சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“நாங்க எல்லாரும் ஒரே கேங்!”

கனா காணும் காலங்கள் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
கனா காணும் காலங்கள் டீம்

கடமை... கண்ணியம்... கட்டுப்பாடு என காலேஜ் முடித்துவிட்டு பேட்டியின் இடையில் என்ட்ரி கொடுத்தார், அக்‌ஷதா.

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`ஒ ஒ ஓ கோ லே லே லே

ஒ ஒ ஓ கோ லே லே லே

ஒ ஒ ஓ லே லே லே...'

என்னடா இது ஓமகசீயா மாதிரி புரியாத வரியா இருக்கேன்னு பார்க்குறீங்களா... இந்தப் பல்லவியைச் சொன்னா சரியா கண்டுபிடிச்சுடுவீங்கன்னு நினைக்கிறேன்...

`கனவுகள் காணும் வயசாச்சு...

மனசுல ஆசை முளைச்சாச்சு...

கனவுகள் காணும் வயசாச்சு...

இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு...'

ஹாங்... கண்டுபிடுச்சிட்டீங்களா... `கனா காணும் காலங்கள்' டைட்டில் சாங்தான்! இப்ப விஜய் ஹாட்ஸ்டார் ஆப்பில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் `கனா காணும் காலங்கள்' வெப் சீரீஸ் மூலமா இந்தப் பாட்டை மறுபடி கேட்கிறோம்... அது சரி, இப்ப எதுக்கு இந்தப் பாட்டுன்னுதானே யோசிக்கிறீங்க... `இந்தப் பாட்டை விகடன் அலுவலகத்தில் 120 டெசிபலில் அலறவிட்டாதான் எங்க வலது காலை உங்க ஆபீஸில் வைப்போம் பாஸ்’னு கேட்டதால பிளே பண்ணினோம்... 12 வலது கால்வெச்சு என்ட்ரி கொடுத்தாங்க `கனா காணும் காலங்கள்’ ஸ்டூடன்ட்ஸ் கேங்!

(பாதிப் பேர் வழக்கம்போல, `உடம்பு சரியில்லை...’, `தலைவலி’ன்னு ஸ்கூலை கட் அடிக்கிற மாதிரி செய்தார்கள். டீச்சர்ஸும் இதில் விதிவிலக்கில்லை... ஃப்ரெண்ட்லியான ஜெரி டீச்சராக நடிக்கும் இர்ஃபானும் காய்ச்சலைக் காரணம் காட்டி நம் ஷூட்டிங்கை கட் அடிச்சுட்டார்!)

“நாங்க எல்லாரும் ஒரே கேங்!”

`பிரேமம்’ மலர் மிஸ்ஸுக்குப் பிறகு ரொம்ப ஃபேமஸான மலர் மிஸ்தான் நம்ம சங்கீதா. விஜே-வாக நமக்குப் பரிச்சயமான இவங்க அழகான டீச்சரா மக்கள் மனசுல இடம் பிடிச்சிருக்காங்க. சாய் பல்லவி ரசிகரான நம்ம கேமராமேன் இந்த மலர் மிஸ்ஸைப் பார்த்து மெர்சலாகி, பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தார். ``டேய்... என்ன நடக்குது இங்க நான் வந்துட்டேண்டா'' என `வில்லு’ படத்தில் வடிவேலு பேசும் டயலாக்குடன் என்ட்ரி கொடுத்தார், சிறகுகள் ஸ்கூல் கரஸ்பான்டெண்ட் குணா. பாரத் என்பதுதான் இவர் பெயர். ஆனால், குணா என்றால்தான் சட்டெனத் தெரியும். அந்த அளவுக்கு குணா அவருடைய சொந்த ஊர் மதுரையில் மட்டுமில்லை சென்னையிலும் மாஸூ!

`சரி, நாம ஜாலியா தீபாவளி செலிபிரேஷனை ஆரம்பிப்போமா' என்றதும், டபுள் தம்ஸ்அப் வர, தொடர்ந்தோம்.

