கும் அதே ஹாஸ்டலிலாவது ரூம் போட்டு யோசித்திருக்கலாம்.

ஷோவின் பிரதான பிரச்னைகளில் மற்றொன்று முழு உருவம் கொடுக்கப்படாத அதன் கதாபாத்திரங்கள்தான். எல்லோருக்கும் பின்கதை, விதவிதமான வாழ்க்கைமுறைகள் இருந்தாலும், அவை பிரதான கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், எல்லோரையும் பற்றிப் பேசுகிறேன் எனக் காட்சிகள், ஒவ்வொரு கதாபாத்திரங்களாகத் தாவிக்கொண்டே இருப்பதால் எதிலுமே ஆழமில்லாத அணுகுமுறையே மிஞ்சுகிறது.
2கே கிட்ஸின் கல்லூரி வாழ்க்கை எப்படியிருக்கிறது என்று சமரசமில்லாமல் காட்ட முற்பட்டு, பின்னர் பார்முலாவாகச் சில காட்சிகள் சேர்த்து... மொத்தத்தில் படு வீக்கான திரைக்கதையால் `இது எங்க ஹாஸ்டல் மாதிரி இல்லையே' எனச் சொல்லவைத்திருக்கிறது இந்த முதல் சீசன். பார்த்துப் பண்ணுங்க பாய்ஸ்!