உட்கார்ந்திருந்த ஸ்டூடன்ட் கேங்கிலிருந்து ஒருவரை மட்டும் கையைப் பிடித்து வெளியே இழுத்தோம். ``என்னைக் கையப்புடிச்சு இழுத்தியா... என்னைக் கையப்புடிச்சு இழுத்தியா?'' என வடிவேலு மாதிரி ஒரே டயலாக்கைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இப்ப அவர் யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே... ஒரே டயலாக்கை மூச்சுப்பிடிச்சு மறுபடி மறுபடி பேசுறது நம்ம கல்யாணியால மட்டும்தாங்க முடியும். யாரு கல்யாணின்னு முழிக்கிறீங்க போல... இந்த சீரீஸில் ஸ்வேதாவாக நீங்க இப்போதுதான் கல்யாணியைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கீங்க. ஆனா, நடிக்க வர்றதுக்கு முன்னாடியே அவர் விஜே-வாக்கும். அதுவும் இப்ப அவர் விகடன் ஃப்ரீலான்ஸ் விஜேவாக்கும்! அவர்கிட்ட இந்த 11 பேரையும் உட்காரவெச்சு கேள்வி கேட்கும் பொறுப்பைக் கொடுத்தோம். அவருடன் ஆங்கர் மாதவனும் இணைந்துகொள்ள, நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியது.

முதலாவதாக, செல்ஃப் இன்ட்ரோ. அட்டெண்டன்ஸ் வரிசையில் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள்.

``பாஸு... நான் ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணட்டுமா?'' என்று கடகடவென பேச ஆரம்பித்தார் ஏகன். எவண்டா அதுன்னு யோசிக்கிறீங்களா... முதல் ஆளா முந்திரிக்கொட்டை மாதிரி முந்தும்போதே இது கண்டிப்பா சிஎம் @ செல்லமுத்துவாகத்தான் இருக்கும்னு சரியா கண்டுபிடிச்சவங்க மட்டும் என்கூட ஹைபை கொடுத்துக்கோங்க!

“நாங்க எல்லாரும் ஒரே கேங்!”

```சின்ன வயசுல இருந்தே மீடியா ஆர்வம் அதிகம். எங்க ஃபேமிலியே சரியான மூவி பஃப். எந்தப் படத்தையும் மிஸ் பண்ணாம பார்த்துடுவோம். பிளாக்‌ஷீப் மூலமா நடிகனாக அறிமுகமானேன். அடுத்தகட்டமா `கனா காணும் காலங்கள்' வெப் சீரீஸில் செல்லமுத்துவாக உங்க மனசுல இடம் பிடிச்சிருக்கேன்'' எனப் பக்காவாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

வெப் சீரீஸில் ஹரிதா கேரக்டரில் டாம் பாயாக நமக்குப் பரிச்சயமான தீபிகா, தாவணியில் பக்கா குடும்பப் பெண் தோற்றத்தில் இருந்தார். அவரது தலைமுடியை குறுகுறுவெனப் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தவர், ``ஏங்க டி.வி-யில் நீங்க பார்க்கிறதுதான் விக். இது என் ஒரிஜினல் ஹேர். இது அது இல்லை'' எனப் புன்னகைத்தவாறு தொடர்ந்தார். ``எல்லாரும் பல போராட்டத்துக்குப் பிறகுதான் ஒரு இடத்தில் வந்து உட்காருவாங்க. அப்படித்தான் நானும் இன்னைக்கு இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கேன். இந்த தீபாவளி விகடனில் பேட்டி கொடுக்கிறேன். அடுத்த தீபாவளிக்கு இன்னும் பெருசா சாதனை பண்ணிட்டு பேட்டி கொடுக்க ஆசைப்படுறேன்'' என்றதும், ``நிச்சயம் உன் கனவு பலிக்கும்டீ'' என தட்டிக் கொடுத்துவிட்டு, தேஜா வெங்கடேஷ் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

``டிக்டாக் பலருக்கும் வாழ்க்கை கொடுத்துருக்கு. அந்தத் தளத்தை பயன்படுத்தித்தான் நானும் நடிகையானேன்'' என்று சிரித்தவர், ``இந்த வெப் சீரீஸில் நந்தினியாக என்னைக் கொண்டாடுற அத்தனை ரசிகர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்'' என்றார்.

``ரொம்ப நேரமா விளையாடிட்டு இருக்கீங்க... நீங்க சொல்லுங்க'' என்று கல்யாணி உசுப்பேத்திவிட, துறுதுறுவென உட்கார்ந்த இடத்திலேயே ஆடிக்கொண்டு பேச ஆரம்பித்தார் ப்ரீத்திகா. `` `கனா காணும் காலங்களி’ல் என்னை ப்ரீத்தியாக பார்த்துருப்பீங்க. பார்க்க ரொம்ப குட்டியா இருக்கிறதால பலரும் நிஜமாகவே நான் ஸ்கூல் ஸ்டூடன்ட்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, உண்மையில் நான் பெரிய பொண்ணுதாங்க. மேக்கப் ஆர்ட்டிஸ்ட், மாடல்னு மல்டி டாஸ்கிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். இந்த வெப் சீரீஸ் மூலமா நடிகையாக புது அவதாரம் எடுத்திருக்கேன். சரி, நானே என்னைப் பற்றி புகழ்ந்தா நல்லா இருக்காது. என் அண்ணன்கிட்ட கேளுங்க'' என `கனா காணும் காலங்கள்’ வெப் சீரீஸில் கலையாக நடிக்கும் அரவிந்த் சேஜூவை கைகாட்ட, ``இவ எப்பவுமே இப்படித்தான்'' என்றவர், செல்லமாக ப்ரீத்திகாவின் தலையில் கொட்டிவிட்டு, தன்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“நாங்க எல்லாரும் ஒரே கேங்!”

``விஜே-வாக லோக்கல் சேனலில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். நடிக்கணும் என்கிற ஆசையினால எல்லார் மாதிரியும் ஊரிலிருந்து சென்னைக்கு வந்தேன். இங்க பல போராட்டத்துக்குப் பிறகு நடிகனாக மக்களிடையே பரிச்சயமானேன். இப்ப இந்தத் தொடர்ல `கலை'யாக, எல்லாருக்கும் பிடித்தமான பையனாக இருக்கேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தவிர, பிளாக்‌ஷீப் யூடியூப் தளத்திலும் தொடர்ந்து பயணிச்சிட்டு இருக்கேன்'' என்றதும், ``தலைவா, இங்கேயும் புருவத்தைத் தூக்கி சீரியஸா பேச ஆரம்பிச்சுடாதீங்க'' என சேஜூவைக் கலாய்த்துவிட்டு சத்யநாராயணன் பேச ஆரம்பித்தார்.

``என்னடா `காலா' வேட்டி போட்டுக்கிட்டு வந்து எல்லாரையும் கலாய்ச்சுக்கிட்டு இருக்கானேன்னு நினைக்காதீங்க. அதுதான் என் முகத்துக்கு செட்டாகும். கனாவில் என்னை கோபியாக, எப்பவும் அடி வாங்குற பையனாகத்தானே பார்த்துருக்கீங்க... ஒருநாள் எல்லாமும் மாறும்'' என தம் கட்டிப் பேசியவரை பர்வேஷ் (விக்கி), கீர்த்தன் (வசந்த்), ஆஷிக் (கிச்சா) கலாய்க்க, ``சரி, சரி, விடுங்கடா'' என கேங் லீடர் கெளதமாக நடிக்கும் ராஜ வெற்றி பிரபு சமாதானம் செய்துவிட்டுப் பேசினார்.

``நம்ம வீட்டில் டி.வி பார்க்கும்போது நாம எப்ப இப்படி டி.வி-யில் வருவோம்னு சிலருக்குத் தோணுமே அப்படித்தான் எனக்கும் தோணுச்சு. ஆசையும், கனவும், அதற்கான தேடலும் இருந்தது. அதற்கான பலன்தான் இப்ப நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். தொடர்ந்து, மக்களை என்டர்டெயின் பண்ணணும்... அவ்வளவுதான்'' என்றார்.

கடமை... கண்ணியம்... கட்டுப்பாடு என காலேஜ் முடித்துவிட்டு பேட்டியின் இடையில் என்ட்ரி கொடுத்தார், அக்‌ஷதா. (அதாங்க... நம்ம ஸ்டெல்லா) எல்லோரும் தீபாவளி மோடில் வேட்டி, சட்டை, சேலை, தாவணி என டிரெடிஷனல் வைபில் இருக்க இவர் மட்டும் ஜீன்ஸ், டி-சர்ட் என மார்டன் லுக்கில் கூட்டத்தினுள் ஐக்கியமானார். ``என்னைப் பற்றி நீங்க கேட்கலைன்னாலும் நானே சொல்லுவேன்'' எனத் தொடர்ந்து பேசினார். ``சின்ன வயசுல இருந்தே நடிக்கப் பிடிக்கும். தொடர்ந்து ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிச்சதும் இந்த வாய்ப்பு கிடைக்க, கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டேன்'' என்றார்.

அறிமுகம் முடிந்ததும், ``விளையாடலாமா’' என்றோம். அதுவரை சோர்வாக இருந்தவர்கள் எனர்ஜி டிரிங்க் குடித்ததுபோல சட்டென உற்சாகமாகப் போட்டிக்குத் தயாரானார்கள்.

அந்த வெப் சீரீஸில் ரெண்டு கேங்காகச் சுற்றிக் கொண்டிருப்பதைப்போல இங்கேயும் `பழைய பசங்க கேங்’, `புது பசங்க கேங்’ என ரெண்டு கேங்காகப் பிரிச்சோம். அதே கெளதம் கேங், கலை கேங். எப்படி அந்த சீரீஸில் ரெண்டு கேங்கும் அடிச்சுப்பாங்களோ அப்படியே இங்கேயும் அடிச்சுக்க ரெடியானாங்க.

முதலில் டங் ட்விஸ்டர்... `ஓடுற நரியில ஒரு நரி கிழ நரி... கிழ நரி முதுகுல ஒரு மயிர் நரை மயிர்' என்பதை குலோப் ஜாமூனை வாயில்வைத்தவாறு சொல்ல வேண்டும். (இந்த கேமை ஒலிம்பிக்கிலேயே கொண்டு வரலாம்னு நீங்க யோசிக்கிறது எங்களுக்குப் புரியுது) பாதிப் பேர் பேச ட்ரை பண்ணி வெற்றிகரமாகப் பேசிவிட்டுச் சென்றார்கள். சிலர் முழு குலோப் ஜாமூனைப் பாதியாக சாப்பிட்டுவிட்டு நம்மை ஏமாற்ற நினைத்தார்கள். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு அவர்களையும் கையும் களவுமாகப் பிடித்து போட்டியிலிருந்து வெளியேற்றினோம். இறுதியாக, ஆஷிக்கும் அக்‌ஷதாவும் வெற்றி வாகை சூட்டினார்கள்.

அடுத்ததாக, ஒவ்வொரு கேங்கிலிருந்தும் இருவரை வரவழைத்தோம். இருவரில் ஒருவரிடம் என்ன படம் என்று சொல்வோம். அவர் அதை வரைந்து காட்டுவார். இன்னொருவர், அவர் வரைந்தது யார் என்பதைச் சரியாகச் சொல்ல வேண்டும். அரவிந்த் (கலை) அழகாக வரைந்து அவர் டீமுக்கு பாயின்ட் எடுத்துக் கொடுக்க, இந்தப் போட்டியில் கலை கேங் வென்றது. இறுதியில், இரண்டு டீமும் சரிசமமாக வெற்றி பெற்றார்கள்.

``நாங்க சீரீஸில் மட்டும்தான் ரெண்டு கேங். நிஜத்தில் எல்லாரும் ஒரே கேங். `கனா கேங்’ '' என `நண்பன்’ படத்துக்கே டஃப் கொடுத்ததுபோல எமோஷனலாகப் பேசினார்கள். ``இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்'' என சோகமான மோடில் இருந்த கேமராமேன்கள் `இத்துடன் போட்டி நிறைவடைந்தது' என்றதும், 1,000 வாட்ஸ் பல்புபோல பிரகாசமானார்கள். புத்தாடை, பட்டாசு என தீபாவளியை `கனா காணும் காலங்கள்' டீமுடன் ஜாலியாக செலிபிரேட் செய்துவிட்டு எல்லோருக்கும் ஒரு வெஜ் ரோலை தீபாவளிப் பரிசாகக் கையில் கொடுத்து வழியனுப்பிவைத்தோம்.